ஆண் – பெண் இடையே மட்டுமல்ல செல்லப் பிராணிகள் மீது, இயற்கை மீது, தொழில் மீது என காதல் பல முகங்கள் கொண்டது. அதில் சில அழகிய முகங்கள் இங்கே…
கு. உமாதேவி
பாடலாசிரியர்
காதலை வெளிப்படுத்த எல்லோரும் கவிதையை தேர்வு செய்வார்கள். எனக்கு கவிதை மீதே காதல்.காதலின் அழகை மட்டுமல்ல வேட்கை, வலிகள், அதிகாரத்துக்கு எதிரான அரசியல், இந்த சமூகத்தின் மீதான கோபம் என எனது எல்லா உணர்வுகளையும் வெளிபடுத்த சிறந்த ஊடகமாக எனக்கு கவிதை உள்ளது.
அவ்வையார், ஆண்டாள், அக்கமகாதேவி, மீரா தொடங்கி 21ஆம் நூற்றாண்டில் பெண்கள் எழுத்தில் எழுச்சியை ஏற்படுத்திய சமீப கால கவிதாயினிகள் வரை தங்கள் உணர்வுகளை எழுத்துக்களால் வடித்த முன்னோடிகள் எனக்கான கவிதை வடிவத்தை உருவாக்கி தந்திருக்கிறார்கள். ஒரு பெண் இதையெல்லாம் சொல்லக்கூடாது என்று இந்த சமூகம் தடை செய்த எல்லாவற்றையும் மீறி, அனைத்து உணர்ச்சிகளையும் எழுத்தில் வெளிப்படுத்துவதற்கான வழிகளை உருவாக்கி, என் பாதையை சீர்படுத்தி வைத்துள்ளார்கள். இவர்களின் தொடர்ச்சிதான் நான்.
என்னை வெளிப்படுத்திக்கொள்ள கவிதை சிறந்த ஊடகம் என்றால் அதையே இன்னும் பரந்த அளவில் வெகுஜனங்களிடம் கொண்டு செல்லக்கூடியதாக சினிமா எனக்கு அமைந்தது. ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ என ஆரம்ப படங்கள் தொடங்கி இன்று வரை எனது உணர்வை இசையோடு வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை சினிமா கொடுக்கிறது. இங்கு எதிலும் ஒளிவு மறைவு கிடையாது. ஜாதி, மதம், நிறம், அழகு, படிப்பு, தூரம் என எந்த தடையுமில்லை. திறமைக்கு அங்கீகாரம் நிச்சயம்.
சினிமாவுக்காக சில பாடல்கள் எழுதும்போது அதுவரை அனுபவிக்காத உணர்வை கொண்டதாக அதன் கரு இருந்தால்கூட, அதை எழுதும் காலகட்டத்தில் அதுவாகவே நான் மாறிவிடுகிறேன். ஒரு மணி நேரமோ அல்லது ஒரு வாரமோ அதற்குள்ளேதான் இருக்கிறேன். அந்த உணர்வு அவ்வளவு அழகானது.
ஜோதிமணி
எம்.பி., கரூர் தொகுதி
அரசியலோ அதிகாரமோ அல்ல மக்கள் மீதுதான் எனக்கு காதல்.
என் இயல்பான சுபாவம் அமைதியான ஒரு வாழ்க்கையை விரும்பக்கூடியது. ஆனால், அதற்கு நேர் எதிரான பரபரப்பான அரசியல் துறையில், என் பயணம் அமைந்துள்ளது. என் சுபாவத்தை மீறி எது என்னை இந்த பாதையில் செலுத்துகிறது என்றால், மக்கள் மீதான அன்புதான் அதற்கு காரணம்.
அரசியல் மீதான எனது ஈடுபாட்டுக்கு காரணம் அதிகாரமோ பணமோ இல்லை, மக்கள்தான். மக்களுடன் இணைந்து வேலைகள் செய்ய அரசியல் எனக்கு ஆகச்சிறந்த களமாக இருக்கிறது, அவ்வளவுதான். நான் செல்லும் இடங்களில் மக்கள் என் மீது காட்டும் அன்பு அரசியல் மீதான என் ஈடுபாட்டை இன்னும் அதிகரிக்கிறது.
கடந்த 25 வருடங்கள் அரசியல் வாழ்வில் நிறைய மாற்றங்களை பார்த்துவிட்டேன். தேர்தல் வெற்றி – தோல்விகள், பதவிகள் எல்லாவற்றையும் கடந்து இந்த 25 வருடங்களில் மக்கள் என் மீது காட்டும் அன்பு மாறாமல் இருக்கிறது.
ஒரு பெண் என்பதால், மிகப்பெரிய அரசியல் – பொருளாதார சமூகப் பின்னணி இல்லாத நிலையில் இருந்து வந்திருப்பதால், வழக்கமாக ஒரு அரசியல்வாதி எதிர்கொள்ளும் தடைகளைவிட அதிகமாக நான் எதிர்கொள்கிறேன்; தினமும் எனக்கு இது ஒரு போர்க்களம்தான். இத்தனை பிரச்சினைகளையும் தாண்டி நான் இங்கே நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் எனக்கு மக்கள் மீதும் மக்களுக்கு என் மீதும் இருக்கிற தூய்மையான அன்புதான்.
நித்யானந்த் ஜெயராமன்
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்
எனக்கு காதல் என்பது அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் என குடுப்பத்தோடு முடிந்துவிடுவது இல்லை; வீட்டின் நான்கு சுவர்களைத் தாண்டி, ஊர், மாநிலம், நாடு போன்ற எல்லைகள் கடந்து, மனித சமூகம் – உயிரினங்கள் என்ற பிரிவுகள் மீறி இயற்கை எங்கும் விரிகிறது என் காதல்.
ஒவ்வொருவருக்கும் இந்த சமூகத்தின் மீது அக்கறை இருக்கும். ரோட்டில் போகும்போது ஒரு விபத்தை பார்க்கிறோம்; அடிபட்டவர் யாரோ என்றாலும் நமக்குள் ஒரு தாக்கம் ஏற்படும்; ஐயோ என்று பதறுவோம், உடனே வண்டியை நிறுத்தி, இறங்கி, ஓடிப் போய் எதாவது செய்ய முடியுமா என்று பார்ப்போம் இல்லையா, இதுதான் சமூக அக்கறை. இது எல்லோரிடமும் இருக்கும். சிலர் மனிதர்கள் மோசமானவர்கள் என்று சொல்வார்கள்; எனக்கு அப்படி தெரியவில்லை. எதற்கு ஊர் வம்பு என்று சொல்லி தடுத்தாலும் வெள்ளம் மாதிரி பிரச்சினைகள் வரும்போது எல்லோரும் இறங்கி வேலை பார்க்கத்தானே செய்தோம். இந்த மற்றவர்கள் மீதான பாசம், நேசம், அக்கறைதான் என் செயல்பாடுகளுக்கான அடிப்படை.
சூரியனின் ஆற்றலை நமக்கு பயன்படக்கூடிய ஆற்றலாக மாற்றக்கூடியது பச்சை வண்ணம்தான். ஆனால், இந்த உலகத்தில் பச்சை மட்டும் இருந்தால் போதுமா? சிகப்பு, மஞ்சள். நீலம், கருப்பு என்று பல வண்ணங்கள் இருந்தால்தான் அழகு. அது மாதிரி இந்த உலகத்தில் பல்லுயிர்களும் இருக்க வேண்டும். அதற்கு நமக்கு அவற்றின் மீது காதலும் மதிப்பும் இருக்க வேண்டும்.