No menu items!

நூற்றாண்டை கொண்டாடும் ’ஹரிவராசனம்’ – மானா பாஸ்கரன்

நூற்றாண்டை கொண்டாடும் ’ஹரிவராசனம்’ – மானா பாஸ்கரன்

ஒரு சொல் போதும்… ஆன்மிக அன்பர்களின் உள்ளத்தில் அந்த ஒற்றைச் சொல் ஊஞ்சல் கட்டிவிடும். ஒரு பாடல் போதும். ஆன்மிக அன்பர்களின் உள்ளத்தில் அந்த ஒரு பாடல் தேரோட்டமே நிகழ்த்திவிடும்.

அப்படித்தான் இப்போதும் ஐயப்ப பக்தர்களின் உள்ளத்தை அசையும் தேராக்கிக் கொண்டிருக்கிறது ’ஹரிவராசனம் விஸ்வமோஹனம்’ எனும் பக்திப் பாடல். அந்தப் பாடல் பிறந்து தவழ்ந்து வளர்ந்து இன்று நூற்றாண்டைக் கொண்டாடுகிறது. ஆம் அப்பாடலின் வயது நூறு.

‘ஹரிவராசனம் பாடலை எழுதியார் யார் என்பதில் 2 கருத்துகள் உள்ளன. 1900-களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேல்சாந்தியாக இருந்த அனந்தகிருஷ்ண ஐயர் என்பவரின் மகளான கொன்னக்காடு ஜானகி அம்மா, இப்பாடலை எழுதினார். இந்த பாட்டு அனந்தகிருஷ்ண ஐயரைக் கவர, தினமும் கோயில் நடை சாத்துவதற்கு முன் சந்நதியில் இந்த பாடலைப் பாடுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார்.

அவருக்குப் பின் வந்த மேல்சாந்திகளும் இதே முறையை பின்பற்றினர் என்பது ஒரு சாராரின் கருத்து. அதேநேரத்தில் கும்பக்குடி குளத்தூர் ஐயர் என்பவர் இந்த பாடலை இயற்றியதாக மற்றொரு தரப்பினர் சொல்கிறார்கள்.

இயற்றியவர் யாராக இருந்தாலும், இந்த பாடல் பெரும்பாலானவர்களைச் சென்று சேருவதற்கு கே.ஜே.ஜேசுதாஸின் குரலும் ஒரு காரணமாக இருந்தது. ஜி.தேவராஜன் மாஸ்டரின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸின் குரலில் அப்பாடலை கேட்டு உருகாதார் ஒரு பாடலுக்கும் உருகார்.

பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டுசெல்லும் அனைத்து ஐயப்ப பக்தர்களின் நெஞ்சங்களிலும் பத்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் ‘ஹரிவராசனம்’ பாடலைப் பற்றி பல்லாண்டுகளாக சபரி மலை யாத்திரை சென்று வரும் ஹரிதாஸ் சுவாமிகளிடம் கேட்டோம்.

‘’சபரிமலையில் பல வருஷங்களாக இந்தப் பாடல் பாடப்பட்டு வருகிறது. மலையில் குடியிருந்துகொண்டு இந்தப் பூவுலகை ரட்சிக்கும் ஐயப்ப சுவாமியை உறங்க வைப்பதற்காக ’ஹரிவராசனம் விஸ்வமோஹனம்’ என்கிற இந்தப் பாடல் பாடப்படுகிறது. உறக்கப் பாட்டு எனும் வகைமையில் அடங்கும் இந்தப் பாடலை எல்லா நேரங்களிலும் பாட மாட்டார்கள்.

சபரிமலையில் தினந்தோறும் அத்தாழ பூஜை என்றழைக்கப்படும் அர்த்தசாம பூஜை நடைபெறுவது காலகால வழக்கம். இந்த பூஜை முடிந்த பின்பு இரவில் சபரிமலை திருத்தலத்தின் நடை சார்த்துவ தற்காக இந்தப் பாடல் ஒலிக்கப்படும்.

சபரிமலையின் விழா நாட்களில் விரதம் இருந்து பக்தி பரவசத்துடன் கூடும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் மத்தியில் கோயிலின் நடை சார்த்தப்படும்போது ‘ஹரிவராசனம்’ பாடல் பாடினால் அந்த சபரி மலையே அமைதியின் தொட்டிலாகும். கேட்பவர் நெஞ்சத்தில் கருணை இமை திறக்கும்’’ என்று உணர்வின் இமைகள் படபடக்க சொன்னார் ஹரிதாஸ் சுவாமிகள்.

