ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை (24-ம் தேதி) பாராளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. திரவுபதி முர்முவின் வேட்புமனுவை பிரதமர் மோடி முதலில் முன்மொழிவார் என தெரிய வந்துள்ளது
விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி நலம் விசாரிப்பு
நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரேமலதாவிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். விஜயகாந்துக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். மேலும், விஜயகாந்த் விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று முதல் 26ஆம் தேதி வரை தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
அரசு பங்களாவை காலி செய்தார் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிராவில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழலில் அம்மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே தனது அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்துவிட்டு சொந்த வீடான மாதோஸ்ரீக்கு திரும்பினார்.
மகராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அம்மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுடன் சிவசேனா கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் ஏக்நாத் ஷிண்டே நிபந்தனை விதித்துள்ளதால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே தனது குடும்பத்துடன் மகாராஷ்டிர முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘வெர்ஷா’விலிருந்து வெளியேறி தனது சொந்த பங்களாவான ‘மாதோஸ்ரீ’க்கு சென்றார். மகாராஷ்டிர அரசியலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை – காரைக்காலில் பள்ளிகள் திறப்பு
புதுவை, காரைக்காலில் கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
முன்னதாக பள்ளிகளில் வகுப்பறைகள் சுத்தீகரிக்கப்பட்டு கட்டிடங்களில் பழுதுகள் சீரமைக்கப்பட்டன. ஸ்மார்ட் வகுப்பறைகளில் எலக்ட்ரானிக்ஸ் சாதனைங்கள் முறையாக செயல்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டன. இன்று காலை அரசு பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர் – ஆசிரியைகள் இனிப்பு வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.