பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு நாள் செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடந்து முடிந்திருக்கிறது. கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலர் பேசியிருக்கிறார்கள். இந்த பேச்சுக்களில் அமித்ஷா பேசியது கவனிக்கத்தக்கது.
“அடுத்து வரும் 30 முதல் 40 ஆண்டுகள் வரை மத்தியில் பாஜக கூட்டணியே ஆட்சி நடத்தும். விரைவில் தென் மாநிலங்களை கைப்பற்றுவோம். தெலங்கானாவில், மேற்கு வங்கத்தில் குடும்ப ஆட்சியை அகற்றுவோம். ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசாவில் ஆட்சியைப் பிடிப்போம்” என்று பேசியிருக்கிறார் அமித் ஷா.
இந்த பேச்சு கட்சியினரை உற்சாகப்படுத்த பேசப்பட்டதா அல்லது உண்மையில் இதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது.
மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 8 ஆண்டுகள் ஆகின்றன. சில நாட்களுக்கு முன் ஆட்சி மாற்றம் நடந்த மகாராஷ்டிரம் உட்பட இந்தியா முழுவதிலும் தற்போது 18 மாநிலங்களில் பாஜக தனித்தோ கூட்டணியாகவோ ஆட்சி நடத்துகிறது.
அருணாச்சலபிரதேசம், அசாம், பிஹார், கோவா, மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், புதுச்சேரி, திரிபுரா,மகாராஷ்டிரா, ஹரியானா, மேகாலாயா ஆகிய 12 மாநிலங்களில் கூட்டணி ஆட்சியும் குஜராத், இமாச்சலபிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் தனித்தும் ஆட்சியை நடத்துகிறது பாஜக.
பாஜகவால் அடுத்த முப்பது, நாற்பது வருடங்களுக்கு மத்தியில் ஆட்சியில் இருக்க முடியுமா? என்பது முதல் கேள்வி.
இந்த மே மாதம் குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ’இரண்டு முறை பிரதமராக இருந்துவிட்டீர்கள் வேறு என்ன வேண்டும் என்று சொல்கிறார்கள். இரண்டு முறை பிரதமராக இருந்துவிட்டாலே எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்ற எண்ணம் அவர்கள் பேச்சில் இருக்கிறது. ஆனால் அப்படியல்ல. நான் வேறு வகையை சார்ந்தவன். குஜராத் மண் என்னை வேறுபடுத்தி வைத்திருக்கிறது. நான் ஒய்வு பெற வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால், என் பணி முடியவில்லை. 100 சதவீதம் சாதிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு” என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது மூன்றாவது முறையும் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் மோடிக்கு 74 வயதாகியிருக்கும். பாஜகவின் எழுதப்படாத விதியின்படி 75 வயதைக் கடந்துவிட்டால் தீவிர அரசியல் பணியிலிருந்து ஒதுங்க வேண்டியிருக்கும்.
அப்படி மோடி செய்வாரா? 75 வயதில் ஓய்வு பெற சொல்லி கட்சியால் அவரைக் கட்டுப்படுத்த முடியுமா? அவர் ஒதுக்கப்படுவார் என்று தெரிந்தால் மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்களா?
இவையெல்லாம் இதுவரை பதில் இல்லாத கேள்விகள். வாஜ்பாய் முன்னுக்கு கொண்டு வந்த அத்வானி கட்டமைத்த பாஜக இன்று மோடி என்ற பிம்பத்தின் மூலம் உச்சத்தில் இருக்கிறது. மோடியை தவிர்த்து பாஜகவை பார்க்க இயலுமா? அதை பாஜக ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
இன்று மோடிக்கு அடுத்த நிலையில் யோகி ஆதித்யநாத் பாஜகவின் பிம்பமாய் இருக்கிறார். ஆனால் அவருக்கு தீவிர முகம். அந்த முகத்தை இந்தியா முழுவதும் விற்க முடியுமா என்பது சந்தேகமே. நிதின் கட்காரி, ஃபட்னாவிஸ் போன்றவர்களையும் பாஜகவின் முகங்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவர்கள் இப்போது வலுவிழந்து இருக்கிறார்கள்.
