No menu items!

நியூஸ் அப்டேட்: இளையராஜாவுக்காக யுவன் கூட ஓட்டுப்போட மாட்டார் – சீமான்

நியூஸ் அப்டேட்: இளையராஜாவுக்காக யுவன் கூட ஓட்டுப்போட மாட்டார் – சீமான்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது, “இளையராஜா பாஜகவில் சேர்ந்தாலும், அவர் மகன் யுவன்சங்கர் ராஜா ஒட்டுப் போட மாட்டார். பட்டியலினத்தவர் பழங்குடியினரை குடியரசு தலைவராக்கியவர்கள், அவர்களை பிரதமராக்க முடியுமா? எங்களுக்கு காங்கிரஸ் இன பகைவன். பாஜக மனித குல பகைவன். இஸ்லாமியர்களே இல்லாத மத்திய அரசை அவர்கள் உருவாக்கினால், பிராமணர்களே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். இந்திய விடுதலைக்கு ஆர்எஸ்எஸ் போராடினார்களா? இந்தியாவில் ஆண்டுக்கு 24 லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இஸ்லாமிய, கிறிஸ்துவ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணியை ஈட்டும் இவர்கள், அதை நிறுத்திவிட்டால் இந்தியா என்ற ஒரு நாடே இருக்காது” என்று கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள  முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் எம்எல்ஏ வீடு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடு உட்பட 49 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு

ஜப்பானின் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் காயமடைந்த ஷின்ஸோ அபேவை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். ஷின்சோ அபேயால் சுவாசிக்க முடியவில்லை என்றும், இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டது. பின்னர் அபேயின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  ஷின்ஸோ அபே மீதான தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கும் வகையில் ஓபிஎஸ் செயல்பாடுகள் உள்ளன தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் புகார்

அதிமுகவுக்குள் நடக்கும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதனையடுத்து, கடந்த வாரம் தேர்தல் ஆணையத்தில் 40 பக்க விரிவான விளக்க மனு ஒன்றை எடப்பாடி பழனிசாமி அணியினர் அளித்தனர். அந்த 40 பக்க மனுவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அதில், “அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த ஓ. பன்னீர்செல்வம் கட்சி தொண்டர்களுக்கு ஏராளமான தொல்லைகளை கொடுத்து வந்தார். தனது பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற சுயநலத்துடன் பொதுக்குழு உறுப்பினர்களையும் துன்புறுத்தினார். அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கட்சி விரோத செயல்களாகவே உள்ளன. அதோடு தனது ஆதரவாளர்களை கட்சி நலனுக்கு எதிராக தூண்டிவிட்டார். அவர்கள் மூலம் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக செயல்பட வைத்தார். இவை அனைத்துமே அதிமுக கட்சி விதிகளுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் ஆகும். இதற்காக அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கடலூரில் மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவு: போக்சோவில் சக மாணவர்கள் கைது

கடலூர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, மிரட்டி பாலியல் வல்லுறவு செய்ததாக, அவர் உடன் பயிலும் சக வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில், “கடந்த மே மாதம் மாணவி படிக்கும் அதே பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவருக்கு பிறந்தநாள் விழா பள்ளி வளாகத்திற்குள் கொண்டாடப்பட்டது. அந்த 12ஆம் வகுப்பு மாணவர் மாணவியின் காதலர் என்று கூறப்படுகிறது. அவரின் பிறந்தநாள் விழாவில் பங்கு பெற்ற மாணவி, 12ஆம் வகுப்பு மாணவருடன் பேசுவதை மாணவியுடன் பயிலும் சக மாணவர்கள் மொபைலில் புகைப்படம் பிடித்துள்ளனர்.

பின்னர் ஜூலை 1ஆம்‌ தேதி மாணவியுடன் படிக்கும் சக மாணவர்கள் மூன்று பேரும் தாங்கள் எடுத்த புகைப்படத்தைக் காட்டி நீங்கள் காதலிக்கிறீர்களா என்று கேட்டு, இதை உங்கள் வீட்டில் காட்டுகிறோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். இதனால் பயந்த மாணவி அவ்வாறு செய்யவேண்டாம் என்றும், அந்த படத்தை மொபைலில் இருந்து நீக்கும்படி சக மாணவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். அப்போது ‘மொபைலை வீட்டில் வைத்துள்ளேன், நீ வந்தால் உன் கண் முன்பே அதை நீக்குகிறேன்’ என்று கூறி மாணவியை சக மாணவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டுக்குச் சென்றதும் மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக சக வகுப்பு மாணவர்கள் மூன்று பேரும் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். மேலும், மாணவியை பாலியல் வல்லுறவு செய்ததை தங்களது மொபைலில் வீடியோவாக பதிவு செய்து, அந்த வீடியோவை மாணவியின் காதலர் என்று கூறப்படும் அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவருக்கு அனுப்பியுள்ளனர்.

தற்போது மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...