No menu items!

நியூஸ் அப்டேட்: எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமனம்

நியூஸ் அப்டேட்: எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 66 எம்.எல்.ஏ.க்களை கொண்ட அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருக்கிறார்கள். இந்த நிலையில், “முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும் துணைச் செயலாளராக அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என்று சபாநாயகர் அலுவலகத்தில் அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி அளித்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களை தன்வசம் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 62 எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள். ஓ. பன்னீர்செல்வம் அணியில் அவரையும் சேர்த்து 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் அதிர்ச்சி: மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றம்

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளை, உள்ளாடைகளை அகற்றுமாறு சொன்ன அதிர்ச்சிக்குரிய சம்பவம் வெளியே வந்துள்ளது.  இது குறித்து மாணவியின் தந்தை கோபகுமார் சூராநத் தனது புகாரில், “தேசிய தேர்வு முகமையில் இதுகுறித்து எதுவும் குறிப்பிடாத நிலையில் எனது மகளிடம் உள்ளாடையை கழற்ற கோரியுள்ளனர். அவள் அதற்கு மறுத்தபோது, பரீட்சை எழுத அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். ஒரு அறை முழுவதும் உள்ளாடைகள் கொண்டு செல்லப்பட்டன என எனது மகள் தெரிவித்தாள். பலர் அழுது கொண்டிருந்தனர். இதனால், தான் படித்ததை எல்லாம் மறந்துவிட்டதாக என் மகள் தெரிவித்தாள். நீட் தேர்வு என்பது முக்கிய நுழைவுத் தேர்வாக இருக்கிறது. அப்படியிருக்க இம்மாதிரியான கடுமையான நடத்தைகளின் மூலம் மாணவர்கள் மன ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். பலர் தங்கள் உள்ளாடைகளில் உள்ள ஊக்குகளை அகற்றி அதை கட்டிக் கொண்டனர்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார்: மெரினாவில் காவலர்கள் குவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து குதித்து மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது. இதில் பள்ளிக்கூடம் முழுமையாக சூறையாடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கனியாமூரில் நடைபெற்ற போராட்டத்தை போன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை தீவிரமாக நடத்த திட்டம் தீட்டப்பட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மாநிலம் முழுவதும் இன்று போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடைபெற்ற விவேகானந்தர் இல்லம் அருகே கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மின்சார கட்டணம் உயர்வு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அறிவித்தார். இதற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கெனவே சொத்து வரியை உயர்த்தி சுமை ஏற்றிய அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது” என்று கூறியுள்ளார்.

மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசின் அழுத்தமே காரணம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அப்போது, “உதய் திட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்திட்டதால் மின்வாரியத்துக்கு நிதிச்சுமை ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மின்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது. இந்த கடும் நெருக்கடியில் இருக்கும்போது ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக 28 முறை கடிதம் எழுதியது. மேலும் தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் கடன் ஏதும் வழங்கக்கூடாது என ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...