அவர்கள் ஏன் அமித்ஷா இருக்கிறாரே என்ற கேள்வி உடனடியாக எழும். உண்மை. மோடிக்கு அடுத்து அமித்ஷாதான் என்ற எண்ணம் பாஜகவில் சில பிரிவுகளில் இருக்கிறது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க அதி முக்கிய மாநிலமாக – 80 நாடாளுமன்றத் தொகுதிகளுடன் இருக்கும் உத்தரப்பிரதேசம் யோகி ஆதித்யாத்தின் கோட்டையாக இருக்கிறது. அங்கு அமித்ஷாவுக்கு செல்வாக்கு கிடைப்பது சந்தேகமே.
1999லிருந்து 2004 வரை மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி நடத்தியது. ஆட்சியின் மீது பெரிய குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை. ஆனாலும் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெல்லவில்லை. 2009ல் எல்.கே.அத்வானி பிரதமர் வேட்பாளாராக பாஜகவால் முன்னிறுத்தப்பட்டார். அப்போதும் பாஜக வெல்லவில்லை. பத்து வருடங்கள் கழித்து 2014ல்தான் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தது பாஜக. ஆனால் அதற்கான முன் தயாரிப்புகளை 2010லேயே தொடங்கிவிட்டது. குஜராத் மாடல் என்று பிரபலபடுத்தப்பட்டது. வளர்ச்சியின் நாயகனாக மோடி முன்னிறுத்தப்பட்டார். அதற்கேற்ப அரசியல் சூழல் நகர 2014ல் பாஜகவுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் 2024 தேர்தலுக்காக இதுவரை பாஜக எந்த முன் திட்டங்களையும் வகுத்திருப்பதாக தெரியவில்லை.
மோடியை முன்னிறுத்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதே பாஜகவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பாக இப்போது தெரிகிறது. ஆனால் மீண்டும் மோடியேவா என்ற கேள்வி பாஜகவுக்குள்ளும் எழும். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜகவிலும் ஏக்நாத் ஷிண்டேக்கள் உருவாக அதிக வாய்ப்பிருக்கிறது. இது போன்ற சூழலில் பாஜக அடுத்து 30 – 40 வருடங்கள் அதிகாரத்தில் இருக்கும் என்பது உற்சாகப் பேச்சாகத்தான் தோன்றுகிறது.
அடுத்த இலக்கு தென்னிந்தியா என்று அமித்ஷா பேசியிருக்கிறார்.
தற்போது தென்னிந்தியாவில் பாஜக வலுவாக காலூன்றியிருப்பது கர்நாடாகவில். ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழ்நாட்டில் பாஜகவின் நிலை அத்தனை வலுவாக இல்லை.
புதுவையில் என் ஆர் காங்கிரசை கபளீகரம் செய்ததால் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கு திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் பாஜக வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. ஆனால் அது கூட்டணி என்ற நிபந்தனையுடன்.
கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்திருக்கிறது. ஆட்சியிலிருந்து கவிழ்ந்திருக்கிறது. ஆட்சியை கவிழ்த்திருக்கிறது. 1994 கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில்தான் பாஜக முதல் முறையாக பலம் பெற்றது. அந்தத் தேர்தலில் 40 இடங்களில் வென்று கர்நாடகாவில் தான் ஒரு சக்தியாக வளர்ந்திருப்பதைக் காட்டியது. அதற்கு முந்தைய தேர்தலில் நான்கு இடங்கள்தாம். 1999 தேர்தலில் 44 இடங்களுக்கு உயர்ந்து 2004 தேர்தலில் 79 இடங்களாக அதிகரித்தது. அந்தத் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. ஆனால் 2008ல் ஆட்சி கவிழ மீண்டும் தேர்தல். இந்தத் தேர்தலில் பாஜக பெற்றது 110 இடங்கள். ஆறு சுயேச்சைகளின் உதவியுடன் மெல்லிய மெஜாரிட்டியில் கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்தது பாஜக. 2013 தேர்தலில் காங்கிரஸ் வென்றது. பாஜக பெற்றது 40 இடங்களே. 2018லும் மெஜாரிட்டி பெறவில்லை. 104 இடங்களில்தான் பாஜக வென்றது. காங்கிரஸ் – ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. அந்த ஆட்சி ஒரு வருடத்தில் கவிழ்ந்து மீண்டும் பல குழப்பங்களுடன் ஆட்சிக்கு வந்தது பாஜக.
எதற்காக கர்நாடகா தேர்தல் குறித்து இந்த நீண்ட கதை?
1994லிருந்து அங்கு பாஜக போராடி வருகிறது. சுமார் 28 வருடங்கள். ஆனால் இன்றும் முழு பெரும்பான்மையுடன் அங்கு பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. கர்நாடாகாவில் இந்துத்வா சக்திகள் அதிகம், பாஜகவுக்கு ஆதரவு பெருகுகிறது என்று வலதுசாரிகள் தொடர்ந்து கூறினாலும் 28 ஆண்டுகள் ஆகியும் மெஜாரிட்டியுடன் தேர்தலில் வெற்றி பெற இயலவில்லை என்பதே நிதர்சனம்.
அங்கிருந்து ஆந்திரா பக்கம் வந்தால் அங்கு பாஜகவுக்கு கூடுதல் சிக்கல்கள் இருக்கின்றன.
ஆந்திராவைப் பொறுத்தவரை நீண்டகாலமாகவே அங்கு பாஜக ஒவ்வொரு தேர்தலிலும் இரண்டு மூன்று இடங்களை வென்றுக் கொண்டிருந்தது. அதிகபட்சமாக 1999ல் 12 இடங்களை வென்றது. அதன்பிறகு மீண்டும் 2 அல்லது 3 இடங்கள்தாம். காங்கிரசின் பெரும் சக்தியாக இருந்த ராஜசேகர ரெட்டி 2009 செப்டம்பரில் மறைந்தார். அதுவரை அங்கு காங்கிரசுக்கும் தெலுங்கு தேசத்துக்கும்தான் போட்டியாக இருந்தது.
2014ல் ராஜசேகர் ரெட்டி மறைவுக்குப் பிறகு நடந்த முதல் பொதுத் தேர்தல். ஆந்திராவில் காட்சி மாறியிருந்தது. சந்திரசேகர ராவ்வின் டிஆர்எஸ், ராஜசேகர ரெட்டியின் மகன் ஜகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் உருவாகியிருந்தன. இந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்தார். பாஜகவுக்கு நான்காவது இடம்.
2019 பொதுத் தேர்தலில் ஜகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார். அந்தத் தேர்தலில் பாஜக 173 இடங்களில் போட்டியிட்டது அத்தனையிலும் டெபாசிட்டை இழந்தது. இதுதான் பாஜகவின் ஆந்திர பலம்.
புதிதாய் உருவான தெலங்கானாவில் முதல் முறையாக 2018ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அதில் தெலங்கானா ராஷ்டிர சமீதி வென்று சந்திரசேகர ராவ் முதல்வரானார். காங்கிரசுக்கு இரண்டாவது இடம். பாஜக 118 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வென்றது.
பாஜகவின் கேரள நிலையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் 113 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றிப் பெறவில்லை. 2016 தேர்தலில் 98 இடங்களில் போட்டியிட்டு ஒரே இடத்தில் வென்றது பாஜக. 2011ல் 138 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. கடந்த சில தேர்தல்களில் இதுதான் பாஜகவின் நிலை.
