நம்ம ஊரில் ஒரு பிரச்சினையை அடிக்கடி நான் கவனிப்பதுண்டு. குறிப்பிட்ட ஒரு துறையில் பெற்றி பெற்றவர்கள் அல்லது புகழடைந்தவர்கள் வேறொரு துறையைப் பற்றி துளிகூட புரிதல் இல்லாமல் மேலோட்டமாக தெரிந்துகொண்டு பேசுவதுண்டு. குறிப்பாக இலக்கியவாதிகளிடம் இது சற்று அதிகம். விஷயத்திற்கு வந்துவிட்டேன்! எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் நாகஸ்வர தவில் வித்வான்களுக்கு திருமண வீடுகளில் கிடைக்கும் ‘மரியாதை’யைப் பற்றி குறிப்பிட்டுள்ளது இப்போது சர்ச்சைக்கிடமாகியுள்ளது!
‘கல்யாண வீடுகளில் மங்கல இசை வித்வான்களுக்கு எப்போதுமே கடைசி பந்தியில்தான் சாப்பாடு போடப்படுகிறது. அவர்கள் தரையில்தான் உட்கார வைக்கப்படுகிறார்கள். இதெல்லாம் இன்றும் தொடர்கிறது…’ என்கிற ரீதியில் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார், எஸ். ராமகிருஷ்ணன்.
மரியாதைக்குரிய எழுத்தாளர் எஸ்ராவின் இந்த கருத்து அடிப்படையில் அபத்தமானது என்பதை மங்கல இசை மன்னர்களோடு ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக பழகியவன், அவர்களோடு பயணித்தவன் என்ற முறையில் தெரிவிப்பது என் கடமையாகிறது.
முதலில் எந்த காலத்தில் எஸ்ரா இருக்கிறார் என புரியவில்லை! அமரர் நாகஸ்வர சக்ரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை காலத்திலேயே, ஒரு சில இடங்களில் மங்கல இசை வித்வான்களுக்கு நடந்த ‘மரியாதை குறைவுகள்’ நீக்கப்பட்டு விட்டன என்பது இந்த எழுத்தாளருக்கு தெரிய வேண்டாமா?
இன்று வெளியூரிலிருந்து வரும் நாயனக்காரர்களுக்கு நல்ல ஹோட்டல்களில் வசதியான ஏ.சி ரூம் போட்டு அவர்கள் ‘இன்னோவா’ காரில் மண்டபத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள். பெயர் பெற்ற பெரிய வித்வான்கள் மட்டுமல்ல, வளரும் கலைஞர்கள்கூட மரியாதையுடன் நடத்தப்படுவதை நான் அறிவேன். சன்மானம் வேண்டுமானால் தரத்திற்கேற்றபடி மாறுபடலாம்!
நாகஸ்வரக்காரர்களுக்கு ஏன் கடைசி பந்தி என்று யோசிக்க வேண்டாமா? வழக்கமாக வாத்யக்காரர்கள், எல்லோருக்கும் முன்பே விடியற்காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு, சற்று ஒய்வு எடுத்துக்கொண்டு ஜமுக்காளத்தில் அமர்ந்துவிடுவார்கள்.
திருமண நிகழ்ச்சிகள் தொடங்கி விட்டால் அவர்கள் எழுந்திருக்க முடியாது. ஒவ்வொரு சாங்கியத்திற்கும் அதற்கேற்ற உருப்படியை வாசிக்க வேண்டும். தாலி கட்டியவுடன் நாம் தான் அலுவலகம் போக வேண்டிய அவசரத்தில் டைனிங் ஹாலுக்கு படையெடுப்போம். நாயனக்காரர்களுக்கு இன்னும் வாசிக்க பாக்கியுள்ளது.
இறுதியாக புரோகிதர் மந்திரங்களை முடித்து எழும் போதுதான் அவர்கள் நாகஸ்வரத்தை உறையில் தள்ள வேண்டும்! அப்போது கூட, சில பட்டுப்பாவாடை பெண்கள் ஓடி வந்து ‘அலைபாயுதே’, ‘நலந்தானா’ என ஆசையாக கேட்டால் எந்த நாகஸ்வரக் கலைஞரும் மறுப்பதில்லை, சந்தோஷத்துடன் வாசிப்பர். சொல்லப்போனால் அது நேயர் விருப்பமாகிவிடும்.
எல்லாம் முடிந்து அவர்கள் டைனிங் ஹாலில் நுழைகிறபோது கூட்டம் கரைந்து கடைசி பந்தி தானே நடக்கும்? இதற்கு என்ன செய்ய முடியும்? தவிர முகூர்த்தம் நடக்கிறபோது, பாதியில் எழுந்து வயிறு முட்ட சாப்பிட்டால் அவர்களால் தொடர்ந்து வாசிக்கவும் முடியாது.
எல்லா மண்டபங்களிலும் டைனிங் டேபிளிலேயே அவர்களுக்கு சாப்பாடு நடக்கும். பல பந்திகளில் அவர்களுடன் அமர்ந்து அன்றைய கச்சேரியைப் பற்றி அலசியவாறே நானும் சாப்பிட்டிருக்கிறேன்!
சாப்பாடு முடிந்தவுடன் அவர்களை முன் ஹாலுக்கு அழைத்து வந்தவுடன் தரையில் அமர வைத்தே பெண்ணின் பெற்றோர் மரியாதை செய்வர். சந்தனம், குங்குமம் காட்டி பின் தாம்பூல பையை தந்து பின்னர் வட்ட தாம்பாளத்தில் சன்மான கவர் வைப்பார்கள். தரையில் பெண்ணின் பெற்றோரும் அமருவார்கள். அது சம்பிரதாயம்! ஏதோ மரியாதை குறைவாக நடத்தப்படுவது அல்ல! சின்ன, பெரிய வித்வான்கள் அனைவருக்குமே இதே மரியாதைதான்.
பத்மஸ்ரீ விருது பெற்ற ஷேக் மெஹபூப் சுபானி தம்பதியிலிருந்து மன்னர்குடி சங்கர நாராயணன், திருமெய்ஞானம் சகோதரர்கள் மற்றும் இளைய தலைமுறை மயிலை கார்த்திகேயன் உள்பட பல நாகஸ்வர வித்வான்களிடம் பழங்கியவன். அதே போல் பல தவில் மேதைகளிடம் தொடர்புடையவன். அவ்வளவு ஏன்….. பழம்பெரும் நாகஸ்வர மேதை, செம்பனார்கோயில் எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணாவின் இசை வாழ்வைப் பற்றி ‘ஒரு நாதஸ்வரத்தின் பயணம்’ என்ற நூலை எழுதியவன்.
இவர்கள் யாருமே எந்த கால கட்டத்திலும் தாங்கள் கெளரவ குறைவாக நடத்தப்பட்டதாக சொன்னதில்லை!