பல மறைந்த தலைவர்களின் பிறந்த நாட்கள் வரும்போது அவர்களின் பெருமைகள் நினைவுக்கு வரும். உண்மையில் காமராஜரை பற்றி சற்று எண்ணிப்பார்த்தாலே கண்கள் கலங்கி விடுகிறது.
பண்டித நேரு மட்டுமே காமராஜரை நன்கு புரிந்துக் கொண்டவர். ‘ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த இவர்தான் இந்தியாவின் இதயத்தை புரிந்த தலைவராக இருப்பார்” என்று அவரிடம் பெரும் பொறுப்பை தூக்கி கொடுக்க காத்திருந்தார்.
சென்னை ஐலண்டு மைதானத்தில் உள்ள காமராஜர் சிலையை பிரதமர் நேருதான் திறந்து வைத்தார். தி.மு.க ஆட்சியல் இருந்த மாநகராட்சியின் சார்பில் திறக்கப்பட்ட சிலை. ‘நான் உயிருடன் இருப்பவர்கள் சிலையை திறந்து வைக்கமாட்டேன். காமராஜர் சிலையை திறக்க முழுமனதுடன் சம்மதம் சொன்னேன். காரணம் அவர் ஒரு அபூர்வமான மக்கள் தலைவர்” என்று அந்த விழாவில் பேசினார் பிரதமர் நேரு.
தலைவர்கள் ஒவ்வொருவரும் காமராஜரிடம் தனி மதிப்பும் அன்பும் வைத்திருந்தார்கள்.
1967 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற செய்தி வந்துக்கொண்டிருந்தபோது அன்று இரவு சென்னை கடற்கரையில் தி.மு.க.தலைவர்கள் கூடி இருந்தார்கள். காமராஜர் விருதுநகரில் தோற்றதை கேட்டு அண்ணா திடுக்கிட்டார். துடித்துப்போய் விட்டார். ‘எவ்வளவு பெரிய தலைவர். உலகின் கவனத்தை அவர் கவர்ந்திருக்கிற நேரம். அவர் வாழ்க்கையில் இப்போது முக்கிய தருணம்” என்று அண்ணா வருந்தினார். தி.மு.க-வின் வெற்றியை கூட அவர் அப்போது பெரிதாக ரசிக்கவில்லை.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னைக்கு வருகிறார். ஒரு தமிழர் நீண்டகாலத்திற்கு பிறகு இப்படி தலைவர் ஆகிறார். பெரும் கூட்டம் அவரை வரவேற்கிறது. ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு காமராஜர் வந்திருந்தபோது அவரை வரவேற்க மாலையுடன் காத்திருந்தார் ராஜாஜி. சுதந்திரா கட்சியை ஆரம்பித்து காங்கிரஸையும் குறிப்பாக காமராஜரையும் கடுமையாக தாக்கி வந்தார் ராஜாஜி.
காமராஜர் சர்க்கரை நோயினால் உடல்நிலை சரியின்றி ஓய்வெடுத்தபோது கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி அடிக்கடி அவரை சந்திப்பார். காமராஜருக்கு கைகளைத் தூக்க முடியாமல் தோள்பட்டை வலி. ‘எனக்கும் அப்படி இருந்தது” என்று சொல்லி ஒரு உடற்பயிற்சியை அவருக்கு சொல்லிக் கொடுத்தார் ராமமூர்த்தி.
பத்திரிக்கையாளன் என்கிற முறையில் காமராஜரை பற்றிய மூன்று காட்சிகள் என் நெஞ்சில் பதிந்து கிடக்கிறது.
1967 பொதுத் தேர்தலில் தி.மு.க-வும் ராஜாஜியும் இணைந்து காங்கிரசை எதிர்த்தனர். ‘நான் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்” என்றார் காமராஜர். காங்கிரஸ் செய்த சாதனைகளை கூறிவிட்டு இதை சென்னார்.
‘படுப்பது நிச்சயம். ஜெயிப்பது கிடையாது” என்றார் ராஜாஜி! சில நாட்களில் காமராஜர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி நிஜமாகவே படுக்கையில் படுத்துவிட்டார்.
காமராஜரும் தோற்றார். காங்கிரசும் படுதோல்வி. தேர்தல் முடிவுகள் வந்தபோது சில நாட்கள் கழித்து காமராஜர் வீட்டுக்கு நிருபர்கள் மெல்ல சென்றனர்.
‘கால் அடிப்பட்டு வலி இன்னமும் போகவில்லை. வீக்கமும் குறையக் காணோம். வீட்டிலே பொம்பளைங்க இருந்தா பத்து போடுவாங்க. புளியை சுட்டு பத்துபோட்டா வீக்கம் குறையும்” என்று பேசினார் காமராஜர்.
வலியின் வாட்டம் தவிர முகத்திலும் குரலிலும் வேறு ஏமாற்றம் இல்லை. தேர்தல் பற்றி கேட்டபோது, ‘இதெல்லாம் நடக்கக்கூடியதுதான். செல்லப்போனால் காங்கிரஸ் தோற்று, ஜனநாயகத்தை ஜெயிக்க வைத்திருக்கிறது” என்றார்.
இன்னொரு காட்சி. அதற்கு ஐந்தாண்டுகளுக்கு முந்தியது!
நேருவின் விருப்பப்படி கட்சியை வளர்ப்பதற்காக முதலமைச்சர் பதவியில் இருந்து காமராஜர் ராஜனாமா செய்தார்.
அன்று முதல்வராக கோட்டை அறையில் கடைசி நாள். நிருபர்கள் அவரை சந்திக்க சென்றனர்.
வழக்கமாக அவர் அமர்ந்திருக்கும் நீண்ட சோபாவில் நிறைய பைல் குவியல்கள் இருக்கும். முக்கு கண்ணாடியை கழற்றி ஒரு பைல் மீது வைத்திருப்பார்.
சோபாவில் ஒரு பைல் கூட இல்லை. காமராஜர் சோபா ஓரமாக ஒதுங்கி அமர்ந்திருந்தார்.
மூக்கு கண்ணாடி அவர் சட்டைப் பையில்.
பேட்டி முடிந்து நிருபர்கள் எழுந்தார்கள். ‘இருங்க ! நானும் கிளம்பிவிட்டேன். இனிமே எனக்கு இங்கே என்ன வேலை” என்று குபீர் சிரிப்புடன், துண்டை தோளில் போட்டவாறு எழுந்தார் காமராஜர். நிருபர்கள் திகைத்து நின்றார்கள் !
மூன்றாவது காட்சி
பிரதமர் இந்திராவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு உச்சத்தை தொட்ட நேரம். அவரது வீட்டில் பத்திரிகையாளர்கள் ஏராளமாக கூடி இருந்தார்கள். டி.டி.கே. அவரை சந்தித்துவிட்டு போனார். சமரச முயற்சி! இந்திரா – காமராஜர் கருத்து வேறுபாடு தேசத்துக்கு நல்லதல்ல என்று டி.டி.கே. பேட்டி கொடுத்தார்.
வழக்கத்துக்கு மாறாக, அதிக இடம் தேவை என்பதால், நிருபர்கள் மாடிக்கு அழைக்கப் பட்டனர்.
காமராஜர் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார். ஏராளமான நாற்காலியில் நிருபர்கள். பேட்டி நடந்துக் கொண்டிருந்தபோது ஜெயகாந்தன் வந்தார் ‘வாங்க ஜெயகாந்தன்” என்று வரவேற்றார் காமராஜர். உள்ளே இடம் தேடி சுற்றுமுற்றும் பார்த்தார் ஜெயகாந்தன்.
நான் எழுந்து அவருக்கு உட்கார இடம் தந்துவிட்டு, சற்று தள்ளி புகைப்படக்காரருடன் நின்றேன். ‘நீ ஏன் இங்கே நிற்கறே! இங்கே வந்து உட்கார்” என்று உரக்க அழைத்தார் காமராஜர்!
எங்கே உட்கார செல்கிறார்; ஊஞ்சலில் அவருக்கு அருகே!!
காமராஜர் தள்ளிக்கொள்ள, நான் ஊஞ்சல் கம்பியை பிடித்தவாறு ஒடுங்கி !
ஒரக்கண்ணால் என்னைப் பார்த்து என் சங்கடத்தை புரிந்துகொண்டு லோசக புன்னகைத்தார் காமராஜர்.
எனக்கு வியர்த்தது. உடல் சற்று நடுங்கியது. நாக்கு உலர்ந்தது.
திரும்பி காமராஜரை பார்த்தேன். மிக உயர்ந்து விசுவரூபமாக எனக்கு தெரிந்தார். நான் எலிக் குஞ்சு போல இருந்தேன்.
‘தொண தொணவென்று எதாவது கேட்பியே. பேச்சையே காணோம்” என்றார் காமராஜர் என்னை இயல்பாக்க.
சுதாரித்துக்கொண்டு, ‘பிரதமரிடம் நேரிடையாக பேசலாமே… ஹாட் லைன் இருப்பதாக…” என்று மென்று முழுங்கி ஆரம்பித்தேன்.
‘போச்சு! எல்லாம் போச்சு! அப்பறம் என்ன பேச்சு?” என்றார் காமராஜர்
ஹாட் லைன் துண்டிக்கப்பட்டது என்று நிருபர்கள் நினைத்தனர்.
காமராஜர் காலம் என்பது தனியானது.