சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றினர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த சீலை அகற்றி, தலைமை அலுவலகத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதியில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றி, எடப்பாடி பழனிசாமி வசம் அந்த அலுவலகத்தை ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த தென்சென்னை ஆர்டிஓ மற்றும் மயிலாப்பூர் வட்டாட்சியர் பாபு ஜெகஜீவன் ராம் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் உள்ளிட்ட 4 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றினார். அப்போது அதிமுக கட்சி அலுவலகத்தின் மேலாளர் மகாலிங்கம், துணை மேலாளர் மனோகரன், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். கட்சி நிர்வாகிகளைத் தவிர தொண்டர்கள் யாரும் தலைமை அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாநிலங்களவை செயலாளருமான பி.சி. மோடி இப்பணிகளை மேற்பார்வையிடுகிறார். முதலில் எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த சுற்று முடிவடைந்ததும் வேட்பாளர்களின் முன்னணி நிலவரத்தை பி.சி. மோடி வெளியிடுகிறார்.
பின்னர் ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி மாநிலங்களின் வாக்குப்பெட்டிகள் திறந்து எண்ணப்படும். முதல் 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்டதும், 2-வது முறையாக வேட்பாளர்களின் முன்னணி நிலவரத்தை பி.சி. மோடி அறிவிப்பார். தொடர்ந்து 20 மாநிலங்கள் முடித்த பின் ஒரு முறையும், மீதமுள்ள வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின் இறுதி நிலவரத்தையும், தேர்தல் நடத்தும் அதிகாரி பி.சி.மோடி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பொருட்களின் விலை உயர்வு
5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதன் காரணமாக ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு லிட்டர் நெய்க்கு ரூ 50, ஒரு லிட்டர் தயிருக்கு ரூ 10 உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராம் தயிரின் விலை 10 ரூபாயில் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் தயிரின் விலை 25-லிருந்து 28 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய் 538 ரூபாயில் இருந்து 580 ரூபாயாக அதிகரித்துள்ளது. அரை லிட்டர் நெய்யின் விலை 275 ரூபாயில் இருந்து 290 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு
இலங்கையின் 8-வது அதிபராக ரனில் விக்ரமசிங்க இன்று காலை பதவியேற்றார்.
இலங்கையில் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலம் நேற்று நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் ரணில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து இலங்கை நாட்டின் 8-வது அதிபராக நாடாளுமன்றத்தில் அவர் பதவியேற்றுக்கொண்டார். இலங்கையின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா முன்னிலையில் அவர் பதவியேற்றார். பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பிரதமராகவும் இடைக்கால அதிபராகவும் இருந்த ரணில் தற்போது அதிபராகவும் பதவியேற்றுள்ளார்.
ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு 25-ம் தேதிக்கு மாற்றம்
ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி, போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக், பி.பிளான், பி.ஆர்க். உள்ளிட்ட என்ஜினீயரிங் படிப்பில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு வருடத்திற்கு 2 முறை நடத்தப்படுகிறது. இதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான 2-ம் கட்ட நுழைவுத்தேர்வு வருகிற 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த தேர்வு வருகிற 25-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேலம், நாமக்கல் மாணவ- மாணவிகள் உள்பட 6 லட்சத்து 29 ஆயிரத்து 778 பேர் பங்கேற்க உள்ளனர்.