“புக் பேர்-க்கு போகமுடியலையா? கவலைப்படாதீங்க. பிஞ்ச் தமிழ் வழியா வீட்டிலேயே உங்க மனசுக்குப் பிடிச்ச புத்தகங்களை இலவசமா வாசிங்க!” – இன்று ‘புக் பேர்’ போகலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே நம் எண்ணவோட்டத்தை படித்ததுபோல், இந்த செய்தியுடன் ஒளிர்கிறது மொபைல் ஸ்கிரீன். ‘பிஞ்ச்’ மட்டுமல்ல, ‘கிண்டில்’, ‘பீட்லி’, ‘பிரதிலிபி’ என நூற்றுக்கணக்கான ‘ரீடிங் அப்’கள் வந்துவிட்டன. இந்த டிஜிட்டல் வாசிப்பு புத்தக சந்தையை பாதித்துள்ளதா? பதிப்பாளர் ‘சந்தியா’ நடராஜனிடம் பேசினோம்.
“பாதித்துள்ளது; ஆனால், பாதிக்கவில்லை என்பதுதான் எங்கள் அனுபவம். புத்தகங்கள் வீட்டில் இடத்தை அடைக்கும்; தூசி படியும்; அதற்கு பதிலாக கிண்டிலில் அல்லது அதுபோன்ற அப்களில் படிக்கலாம் என்று நவீன இளைஞர்கள் நினைக்கிறார்கள். ஆனாலும், அச்சில் படித்துப் பழகியவர்கள் அதிலிருந்து மாறத் தயாராக இல்லை என்றே தெரிகிறது.
அதேநேரம் கிண்டில் மூலமாக இன்னொரு பிரச்சினையை பதிப்பகங்கள் சந்திக்கிறது. அது பைரஸி.
கிண்டிலில் எங்கள் பதிப்பகத்தின் 60 புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். கிண்டிலில் வெளியாகும் பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை உடனே திருடி பிடிஎஃப் ஃபைலாக மாற்றிவிடுகிறார்கள். இதுபோன்ற பிடிஎஃப் புத்தகங்களைப் பகிர்ந்துகொள்ளவே ‘புத்தகங்கள் வாசிப்போம்’, ‘புத்தகங்களை நேசிப்போம்’ என பல ‘வாட்ஸ் அப்’, ‘டெலிகிராம்’, ‘ஃபேஸ்புக்’ குரூப்கள் உள்ளன. அவற்றில் போட்டுவிடுகிறார்கள். ஒவ்வொரு குழுவிலும் 1000 தொடங்கி 3000 பேர் வரை இருக்கிறார்கள். இவர்கள் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு, அவரிடம் இருந்து மற்றொருவருக்கு என அந்த பிடிஎஃப் புத்தகங்கள் சர்குலேட் ஆகிக்கொண்டே இருக்கிறது.
இது சட்டத்துக்கு புறம்பானது என்று தெரியாமலே பலர் இதை செய்கிறார்கள். பதிப்புலகம் மிகவும் நெருக்கடியில் இருக்கும் ஒரு காலகட்டத்தில் இது எவ்வளவு தவறானது; பதிப்பாளர்களை இது பாதிக்கக்கூடியது என அவர்கள் உணர்வதில்லை. இலவசமாகத்தானே கொடுக்கிறோம் இதனால் வாசகர்கள் அதிகரிக்கத்தானே செய்வார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் ஒரு புதிய புத்தகம் குறித்து செய்தி வெளியிடும்போது, உடனே கமெண்டில் வந்து, இதற்கு பிடிஎஃப் கிடைக்குமா என்று பதிப்பாளரிடமே கேட்கிறார்கள். அது பெரிய தவறில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது.
சுஜாதா, பாலகுமாரன் இப்போது பா. ராகவன், சரவணன் சந்திரன் போன்ற சில எழுத்தாளர்களின் 100 சதவிகித புத்தகங்களும் இப்படி பிடிஎஃப் ஃபைல்களாக கிடைக்கின்றன.
