இந்தியாவில் பிரம்மாண்டமான சினிமா என்பதற்கு இதுவரை இருந்த இலக்கணத்தை இரண்டே படங்களில் மாற்றிக் காண்பித்திருக்கும் இயக்குநர் ராஜமவுலியின் படம் ஆர்.ஆர்.ஆர். சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருக்கவேண்டிய இப்படம் கொரோனாவின் தாக்கத்தால் வெளியாவதில் தாமதமாகிவிட்டதாக முதலில் சொல்லப்பட்டது.
உண்மையில் இப்படம் தாமதமாக வெளியாகியிருப்பதன் காரணமே வேறு என்கிறது அக்கட தேச வட்டாரம்.
அபார உழைப்பைக் கொட்டி, பெரும் பட்ஜெட்டில், பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் எடுக்கப்பட்டிருக்கும் ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாக தயாரான சூழ்நிலையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கியுள்ளது. ஆந்திராவில் திரையரங்குகளுக்கான கெடுபிடிகளும் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொள்ளப்பட்டு வந்தன. இதனால் சுறுசுறுப்படைந்த இயக்குநர் வட்டாரம் அம்மாநில முதல்வரை நேரில் சந்தித்து, இப்படத்திற்கு சில சலுகைகளை வாங்கி வெளியிட திட்டமிட்டது.
முதல்வரை சந்திக்க நேரம் கேட்கப்பட, திரை ரசிகர்கள் அதிகம் உள்ள மாநிலத்தில் ஒரு பிரம்மாண்டமான இயக்குநர் சந்திக்க வருகிறார் என்பதால் உடனடியாக நேரம் கிடைத்திருக்கிறது.
சந்திப்பு உற்சாகமாகதான் ஆரம்பித்த்திருக்கிறது. இயக்குநரின் முந்தையப் படம் பற்றிய தகவல்களை இயக்குநர் சொல்ல முதல்வர் ஆர்வமுடன் கேட்டிருக்கிறார்.
இயக்குநரும் மனம்விட்டு பேச ஆரம்பித்திருக்கிறார். அப்படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் குறித்தும் பேச்சு திசை மாற, முதல்வரும் ஆர்வத்துடன் கேட்க, இயக்குநர் படத்தின் வசூல் மதிப்பை அப்படியே மறைக்காமல் மனம் விட்டு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் வசூலில் எதிர்பார்த்திராத வகையில் கல்லா கட்டியதையும் கேஷூவலாக சொன்னாராம்.
புன்னகை தவழ்ந்த முதல்வரின் முகத்தில், இதைக் கேட்டதும் லேசான மாற்றம் ஏற்பட்டதைக் கூட கவனிக்காமல் இயக்குநர் பேச்சை தொடர்ந்திருக்கிறார்.
இதையெல்லாம் கேட்ட முதல்வர், ‘உங்களோட அடுத்த படத்திற்கு பெரும் எதிர்பார்பு இருப்பது புரியுது. நிச்சயமா இந்தப்படத்துக்கும் நல்ல வியாபாரம் இருக்கும். லாபமும் இருக்கும்ல’ என்று கேட்டிருக்கிறார்.
இயக்குநரும் உற்சாகமாக ’ஆமாம்’ என்று உற்சாகமாய் பதிலளித்திருக்கிறார்.
அதற்கு முதல்வர் சொன்ன பதில்தான் இயக்குநருக்கு ஷாக் அடித்திருக்கிறது.
‘இந்தப் படத்தால உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும் லாபம்தான். ஆனால் நம்ம கவர்ன்மென்ட்டுக்கோ மக்களுக்கோ என்ன லாபம். இப்போ திரையரங்குகள்ல வெளியிட சிறப்புச் சலுகை கொடுக்கிறதால கவர்ன்மெண்ட்டுக்கோ, மக்களுக்கோ எந்த பலனும் இல்லையே’ என்று சொன்னாராம்.
இந்த பிரம்மாண்டமான ஷாக்கை இயக்குநர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேற்கொண்டு என்ன பேசுவது என தெரியாமல் இயக்குநர் தவித்துவிட்டாராம்.
’உங்களுக்கு எப்ப விருப்பமோ அப்ப ரிலீஸ் பண்ணிக்கோங்க, ஆனா சலுகை எதிர்பார்க்காதிங்க’ என்று முதல்வர் கூற இயக்குநர் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
அதனால்தான் பிரமாண்ட ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாவதில் தாமதமானது என்று தெலுங்கு திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள். உண்மையா என்பதை தெலுங்கு வாசகர்கள்தாம் சொல்ல வேண்டும்.