No menu items!

தோனி 41

தோனி 41

’தல’ தோனிக்கு இன்று 41-வது பிறந்த நாள். இந்த நாளில் அவரைப் பற்றி 41 சுவாரசியமான தகவல்கள்:

10-ம் வகுப்பில் படிக்கும்போதுதான் தோனி கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

பள்ளிக் காலத்தில் கால்பந்து விளையாட்டில் கோல் கீப்பராகவும் தோனி இருந்துள்ளார். அந்த ஆர்வத்தால்தான் பின்னாளில் சென்னையின் எஃப் சி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆனார்.

கிரிக்கெட் வீரர் ஆவதற்கு முன்பு 2001-ம் ஆண்டுமுதல் 2003-ம் ஆண்டுவரை மேற்குவங்கத்தில் உள்ள காரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக தோனி பணியாற்றி உள்ளார்.

2004-ம் ஆண்டில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிதான் தோனியின் முதல் சர்வதேச போட்டி. இதில் தோனி 0 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

மோட்டார் சைக்கிள்கள் மீது தோனிக்கு ஆர்வம் அதிகம். விலை உயர்ந்த 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை அவர் தனது வீட்டில் வைத்துள்ளார்.

MSD R-N என்ற மோட்டார் சைக்கிள் ரேஸிங் அணியையும் தோனி சொந்தமாக வைத்துள்ளார்.

தனது முதல் பைக்கை 4,500 ரூபாய் கொடுத்து தோனி வாங்கினார். அதை இன்னும் அவர் வைத்துள்ளார்.

’தனது வீட்டில் ஏராளமான நாய்களை தோனி வளர்த்து வருகிறார். தான் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அவை ஒரே விதமான அன்பைத்தான் செலுத்துகின்றன என்று தோனி ஒருமுறை வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

ஜார்க்கண்டில் உள்ள தனது பண்ணை வீட்டில் இயற்கை முறையில் தோனி விவசாயம் செய்து வருகிறார். இங்கு விளையும் பயிர்களை உள்ளூர் மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் விற்கிறார்.

தனது பண்ணை வீட்டுக்கு, ‘கைலாஷ்பதி’ என்று தோனி பெயரிட்டுள்ளார்.

தோனிக்கு கடவுள் பக்தி அதிகம். ராஞ்சியில் தனது வீட்டில் இருக்கும் நேரங்களில் உள்ளூரில் உள்ள தியோரி மந்திருக்குச் செல்ல தோனி தவறுவதில்லை.

ஓய்வாக இருக்கும் நேரங்களில் பழைய இந்திப் பாடல்களைக் கேட்க தோனிக்கு மிகவும் பிடிக்கும். அவர் இந்திப் பாடகரான கிஷோர் குமாரின் ரசிகர்.

தோனிக்கு மிகவும் பிடித்த நடிகர் ஜான் ஆப்ரகாம். அவரால் கவரப்பட்டுதான் ஆரம்ப காலத்தில் தோனி மிக நீண்ட கூந்தலை வைத்திருந்தார்.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், தோனியின் தீவிர ரசிகர்.

வீட்டில் ஓய்வாக இருக்கும்போது தன் மகளை பின்னால் அமரச் செய்து பைக் ஓட்டுவது தோனிக்கு மிகவும் பிடித்த விஷயம்.

தோனிக்கு பிடித்த உணவு சிக்கன் மற்றும் ஹாட் சாக்லேட்.

கொல்கத்தாவில் கிரிக்கெட் ஆடச் சென்றபோதுதான் தனது மனைவி சாக்‌ஷியை தோனி முதல் முறையாகச் சந்தித்தார்.

2011-ம் ஆண்டில் இந்திய ராணுவத்தின் லெப்டினெண்ட் கர்னலாக தோனி நியமிக்கப்பட்டார்.

டி20 உலகக் கோப்பை, ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை, உலக சாம்பியன்ஷிப் கோப்பை ஆகிய 3 கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி.

இந்திய அணிக்கு மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் 4 ஐபிஎல் கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களுக்கு மேல் தோனி குவித்துள்ளார். 90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களையும், 350 ஒருநாள் போட்டிகளில் 10,773 ரன்களையும், 98 டி20 போட்டிகளில் 1,617 ரன்களையும் அவர் குவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளராகவும் ஒரு விக்கெட்டை தோனி எதுத்துள்ளார்.

இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களைக் குவித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமை தோனிக்கு உண்டு. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2013-ல் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் 224 ரன்களைக் குவித்துள்ளார்.
முதலாவது ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் தோனி. இவரை 1.5 மில்லியன் டாலர் விலை கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டிதான் தோனி விளையாடிய கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 256 கேட்ச்களைப் பிடித்துள்ள தோனி, 38 ஸ்டம்பிங்குகளைச் செய்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 321 கேட்ச்களைப் பிடித்துள்ள தோனி, 123 ஸ்டம்பிங்குகளைச் செய்துள்ளார்.

7-ம் தேதி பிறந்த காரணத்தால் சர்வதேச போட்டிகளில் ஆடும்போது 7-ம் எண் ஜெர்ஸியை அணிந்து தோனி விளையாடினார்.

தோனியின் ட்ரேட் மார்க்காக ஹெலிகாப்டர் ஷாட் உள்ளது. தனது நண்பரான சந்தோஷ் லால் என்பவரிடம் இருந்து தோனி இந்த ஷாட்டைக் கற்றார்.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ராகுல் திராவிட் விலகியபோது, தோனியை கேப்டன் ஆக்குமாறு பரிந்துரை செய்தவர் சச்சின் டெண்டுல்கர்.

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு கேப்டனாக செயல்பட்ட முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமை தோனிக்கு உள்ளது.

மொத்தம் 331 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்துள்ளார்.

2009-ம் ஆண்டில் தோனியின் தலைமையில்தான் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அந்தஸ்த்தைப் பெற்றது.

தோனியின் தலைமையில் இந்தியா 27 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

2007 முதல் 2016 வரை 6 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோனியின் அதிகபட்ச ஸ்கோர் 183. இலங்கைக்கு எதிராக இந்த ஸ்கோரை தோனி அடித்தார்.

சிறந்த பேட்ஸ்மேனுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 656 நாட்கள் தோனி முதல் இடத்தில் இருந்துள்ளார்.

2021-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி தோனியின் மொத்த சொத்து மதிப்பு 808 கோடி ரூபாய்.

விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் மட்டும் 250 கோடி ரூபாயை தோனி சம்பாதித்துள்ளார்.

ஐபிஎல் தொடர்களின் மூலம் மட்டுமே 150 கோடி ரூபாயை தோனி சம்பாதித்துள்ளார்.

மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளை தோனிக்கு வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...