தமிழ்நாட்டில் பாஜக தனித்துப் போட்டியிட்டு 2.5 சதவீதத்துக்கு மேல் வாக்குகளை வாங்கியதில்லை. 2001 திமுக கூட்டணியில் 4 இடங்களில் வென்றது. 20 வருடங்கள் கழித்து 2021ல் அதிமுக கூட்டணியில் 4 இடங்களை வென்றிருக்கிறது.
பாஜகவின் தென்னிந்திய வரலாறு இப்படியிருக்கும்போது அதனால் தெற்கை தனது கட்டுக்குள் கொண்டு வர முடியுமா என்பது சந்தேகத்துக்குரிய ஒன்று.
இதற்கு பாஜக தரப்பினர் தரும் ஒரு பதில், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆக்கிரமித்திருந்த வடகிழக்கு மாநிலங்கள் இப்போது பாஜகவின் பிடியில் இருக்கின்றன என்பது. ஆனால் அங்கு கட்சிகள் உடைக்கப்பட்டு, வளைக்கப்பட்டு ஆட்சிகள் பிடிக்கப்பட்டன. அது போன்ற சிறு கட்சிகள் தென்னகத்தில் இல்லை.
மேற்கு வங்கத்தில் காங்கிரசையும் கம்யூனிஸ்டுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அங்கு இரண்டாவது இடத்தில் இருக்கிறோம் என்று மற்றொரு பதிலை பாஜகவினர் கூறுகிறார்கள்.
உண்மைதான். 2016ல் மூன்று இடங்களில் வென்றிருந்த பாஜக 2021 தேர்தலில் 77 இடங்களின் வென்றிருக்கிறது. மிகப் பெரிய ஏற்றம்தான். ஆனால் அங்கு காங்கிரசும் கம்யூனிஸ்டும் மிகவும் பலவீனமடைந்த நிலையில் இருக்கின்றன. அவற்றை பலவீனமடைய செய்தது பாஜக அல்ல, மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மேற்கு வங்கத்தில் வாக்குகள் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் என்று பிரியும்போது அதன் சாதகம் பாஜகவுக்கு கிடைத்தது.
தமிழ்நாட்டில் தற்போது அதிமுகவினர் சண்டைபோட்டுக் கொண்டிருப்பது பாஜகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் இரட்டைத் தலைமையின் கீழும் திமுகவின் பலமான போட்டிக்குப் பிறகும் 2021 தேர்தலில் அதிமுக தனியாக 66 இடங்களில் வென்றது அதன் குறையா சக்தியைக் காட்டுகிறது.
அதிமுக பிளவுபட்டாலும் அதன் ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு அணிகள் உருவாகி இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும் அதன் பலன் பாஜகவுக்கு கிடைக்குமா என்ற கேள்விக்கு 1989 சட்டப் பேரவைத் தேர்தலை உதாரணமாக பார்க்க வேண்டும்.
1989ல் அதிமுக உடைந்து ஜா அணி, ஜெ அணி என்று புறா, சேவலாக பிரிந்து தேர்தலை சந்தித்தது. அந்தத் தேர்தல் தமிழ்நாட்டில் மீண்டும் பலமாக ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி நம்பினார். தேர்தல் பரப்புரைக்காக 13 மூறை தமிழ்நாட்டுக்கு வந்தார். திமுக, அதிமுகவின் இரண்டு அணிகள், காங்கிரஸ் என்று பிரிந்து போட்டியிட்ட அந்தத் தேர்தலில் திமுக வென்று ஆட்சியைப் பிடித்தது. ஜெ அணி 27 இடங்களை வென்றது. 26 இடங்களுடன் காங்கிரஸ் மூன்றாம் இடத்தைதான் பிடித்தது.
இந்த உண்மையை உணர்ந்துதான் பாஜக இப்போது தமிழ்நாட்டில் ஏக்நாத் ஷிண்டேக்களைத் தேடிக் கொண்டிருக்கிறது.