மற்ற வழிகளைவிட கிண்டிலில் இருந்து புத்தகங்களைத் திருடுவது சுலபமாக இருக்கிறது என தெரிகிறது. ஏனெனில், கிண்டிலில் வெளியிட்ட உடனே அந்த புத்தகத்துக்கு பைரஸி வந்துவிடுகிறது. மேலும், கிண்டில் வந்த பின்னர்தான் இப்படி பிடிஎஃப் புத்தகங்கள் ‘சர்குலேட்’ ஆவதும் அதிகரித்துள்ளது. இதனால், சிறு அளவில் புத்தக விற்பனை பாதித்துள்ளது.
இப்படி வரும் பிடிஎஃப் புத்தகங்களை எல்லாம் வாசகர்கள் படிப்பார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. 10 சதவிகிதம் பேர் படிக்கலாம்; உதாரணமாக 1,000 பேருக்குச் சென்றால் எல்லோருமே டவுன்லோட் செய்துகொள்வார்கள். ஆனால், அதில் 100 பேர்தான் படிப்பார்கள். அந்த 100 பேரிலும் சிலர் புத்தகம் மிகவும் பிடித்துப்போய் அச்சுப் புத்தகம் வாங்கி வைத்துக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். எனவே, பிடிஎஃப் புத்தகங்களால் பாதிப்பு இருந்தாலும் அது பெரியளவில் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலானது.
‘மாயவரம்: சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்’ என்ற எங்கள் வெளியீட்டை இதுபோல் திருடி பிடிஎஃப் புத்தகமாக வெளியிட்டுவிட்டார்கள். குறிப்பாக மாயவரத்தில் தினசரி பேப்பர் போல் எல்லோர் வீடுகளுக்கும் அந்த ஃபைல் வாட்ஸ் அப் மூலமாக போய் சேர்ந்துவிட்டது. எனது ஊர் மாயவரம்தான். அங்கிருந்து எனக்கே சில நண்பர்கள் அந்த ஃபைலை அனுப்பினார்கள். இவ்வளவுக்கு பிறகும் அந்த புத்தகம் விற்பனையாகிக் கொண்டுதான் இருக்கிறது.
இப்போது யூடியூப்பில் பாத்திமா பாபு, பாரதி பாஸ்கர் போன்றவர்கள் கதைகளை வாசிக்கிறார்கள். அப்படி வாசிக்கப்படும் கதைளின் விற்பனையும் பெரியளவில் பாதிக்கப்படவில்லை. இவற்றிலிருந்து, டிஜிட்டல் வாசிப்பு தளங்கள் வந்துவிட்டாலும் அச்சுப் புத்தகங்களுக்கான வாசகர்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்றே தெரிகிறது.
அதேநேரம் அச்சுப் புத்தகங்களின் நேரடி விற்பனையைவிட ஆன்லைன் விற்பனை அதிகமாகியுள்ளது. குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணைய தளங்கள் விற்பனையால் புத்தகக் கடை என்ற கலாசாரமே உடைத்துவிட்டது. சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட ‘லேண்ட்மார்க்’ புத்தகக் கடைகள் இருந்தன; டாடா என்ற பெரிய நிறுவன பின்புலம் இருந்தும் அந்த கடைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆக்ஸ்போர்ட், கிராஸ்வேர்டு போன்ற புத்தகக் கடைகளுக்கும் இதுதான் ஆனது. சென்னை மட்டுமல்ல பெங்களூரு, மும்பை என்று எங்குமே இப்போது அதன் தடயங்கள் இல்லை.
இத்தனை இருந்தாலும் நல்ல புத்தகங்கள் விற்பதற்கு இதுதான் சரியான காலகட்டம் என்பதே ஒட்டுமொத்தத்தில் எங்கள் அனுபவம்” என்கிறார் சந்தியா நடராஜன்.