ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் சண்முகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு ஒன்று முன்வைக்கப்பட்டது. அதில், “அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேனை நியமித்து இயற்றப்பட்ட தீர்மானத்துக்கும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்புக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் விதமாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஜூலை 11-ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டார். அதேநேரம் சண்முகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாகவும் நீதிபதி துரைசாமி அமர்வு தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி இடைத் தேர்தல் – புறக்கணிக்கும் அதிமுக
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பில் காலியாக உள்ள 510 பதவிகளுக்கு ஜூலை 9-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறும் நிலையில், வேட்பு மனுவில் உள்ள படிவத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாமல் உள்ளதால், அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டாலும் அவர்களுக்கு சுயேச்சை சின்னங்களே ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகள் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு – ஊழியர்கள் மீது நடவடிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ராணிபேட்டை மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்லும் போது, காரைக்கூட்ரோட்டில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அவ்வில்லத்தில் உள்ள மாணவர்களிடம் பாடம் நடத்தும் முறை குறித்தும், வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். ஆசிரியர்களிடம் அம்மாணவர்களை உயர்கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டும் என்றும், அவர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக அந்த இல்லத்தில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்த முதல்வர், ஆய்வின்போது, பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களிட்ம் விளக்கம்கோரி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டாம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழக பள்ளிக் கல்வித்துறை, பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்திருந்தது. இவ்வாறு, நிரப்படும் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடி கல்வியில் பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று சென்னை DPI வளாகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கான தேர்வர்கள் மொட்டை அடித்து அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். 13,331 தற்காலிக ஆசிரியர் பணியை வாபஸ் பெற்று, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் எழுப்பியுள்ளார்கள்.
இதனிடையே, பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பல் துலக்காமல் முத்தமிட்டதால் சண்டை: மனைவியை கொலை செய்த கணவன்
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவரது மனைவி தீபிகா. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. அவினாஷ், கர்நாடகா மாநிலம் பெங்களூரூவில் வேலை பார்த்து வருகிறார். குடும்பத்தினர் பாலக்காட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்த அவினாஷ், சம்பவத்தன்று காலையில் தூங்கி எழுந்ததும் தனது மகனுக்கு முத்தம் கொடுத்தார். அப்போது அவரது மனைவி தீபிகா, பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்க கூடாது என கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அவினாஷ், கத்தியால் மனைவி தீபிகாவை சரமாரியாக குத்தினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, தீபிகாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தீபிகா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவினாசை கைது செய்தனர்.