பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 14-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ரபேல் நடால் சாதனை படைத்துள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 8-ம் நிலை வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த காஸ்பர் ரூடை எதிர்த்து விளையாடினார். இதில் ரபேல் நடால் 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரெஞ்சு ஓபனில் நடால் பட்டம் வெல்வது இது 14-வது முறையாகும். இதன்மூலம் பிரெஞ்சு ஓபனில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை ரபேல் நடால் படைத்துள்ளார். மேலும் அதிக வயதில் பிரெஞ்சு ஓபனை வென்ற வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக நடால் கைப்பற்றும் 22-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,518 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 24,701-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 25,782 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,779 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இந்தியாவில் நேற்று மட்டும் 2,57,187 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
விஜய் படங்களை பார்க்காதீர்கள் – மதுரை ஆதீனம் கருத்து
இந்துக்களை அவமதிக்கும் வகையில் திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தத்தில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் மதுரை ஆதீனம் பேசியதாவது:
பாரதியார் தற்பொழுது இருந்திருந்தால் `செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே’ என்று பாடியிருப்பார். அந்தளவுக்கு மதுக்கடைகள் ஆதிக்கம் இங்கே அதிகரித்துள்ளது.
அறநிலையத்துறை பொல்லாத துறையாக உள்ளது. அறநிலையதுறை அதிகாரிகள் விபூதி பூசுவதில்லை, கோயிலில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு தெரிவதில்லை. அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக திருக்கோயில்கள் உள்ளது.
அறநிலையத்துறையை கலைத்துவிட வேண்டும், கோயில்கள் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இயங்க வேண்டும்.
இந்துக்களை அவமதிக்கும் வகையில் திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள். கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால், என்னை சங்கி என சொல்கிறார்கள். சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும் போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்க கூடாது?
இவ்வாறு அவர் பேசினார்.
ரூபாய் நோட்டுகளில் தாகூர், அப்துல் கலாம் படங்கள்- ரிசர்வ் வங்கி பரிசீலனை
ரூபாய் நோட்டுகளில் தற்போது மகாத்மா காந்தி படம் மட்டுமே இடம் பெறுகிறது. இந்த நிலையில் வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோரின் படங்களை வெளியிட ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்து வருகிறது.
ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய வெளியீட்டு அமைப்பு ஆகியவை இணைந்து மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், அப்துல்கலாம் ஆகியோரின் தலா 2 ‘வாட்டர்மார்க்’ படங்களை டெல்லி ஐஐடி பேராசிரியர் திலீப் டி.சகானிக்கு அனுப்பியுள்ளது. இவர்தான் ‘வாட்டர் மார்க்’ படங்களை சிறப்பாக தேர்வு செய்து இறுதி ஒப்புதலுக்கு அரசுக்கு பரிசீலிப்பவர் ஆவார். தற்போது அவருக்கு படங்கள் அனுப்பப்பட்டு இருப்பதன் மூலம் ரவீந்திரநாத் தாகூர், அப்துல்கலாமின் படங்கள் ரூபாய் நோட்டுகளில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது.