நான்கு ஆண்டுகளாக திரைப்படங்கள் பக்கம் தலைக்காட்டாமல் இருந்த கமல் ஹாசனின் திரை வாழ்க்கையைப் புரட்டி போட்ட படமாக மாறியிருக்கிறது ‘விக்ரம்’.
இதுவரையில் இருந்த வசூல் சாதனைகள் பலவற்றை ’விக்ரம்’ உடைத்தெறிந்து இருக்கிறது.
இதனால் கமல் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார். அதேவேகத்தில் தனது அடுத்தக்கட்ட படங்கள் குறித்து பரபரவென ஆலோசனைகளில் இறங்கியிருக்கிறார்.
கொரோனா பாதிப்பு, ஷூட்டிங் இரண்டு பேர் மரணம். தயாரிப்பாளர் தரத்தில் பணப்பிரச்சினை என அடுக்கடுக்காக பிரச்சினைகள் எழ, தற்போது முதலிருந்து உற்சாகமாக படத்தைத் தொடங்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறார்களாம். இதற்கு காரணம் ’இந்தியன் – 2’ தயாரிப்பில் பலமான கூட்டணி அமையும் வாய்ப்புகள் இருப்பதுதானாம்.
இதன் தொடர்ச்சியாகதான், ‘இந்தியன் – 2’ ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என்று அறிவித்தவர் அதற்கான வேலைகளையும் தொடங்க தனது குழுவினருக்கு ஆலோசனைகள் கூறியுள்ளாராம்.
ஆரம்பத்தில் ‘இந்தியன் -2’ படத்தில் ஒப்பந்தமானது காஜல் அகர்வால். ஆனால் தற்போது அவர் குழந்தை குடும்பம் என செட்டிலாகிவிட, படத்தின் வர்த்தகத்திற்கு எந்த பலனும் இருக்காது என்பதால், அவருக்குப் பதிலாக பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் நடிகையை நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டு வருகிறதாம் ’இந்தியன் – 2’ படக்குழு.
பாலிவுட் நடிகையை கமிட் செய்தால், பான் – இந்தியா படமாகவும் இப்படத்தை முன்னிறுத்தலாம் என்ற ஐடியாவை கமல் முன் வைக்க, தற்போது அதற்கான தேடலில் இறங்கியிருக்கிறார்கள்.
ஹைதராபாத்தில் ஷூட்டிங் வேண்டாம் – வலுக்கும் கோரிக்கை
ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவின் தலைநகரமாக கொடி கட்டி பறந்த சென்னையின் நிலை இன்று மிகப் பரிதாபமாகி இருக்கிறது.
மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களும் கூட இங்க இயங்கிய ஸ்டூடியோக்களில் பரபரப்பாக ஷூட் செய்யப்பட்டன. ஆனால் கடந்த பதினைந்து வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் தனது முக்கியத்துவத்தை கணிசமாக இழந்திருக்கிறது சென்னை.
சென்னையின் இடத்தை தற்போது ஹைதராபாத் கெட்டியாகப் பிடித்திருக்கிறது. இங்குள்ள உச்ச நட்சத்திரங்களின் காதல் காட்சிகள், சண்டைக்காட்சிகள் என அவர்களது படங்களின் பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத்தில்தான் எடுத்து வருகிறார்கள்.
அதனால் என்ன என்று கேட்க தோன்றாலாம். ஷூட்டிங் மூலம் இங்குள்ள சினிமா தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கிடைத்த வந்த வருமானத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பெஃப்சியில் இருக்கும் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் மத்தியில் வருத்தம் உருவாகி வருகிறது. நம் சினிமாவை சேர்ந்தவர்கள் வெளி மாநிலத்திற்கு சென்று ஷூட் செய்வதால் என்ன பலன். ஆரம்பகாலத்தில் வெளி மாநிலங்களில் ஸ்டூடியோக்கள் இல்லை. அதனால் அவர்களும் இங்கே வந்து ஷூட் செய்தார்கள். ஆனால் சமீபகாலமாக ஹைதராபாத்தில் ஸ்டூடியோக்கள் கட்டப்பட்டுவிட்டன. அங்கு முழுவீச்சில் ஷூட்டிங்குகள் நடந்து வருகின்றன.
நம் கோலிவுட் நட்சத்திரங்கள் ஹைதராபாத்தை தேர்வு செய்வதால், இங்குள்ள சினிமா தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போகிறது என்ற கருத்து வலுவாகி வருகிறது.
சென்னையில் பரபரப்பாக இயங்கி வந்த ஏவிஎம் ஸ்டூடியோ இன்று தமிழ் சினிமாவின் வரலாற்றைச் சொல்லும் அடையாளமாகி இருக்கிறது. விஜய வாஹினி ஸ்டூடியோ இன்று நட்சத்திர ஹோட்டலாகி விட்டது. பிரசாத் ஸ்டூடியோ சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கான அடைக்கலமாகி விட்டது. இதர சின்னச்சின்ன ஸ்டூடியோக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளாகவோ அல்லது கைவிடப்பட்டதாகவோ மாறிவிட்டன.
விஜயின் ‘வாரிசு’ முதல் சிங்கிள் ரெடி!
விஜய் முதல் முறையாக தெலுங்கில் அறிமுகமாகும் ’வாரிசுடு’, தமிழில் ‘வாரிசு’ படத்திற்கு இசை எஸ்.எஸ். தமன்.
இப்படத்தின் முதல் இரண்டு ஷெட்யூல்கள் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துவிட்டன. சென்னை போரூரில் பத்து நாட்கள் ஷூட்டிங் நடந்து முடிந்தது.
படம் 2023 பொங்கலுக்குதான் ரிலீஸ் என்றாலும், படத்தை ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக வைக்க வேண்டுமென்பதில் படத்தயாரிப்பு தரப்பு உஷாராகவே இருக்கிறதாம்.
இதனால்தான் படம் வெளிவர இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் அவகாசம் இருந்தாலும், சீக்கிரமே இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்பாடலை சித் ஸ்ரீராமும், அனிருத் இசையில் தவறாமல் இடம்பிடிக்கும் ஜொனிட்டா காந்தியும் இணைந்து பாடியுள்ளார்கள்.
இப்பாடல் அரபிக்குத்தைப் போல ஹிட்டாக வேண்டுமென எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது ’வாரிசு’ குழு