“தங்களுடன் கூட்டணி வைத்த கட்சிகளை ஒவ்வொன்றாக விழுங்கி வருகிறது பாஜக. இதற்கு சமீபத்திய உதாரணம் சிவசேனா. மகாராஷ்டிர மாநிலத்தில் சுமார் 25 ஆண்டுகாலம் தங்கள் கூட்டணியில் இருந்த சிவசேனாவையே இப்போது பாஜக பிளந்திருக்கிறது. அடுத்து அவர்களின் கவனம் அதிமுக மீது திரும்பலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதற்குள் அதிமுக சுதாரித்துக் கொண்டால் அவர்களுக்கு நல்லது” என்றவாறு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“சரியாகத்தான் சொல்கிறாய் ஆனால் அவர்களுக்குள் இருக்கும் சண்டை முடிந்தால்தானே அடுத்ததாக பாஜகவைப் பற்றி கவனிக்க முடியும்?”
“தொண்டர்களும் இதைப் பற்றித்தான் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.”
“நீ சொல். திட்டமிட்டபடி அதிமுகவின் பொதுக்குழு கூடுமா? கூடாதா?”
“நிச்சயம் நடக்கும் என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள். வானகரம் மண்டபத்தையே மீண்டும் புக் செய்திருக்கிறார்கள். ஆனால் நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நீதிமன்றத்தில் என்ன நடக்கும் என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவரைப் பொறுத்தவரை, ‘கட்சி நம் கட்டுக்குள் இருக்கிறது, அது போதும். பொதுச்செயலாளர் பதவி எப்போது வேண்டுமானாலும் வரட்டும்’ என்று இருக்கிறார். அடுத்த கட்ட நடவடிக்கையாக மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்திக்க போகிறார். ஆனால் காய்களை ஜாக்கிரதையாக நகர்த்தி வருகிறார். ஒரு விஷயம் கவனித்தீர்களா? முணுக்கென்றால் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த ஜெயக்குமார் இப்போது மீடியா பக்கமே வருவதில்லை”
“அதானே. இப்ப கொஞ்ச நாள் அவரைக் காணோமே. என்ன காரணம்?”
“ஜெயக்குமார் இனி கொஞ்ச நாட்களுக்கு செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என்பது எடப்பாடி உத்தரவாம். ஜெயக்குமாரை எதிர்த்து பேசும் ஓபிஎஸ் தரப்பினர் அவரது தனிப்பட்ட விஷயங்களை எல்லாம் கிளறி தவறான பிம்பத்தை உருவாக்குகிறார்கள், அதனால் அமைதியாக இருக்க சொல்லியிருக்கிறாராம். சமீபத்தில் பெங்களூரு புகழேந்தி ஜெயக்குமாருக்கு பதில் அளிப்பதாக கூறி அவரை பர்சனலாக போட்டுத் தாக்கினார் எனவே இனிமேல் சிவி சண்முகம் மட்டும் தான் பேசுவார் மற்றவர்கள் பேச வேண்டாம் என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள்.”
“சி.வி.சண்முகம் உணர்ச்சிவசப்பட்டு தன் நிலை மறந்து பேசுவாரே…அது பரவாயில்லையா?”
“இப்போதைக்கு எடப்பாடி கோஷ்டியில் சி.வி.சண்முகம் கை ஓங்கியிருக்கிறது. அவரை எதிர்த்து யாரும் பேச இயலாது என்பதால் அவருக்கு அனுமதி கிடைத்திருக்கிறது”
“ஓபிஎஸ்ஸை திமுக மறைமுகமாக தூண்டி விடுவதாக எடப்பாடி தரப்பினர் கூறி வருகிறார்களே?”
“வேலுமணி வழக்கை தமிழக அரசு துரிதப்படுத்துவதற்கு பன்னீர்செல்வம்தான் காரணம் என்பது சி.வி.சண்முகத்தின் கருத்து. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் முதல்வரை சந்தித்தை வைத்து இப்படி சொல்கிறார். முன்பு சசிகலாவும் இதே குற்றச்சாட்டை ஓபிஎஸ் மீது வைத்தார். ஸ்டாலினைப் பார்த்து சிரித்தார் என்று குற்றஞ்சாட்டினார் சசிகலா அப்போது. அதிமுகவில் ஒருவரை கீழிறக்க வேண்டுமென்றால் அவருக்கு திமுகவுடன் உறவு என்று கூறினால் போதும் அதிமுக தொண்டர்கள் வெறுப்பாகிவிடுவார்கள். அதைதான் இப்போது ஓபிஎஸ்க்கு எதிராக சி.வி.சண்முகம் பயன்படுத்துகிறார்”
“பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திரௌபதி முர்மு 2-ம் தேதி சென்னை வருகிறாரே?”