’ஹரிவராசனம்’ பாடலின் தொடக்க வரிகளின் பொருளை சொன்னார் ஐயப்ப பக்தர் மனோகரன்: ‘’ ‘ஹரிவராசனம் விஸ்வமோகனம்/ ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்/அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்/ ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே’ என்பதற்கு ஹரியின் ஆசி கள் நிறைந்து இந்தப் பேரண்டத்தை இயக்குபவரே/ஹரியின் அருளின் சாராம்சமாக இருப்பவரே/ அய்யனே உனது தெய்வீகப் பாதங் களை நாங்கள் வணங்குகிறோம்/.தீயசிந்தனைகளை அழிப்பவரரே/ இந்த அண்டத்தை ஆள்பவரே/ ஹரி ஹர புதல்வரே/. உன்னிடம் அடைக்கலமானோம் அடைக்கலமானோம்’ என்பதுதான் இதற்கு அர்த்தம்’’ என்றார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 1950-ம் ஆண்டில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. அதைத் தொடந்து தேவ பிரஸ்ஸன்னம் பார்க்கப்பட்டு, உடனடியாக சாஸ்தா கோயில் சீரமைக்கப்பட்டது. அதேவேளையில் நடை சார்த்தும்போது வழக்கத்தில் இருந்த புல்லாங்குழல் இசைக்கும் நடைமுறையையும், ஸ்லோகமாக மட்டுமே சொல்லப்பட்ட ‘ஹரிவராசனம்’ கீர்த்தனையையும் அப்போது கோயில் மேல்சாந்தியாக இருந்த ஈஸ்வரன் நம்பூதிரி மாற்றியமைக்க விரும்பினார்.

அவரது மேலான ஆலோசனைப் படி அத்தாழபூஜைக்குப் பிறகு ஐயப்ப சுவாமியை உறங்க வைக்கும் பாடலாக ’ஹரிவராசனம்’ பாடல் உருமாறியது என்கிறது ஐயப்ப கோயில் தகவல் திரட்டு.

1978-ம் ஆண்டில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளிவந்த ’சுவாமி ஐயப்பன்’ என்கிற படத்தில் தேவராஜ் மாஸ்டர் இசையில் கே.ஜே.ஜேசுதாஸின் வசீகரக் குரலில் ’ஹரிவராசனம்’ பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, உலகம் முழுவதும் எதிரொலித்தது மலையின் பாடல். அன்றிலிருந்து அந்தப் பாடல் சபரிமலை மட்டுமின்றி உலகம் முழுக்க பிரபலமானது.

நூற்றாண்டைக் கொண்டாடும் ஹரிவராசனத்தைச் சிறபிக்கும் வகையில் ’ஹரிவராசனம்’ நூற்றாண்டு விழா குழுக் கூட்டம், இன்று (11.6.2022) சென்னை வானகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய பொதுச்செயலாளர் ஈரோடு ராஜன் கூறியதாவது:- ‘’ ’ஹரிவராசனம்’ பாடல் இயற்றப்பட்டு நூறாண்டு நிறைவடை வதையொட்டி, தேசிய அளவில் ’ஹரிவராசனம்’ நூற்றாண்டு விழாக் குழு அமைத்து தொடர்ந்து 18 மாதங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நடத்த சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் திட்டமிட்டுள்ளது.

இன்று நடைபெறும் அதற்கான கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, ‘ஹரிவராசனம்’ நூற்றாண்டு விழா இலட்சினையை வெளியிடுகிறார். இக்கூட்டத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இசையமைப்பாளர் இளையராஜா, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த சோபன் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர் என்றார்.

புன்னகையின் நேர்க்கோடாக, புனிதத்தின் நிழற்சாலையாக நூறாண்டுகளைத் தாண்டியும் மனிதச் செவிகளைக் கவுரவிக்கும் ‘ஹரிவராசனம்’.

3 COMMENTS

  1. அருமையான தகவல்
    கேட்கும்போதே மனதை உருக்கும் அமைதியின் சின்னமாக இப்பாடலை அனுபவிக்கிறோம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...