தமிழ் திரைப்பட இயக்குநர்களில் வித்தியாசமானவர் மிஷ்கின். கவிஞர், இசைக் கலைஞர், நடிகர் என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். எல்லாவற்றையும்விட முக்கியம் மிகச் சிறந்த வாசகர். மிஷ்கின் தன்னைக் கவர்ந்த புத்தகங்கள் பற்றி இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
The Death of Ivan Ilyich – Leo Tolstoy
உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் டால்ஸ்டாய்; காந்தியையே கவர்ந்த மகான். அவரது The Death of Ivan Ilyich உட்பட சில கதைகள் அடங்கிய தொகுப்பு இது. இந்த கதைகளை படித்துவிட்டவர்களுக்கு நியாய தர்மம் பற்றி எதுவுமே சொல்லிக்கொடுக்க தேவையில்லை. அந்தளவு இதில் எல்லாமே இருக்கிறது. இந்த நூலை படித்துவிட்டாலே பைபிள், குரான், பகவத் கீதை எல்லாவற்றையும் படித்துவிட்டதாகத்தான் அர்த்தம். என் வாழ்க்கையில் இருட்டில் வழி நடத்தும் விளக்காக இந்த நூல் எப்போதும் எனக்கு இருக்கிறது. ‘நீதிபதியின் மரணம்’ என்ற தலைப்பில் தமிழிலும் இந்த நூல் வெளியாகியுள்ளது.
A Venetian At The Mughal Court
வெனிஸில் இருந்து இந்தியாவுக்கு பதினாறாம் நூற்றாண்டில் நிக்கோலா மானூச்சி என்ற பையன் வருகிறான். பதினான்கு வயதில் கப்பலில் ஏறுகிறான். அரேபியா, எகிப்து என பல நாடுகள் சுற்றி இந்தியா வந்து சேரும்போது அவனுக்கு 21 வயது. அன்றிலிருந்து தனது 60 வயது வரை இந்தியாவில் இருந்த தன் கதையை 3000 பக்கங்களுக்கு மேல் எழுதியுள்ளார். அதன் சுருக்கம்தான் இந்த நூல். வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த நூலை கையில் எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்கமாட்டார்கள். அவ்வளவு சுவாரஸ்யமான சம்பவங்கள் கொண்டது.
பஞ்ச தந்திரக் கதைகள்
நான் அடிக்கடி படிக்கும் நூல் இது. நமது மண்ணின், நமது தேசத்தின் கதைகள். நமது பெருமை. இதன் பாதிப்பில் இருந்துதான் ‘ஆயிரத்தோர் இரவுகள்’ கதைகள் உருவாகி இருக்கும் என்பது என் நம்பிக்கை.
What To Listen For In Music – Aaron Copland
இசை பற்றிய மிக எளிமையான அறிமுகம் இந்த நூல். இசையை கேட்டால் போதாதா, அதைப் பற்றி படிக்க என்ன இருக்கிறது என சிலருக்கு தோன்றலாம். அவர்கள் இந்த நூலை படித்தால்தான் இதன் அற்புதத்தை உணர முடியும். இசை என்றால் என்ன என்பதையும் இந்த நூல் அருமையாக சொல்லித் தரும். பரிட்சைக்கு படிப்பது மாதிரிதான் இந்த நூலை நான் வாசித்துக்கொண்டு இருக்கிறேன்.
The Music School – செழியன்
கடந்த ஒன்றரை வருடங்களாக நான் ‘மியூசிக்’ படித்துக் கொண்டிருக்கிறேன். படங்களுக்கு ‘மியூசிக்’ பண்ணலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. இந்தளவு தைரியம் எனக்கு வரக் காரணம் இந்த புத்தகம்தான். மொத்தம் 10 பாகங்கள் கொண்டது. இந்த 10 பாகங்களையும் படித்த பின்னர்தான் உண்மையில் ‘மியூசிக்’ என்றால் என்ன என்பதே எனக்கு தெரிந்தது. இந்த 10 பாகங்களையும் ஒருவர் படித்து முடித்துவிட்டால் அவராலேயே மியூசிக் பண்ண முடியும். அதற்கு நானே சாட்சி.
The Greek Myths – Robert Graves
நமக்கு மகாபாரதம், ராமாயணம் இதிகாசங்கள் போல் மேற்கத்திய நாடுகளுக்கு கிரேக்க கதைகள். மேற்கத்திய நாகரிகத்தின் ஆரம்பப் புள்ளி என்றே கிரேக்க கதைகளை சொல்லலாம். திரைப்பட இயக்குநராக, எழுத்தாளராக ஆசைப்படுபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.
Zen And Japanese Culture
‘சென்’ என்பது ஒரு பெரிய தத்துவம். இதைப் பற்றி தமிழில்கூட நிறைய புத்தகங்கள் வெளியாகியுள்ளது. இருந்தாலும் ‘சென் தத்துவம்’ பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த அறிமுகமாக இந்த நூல் இருக்கும். இந்த கணத்தில் வாழ்வது எப்படி என்பதை இந்நூல் ஒருவருக்கு கற்றுக்கொடுக்கும்.