“அதிலும் ஒரு விஷயம் இருக்கிறது. சென்னைக்கு வரும் திரௌபதி முர்மு, திமுக தலைமை அலுவலகமான அறிவாலத்துக்கு சென்று அக்கட்சியின் ஆதரவை கோருவார் என்று கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட எடப்பாடி தரப்பினர், திரௌபதி முர்மு நம்மையும் முறையாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் வந்து சந்தித்து ஆதரவு கேட்கட்டும். அப்போதுதான் நமது வலிமை என்ன என்று அவர்களுக்கு புரியும் என்கிறார்களாம். அதனால் அவரை அதிமுக தலைவர்கள் தாங்களாக வலியப் போய் சந்திப்பார்களா அல்லது திரௌபதி முர்மு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவரா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.”
“சசிகலாவின் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதே?”
“அவருக்கும் இதில் ஷாக்தான். அதிமுகவுக்கு நான்தான் பொதுச்செயலாளர். டெல்லியில் இருந்து என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் நெருங்கிய வட்டாரத்தில் சொல்லிக்கொண்டிருந்தார் சசிகலா. ஆனால் அமலாக்கத் துறை சசிகலாவுக்கு சொந்தமான 15 கோடி ரூபாய் சொத்தை முடக்கியதும் ஷாக்காகி விட்டாராம். சசிகலா அதிமுகவை சொந்தம் கொண்டாடுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்று எடப்பாடி தரப்பினர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.”
“தலைமைச் செயலக விஷயங்கள் ஏதும் இருக்கிறதா?”
“மகளிருக்கு இலவச பயணம், மூத்த குடிமக்களுக்கு இலவச பாஸ் என்றெல்லாம் சலுகைகள் இருப்பதால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வசூல் கொஞ்சம் குறைச்சல்தான். இதனால் ஓட்டுநர், நடத்துநர் இருவருக்குமான வசூல் பேட்டா குறைந்து கொண்டு இருக்கிறது. தினந்தோறும் கிடைக்கும் இந்த வசூல் பேட்டாவை வைத்துத்தான் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அன்றாட செலவை சமாளிப்பார்கள் இப்போது அதற்கே சிக்கல் என்பதால் இதுபற்றி முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும் இந்நாள் வீட்டு வசதி அமைச்சருமான முத்துசாமியை சந்தித்த தொழிற்சங்கத்தினர், ‘இந்த வசூல் பேட்டா நீங்கள் தொடங்கியதுதான் இப்போது இப்படி ஆகிவிட்டது’ என்று சொல்ல அவர் உடனே முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்றுள்ளார். உடனே முதல்வர் சாதாரண பேருந்துகளை ஓட்டும் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு இரண்டு மடங்கு பேட்டா என்று அறிவித்தார். இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முத்துசாமியை சந்திக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம்.”
“நல்லது நடந்தால் சரி.”
“மக்கள் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக நாங்கள் திமுக ஆட்சியையும் எதிர்த்து போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் இருவரும் நிருபர் சந்திப்பின்போது கூறியிருக்கிறார்கள். இது சமீபத்தில் முதல்வரின் காதுக்கும் போனது. உடனே இரண்டு மூத்த அமைச்சர்களை அழைத்து அவர்களுக்கு உண்மையில் என்ன பிரச்சனை என்று கேளுங்கள் போராட்டம் அவர்கள் உரிமை அதில் நாம் தலையிட மாட்டோம். அதேசமயம் அவர்கள் சொல்வது எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியாது மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் எப்போது செய்ய வேண்டும் என்பது நமக்கு நன்றாக தெரியும் என்பதை அவர்களுக்குப் புரியும்படி விளக்கி சொல்லுங்கள் என்று சொன்னாராம். மூத்த அமைச்சர்கள் போய் சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும் செங்கொடி கட்சிக்காரர்கள் அதே பாணியில்தான் இப்போதும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.”
”கூட்டணியை சமாளிப்பது லேசுப்பட்ட விஷயமா? நாடாளுமன்றத் தேர்தல் வரை இழுத்துப் பிடிக்க வேண்டுமே”