10 மற்றும் 12-ம் வகுப்புகளின் ரிசல்ட் இன்று காலை வெளியாகியுள்ளது. அதில் வாங்கிய மதிப்பெண்களைக் காட்டி சில மாணவர்கள் பெருமை பட்டுக்கொண்டு இருக்க, வேறு சிலரோ யாராவது மார்க்கை கேட்டு விடுவார்களோ என்று வீட்டுக்குள்ளேயே பதுங்கிக் கிடக்கிறார்கள்.
இது ஒரு பக்கமென்றால் மற்றொரு பக்கத்தில் பிளஸ் 1 மற்றும் கல்லூரி அட்மிஷனுக்காக பெற்றோர் அலைகிறார்கள். மாணவர்களைப் பொறுத்தவரை 3 வகை உள்ளது. முதலாவது நன்றாக படிக்கும் மானவர்கள். இரண்டாவது வகை படிப்புக்கும் நமக்கும் சரிபட்டு வராது என்ரு மனதளவில் முடிவு கட்டி வைத்திருக்கும் கடைசி பெஞ்ச் மாணவர்கள். இது இரண்டிலும் சேராத மானவர்களை மிடில் பெஞ்ச் மாணவர்கள் என்று சொல்லலாம். இவர்கள் கடுமையாக படிப்பார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் வராது. அப்படிப்பட்ட மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல ஆயிரம் பேர் இருப்பார்கள். ஆனால் அவர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பார்ப்போம்.
நீங்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை தெரிந்துகொள்ளும் முன் ஒரு விஷயத்தை உங்கள் மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைத்திருப்பது நல்ல மதிப்பெந்தான் என்பதை முதலில் உங்கள் மனதுக்குள் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே பாராட்டாவிட்டால் வேறு யார் பாராட்டுவார்கள். அதனால் முதலில் மனதளவில் நீங்கள் நிமிர்ந்து நிற்க வேண்டும். நீங்கள் வாங்கிய மதிப்பெண் உங்கள் புரிதல், ஞாபக சக்தி மற்றும் கவனித்தல் திறனின் அடிப்படையில் நீங்கள் ஆன்சர் ஷீட்டை நிரப்பியதுக்கான மதிப்பெண்தான். உங்களுக்கு இருக்கும் அறிவுக்கும் திறமைக்கும் மார்க் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இனி நீங்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பார்ப்போம்:
அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் பள்ளி, கல்லூரிகளில் அட்மிஷனுக்காக வரிசையில் நிற்காதீர்கள். நீங்கள் வாங்கிய மதிப்பெண்ணை மதித்து நீங்கள் கேட்கும் குரூப்பையும் கோர்ஸையும் கொடுக்கும் எந்த நிறுவனமும் சிறந்ததுதான்.
புகழ்பெற்ற கல்லூரியில் படிப்பதுதான் கவுரவம் என்று நினைக்காதீர்கள். படிக்கும் பிள்ளைகளுக்கு கற்றுத்தரும் எல்லா நிறுவனமுமே சிறந்த நிறுவனம்தான்.
உங்கள் குடும்பச் சுமையை ஏற்றும் அளவுக்கு ஃபீஸ் வாங்கும் பள்ளி கல்லூரிகளில் சேராதீர்கள். அளவான ஃபீஸில் படித்தாலும் வாழ்கையில் வெல்ல முடியும்.
எந்த பள்ளி கல்லூரிக்கும் கேப்பிடேஷன்/ டொனேஷன் கொடுத்து சேராதீர்கள்.
பிடிக்காத குரூப்பிலோ, கோர்சிலோ யார் கட்டாயப்படுத்தினாலும் சேராதீர்கள். நீங்கள் விருப்பப்படும் படிப்பைப் பற்றி உங்கள் பெற்றோருடன் அல்லது அந்த துறை நிபுணர்களிடம் கலந்து பேசி முடிவெடுங்கள்.
நீங்கள் விருப்பப்படும் படிப்புக்கு எதிர்காலம் என்ன என்பதை தீர விசாரியுங்கள். உங்களுக்கு பிடிக்கிறதென்று படித்துவிட்டு எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் இல்லாமல் சிரமப்படக் கூடிய சூழலைத் தவிர்க்க முயற்சியுங்கள்.
மதிப்பெண் வாழ்க்கையின் எல்லையோ முற்றுப்புள்ளியோ அல்ல. இதுவும் வாழ்கையில் ஒரு படி தான். மதிப்பெண் குறைந்ததால் எந்த தவறான முடிவையும் தேடிக்கொள்ள வேண்டாம். மனதில் தவறான எண்ணங்கள் தோன்றினால், யாருடனாவது கலந்து பேசுங்கள். மனதை அமைதியாக்குங்கள்.
உங்கள் பெற்றோர் பாடுபட்டு உங்களை படிக்க வைத்திருப்பார்கள். உங்கள் மதிப்பெண் குறைந்ததால் அவர்கள் உங்களை திட்டலாம். அவர்கள் கோபம் சற்று தணியும் வரை பொறுமையாக இருங்கள். எப்போதும் உங்கள் குடும்பம் உங்கள் நலனைத்தான் சிந்திக்கும்.
ரெக்கமண்டேஷன் தேடி அலையாதீர்கள். பள்ளி கல்லூரியில் சேர யாருடைய ரெகமண்டேஷனையும் பயன்படுத்தாதீர்கள். எல்லா நிறுவனமுமே சிறந்தது தான். கல்வி கற்க, கற்றுக்கொள்ளும் ஆர்வமும் திறனும் போதுமானது.
அடுத்த 2 விஷயங்கள் பெற்றோருக்கானது…
எந்த சக மாணவனையோ, மாணவியையோ உங்கள் மகன் மகளுடன் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொருவரும் தனித்துவமான திறன் கொண்டவர்கள். இப்படி ஒப்பிடுவது உங்கள் குழந்தைகளின் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கும். உயர வேண்டும் என்ற எண்ணத்தை ஒருபோதும் ஏற்படுத்தாது.