Classical Chinese Poetry
நமது சங்க கால கவிதைகள் மாதிரி 9000 – 8000 வருடங்களுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை சைனிஷ் கவிதைகள். உலகின் மிகச் சிறந்த கவிஞர்கள் அவர்களிடையே இருந்துள்ளார்கள். தாவோ போன்ற தத்துவத்தை உலகத்துக்கு தந்தவர்கள் அவர்கள். அதில் சிறந்த சில கவிதைகளின் தொகுப்பு இந்நூல். கடந்த 20 வருடங்களாகவே நான் தொடர்ந்து கவிதைகள் படித்து வருகிறேன். ஒரு விஷயத்தை எப்படி எளிமையாக பார்ப்பது, எப்படி சுருக்கமாக பார்ப்பது, எப்படி அழகாக, நுட்பமாக பார்ப்பது என்பதை கவிதைகள்தான் எனக்கு தருகிறது. இதனால் என் மொழியின் வளம் கூடுவதை நான் உணர்கிறேன்.
The Uses Of Enchantment – Bruno Bethlehem
குழந்தைகளுக்கு கதைகளை ஏன் சொல்ல வேண்டும், குழந்தைகள் ஏன் கதைகளை படிக்க வேண்டும் என்பதைப் பற்றி சொல்லும் மிக முக்கியமான நூல் இது. இதன் ஆசிரியர் புருனோ பெத்லஹேம், நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் சிக்மண்ட் பிராய்ட் பள்ளி பின்புலத்தில் இருந்து வந்தவர். எனவே, பிராய்ட் தத்துவம் தெரிந்தவர்களுக்கு இன்னும் விருப்பமானதாக இந்த புத்தகம் இருக்கும்.
Counterpoint – Philip Kennicott
இன்னொரு மனிதனை அறிவதன் அர்த்தம் என்ன என்பதை மிக அழகாக நமக்கு உணர்த்தக்கூடிய நூல் இது. இதன் ஆசிரியர் பிலிப் கென்னிகாட் புலிட்சர் பரிசு பெற்ற விமர்சகர். தனது தாயை இழந்த கென்னிகாட் அந்த துயரத்தில் இருந்து தாய் கற்றுத்தந்த ஆழ்நிலை இசையுடன் எப்படி மீண்டு வந்தார் என்பதைச் சொல்லும் அழகான நினைவுக் குறிப்பு.
Zen And The Art Of Motorcycle Maintenance – Robert M. Pirsig
மிகச் சிறந்தது என்றால் என்ன என்பது பற்றி மிக எளிமையாக சொல்லித் தரும் புத்தகம் இது. 1970களில் இந்த புத்தகம் வந்தபோது உலகத்தையே புரட்டிப் போட்டது. இன்று படிக்கும்போது புதியதாக இருக்கிறது, இன்னும் 10 ஆயிரம் வருடத்துக்குப் பிறகும் இந்த புத்தகம் படிக்கப்படும் என்று நினைக்கிறேன். ஒரு மோட்டார் சைக்கிளின் பிரச்சினைப் பற்றி பேசி, அதன் வழியாக வாழ்க்கையை பேசி, ஜென் தத்துவத்துக்குள் செல்கிறார். இந்த நூலை முதன்முதலாக படிக்கும்போது எனக்கு 18 வயது. இதுவரை ஐந்து முறைக்கு மேல் படித்திருப்பேன். வாழ்க்கை முழுவதும் படிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
Both Flesh And Not – David Foster Wallace
இதன் ஆசிரியர் டேவிட் ஃபாஸ்டர் வாலஸ் என்னைப் போன்றவர்களுக்கு மிகப்பெரிய ‘கல்ட் பிகர்.’ அமெரிக்காவின் டென்னிஸ் வீரர். நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றிருக்கிறார். இவர் எழுதிய கட்டுரைகள் தொகுப்பு இந்த நூல். இந்த நூலில் ஜேம்ஸ் கேமரூனின் ‘டெர்மினேட்டர்’ பற்றி எழுதியுள்ள கட்டுரை மிக முக்கியமானது. திரைத்துறையில் இருப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது. என் உதவி இயக்குநர்கள் எல்லோரையும் இந்த நூலை படிக்கச் சொல்வேன். அந்தளவு இந்த நூல் எனக்கு மிகவும் பிடித்தது.
Selected Writings – Heinrich Von Kleist
டால்ஸ்டாய் காலகட்டத்துக்கு முந்தினவர் ஹென்ரிச் வான் க்ளீஸ்ட். மிக வித்தியாசமான ஒரு எழுத்தாளர். நான் படித்தவற்றில் மிகச் சிறந்த ஒரு கதையை சொல்லச் சொன்னால் இவருடைய கதையைத்தான் சொல்வேன்.