தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதிய தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. மொத்தம் 60 நிறுவனங்கள் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொண்டன. இதன்மூலம் புதிதாக 1.25 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்துக்கு வரும், 74,898 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ரூ.1,494 கோடி முதலீட்டில் முடிவுற்ற 12 நிறுவனங்களின் புதிய திட்டங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மகாராஷ்டிரா: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி
மகாராஷ்ராவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் இந்த ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து கடந்த புதன் கிழமை உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாளே அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவி ஏற்றார்.
இதனையடுத்து, ஏக்நாத் ஷிண்டே அரசு பெரும்பான்மையை நிருபிக்க 3, 4 ஆகிய தேதிகளில் 2 நாள் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தசூழலில் இன்று (திங்கட்கிழமை) மராட்டிய சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே 164 – 99 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக பள்ளிகல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் 1.6.2022 நிலவரப்படி காலியாகவுள்ள 13 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த தற்கால ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் நாளை மறுநாள் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களிடம் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ சமர்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் காலரா பரவல்: 144 தடை உத்தரவு அமல்
காரைக்காலில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில், குடிநீா் எடுக்கும் பகுதி, குடிநீா் தொட்டி மூலம் விநியோக்கும் பகுதி, குடியிருப்புகளுக்கு குடிநீா் குழாய் செல்லும் பகுதிகள் ஆய்வுசெய்யப்பட்டது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிலரையும் பரிசோதித்த நிலையில், அது காலராவுக்கான அறிகுறியாக தெரியவந்தது. இதையடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசர நிலையை, நேற்று முதல் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனரகம் அறிவித்தது.
இந்நிலையில், காலரா நோய் பரவல் காரணமாக காரைக்காலில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். இன்று மாலை முதல் மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மீண்டும் வேகமாக அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 16,135 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 24 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 1,13,864 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ள மத்திய அரசு, விமான நிலையங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.