இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்க கோரி சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். தொடர்ந்து இது தொடர்பாக அன்றைய தினமே பிரதமர் நரேந்திர மோடிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இதனையடுத்து தமிழகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அரசுக்கு மனிதாபிமான உதவிகளை செய்வதில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படலாம் என தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து மத்திய அரசு வழியாக இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க தமிழக அரசு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் இன்று மாலை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவெடுக்க உள்ளார் என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை: மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் விளக்கம்
மதுரை மருத்துவக் கல்லூரியில், இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் இப்போகிரெடிக் உறுதிமொழிக்குப் பதிலாக ‘மகரிஷி சரக் சபத்’ என்ற சமஸ்கிருத உறுதிமொழி வாசிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவ கல்லூரியின் மாணவர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தனர். அப்போது, “வரவேற்பு விழா நடத்துவதற்கு போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை. மேலும் நாங்கள் பதிவிறக்கம் செய்த உறுதிமொழிப் படிவத்தை பேராசிரியர்களிடம் காண்பிக்கவில்லை. நாங்கள் தயாரித்தது என்ன என்பது குறித்து அவர்களுக்கு தெரியாது. சமஸ்கிருதத்தை ஆங்கிலத்தில் எழுதியே வாசித்தோம். சமஸ்கிருதத்தில் படிக்கவில்லை. இந்த தவறுக்கு மாணவர் அமைப்பு முழுப்பொறுப்பு, முழுக்காரணம். உறுதிமொழி ஏற்பு விவகாரத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை” என்று தெரிவித்தனர்.
பிரதமர் மோடி ஜெர்மனி சென்றடைந்தார்
கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று சுற்றுப் பயணத்தை தொடங்கினார். முதலில் ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சின் அழைப்பின் பேரில் இன்று ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இரு நாடுகளும் தூதரக உறவை தொடங்கி 70 ஆண்டுகள் ஆகும் நிலையில், ஜெர்மனி பிரதமர் ஓலப் ஸ்கால்சுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இந்திய பிரதமர் மோடி ஈடுபடுகிறார். தொடர்ந்து 6-வது இந்தியா-ஜெர்மன் அரசுகளுக்கிடையிலான ஆலோசனைக்கு இரு நாட்டு பிரதமர்களும் தலைமை வகிக்கிறார்கள். பிரதமர் மோடியின் இந்த 3 நாள் பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடப் புத்தகத்தில் மத்திய அரசு பெயர் ஒன்றிய அரசு என மாற்றம்
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் மத்திய அரசின் பெயரை ‘ஒன்றிய அரசு’ என்று அழைத்து வருகிறது. இந்த நடைமுறையை பள்ளி பாடத்திலும் மாற்றம் செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியது. அதன்படி மத்திய அரசு என்ற வார்த்தை ‘ஒன்றிய அரசு’ என்று பாடப்புத்தகங்களில் திருத்தப்பட உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளர். மேலும், “7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெறுள்ள ஆளுநர், முதல்வரின் அதிகாரம் குறித்த தகவல்களையும் மாற்றுவதற்கு முடிவாகியுள்ளது. இதுதவிர மொழி வாழ்த்து பாடல், செம்மொழி தமிழ் மாநாட்டுக்காக மறைந்த முதல்வர் கருணாநிதி எழுதிய பாடல் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட உள்ளது. இவை வரும் கல்வியாண்டில் வழங்கப்பட உள்ள புத்தகங்களில் இடம்பெற உள்ளன” என்றும் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15 வரை அவகாசம்: தேசிய தேர்வு முகமை உத்தரவு
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்பட இருப்பதாக தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்திருந்தது. அதன்படி, நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் தொடங்கியது. மாணவர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 6 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்ததை தற்போது மே 15 வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 15 இரவு 9 மணி வரை நீட் விண்ணப்பங்கள் பெறப்படும். அன்று இரவு 11.50 மணிவரை விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகளை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தடுப்பூசியை கட்டாயப்படுத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் “கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிக்க மறுக்கும் உத்தரவை மாநில அரசுகள் நீக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளது.