இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்ல சர்வதேச மகளிர் கிரிக்கெட்டிலேயே ஒரு நீண்ட சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. 23 ஆண்டுகளாக மகளிர் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் விளையாடிய மிதாலி ராஜ், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் எப்படியோ, அப்படித்தான் மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ். 1999-ல் அவர் கிரிக்கெட் ஆட வருவதற்கு முன் இந்திய மகளிர் அணிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அங்கீகாரம் இல்லை. மிதாலி வந்த பிறகுதான் இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு ஒரு புத்துணர்ச்சி வந்தது. மைதானத்தில் அவர் ரன் மழை பொழிய இந்தியாவுக்கு வெற்றிகள் குவிந்தன.
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த வீராங்கனை, சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 2-வது வீராங்கனை, ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என கிரிக்கெட் உலகில் மிதாலி ராஜ் படைத்த சாதனைகள் ஏராளம்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் பல போட்டிகளில் இருந்துள்ளார். இவரது தலைமையின் கீழ் இந்திய அணி 2 முறை உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் இத்தனை சாதனைகளை படைத்த அவர், இத்துறைக்கு வர முக்கிய காரணம் தூக்கம். சிறு குழந்தையாக இருக்கும்போது மிதாலி அதிக நேரம் தூங்குவாராம் மிதாலியின் இந்த தூக்கத்தைப் போக்க என்ன வழி என்று அவரது அப்பா யோசித்துள்ளார். இந்த நேரத்தில் மிதாலி ராஜின் அண்ணன் தினமும் கிரிக்கெட் ஆட பயிற்சி பெற்றுக்கொண்டு இருந்தார். எனவே மிதாலியின் தூக்கத்தைக் குறைக்க, அவரையும் அண்ணனுடன் கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பத் தொடங்கினார். மிதாலி ராஜுக்கு கிரிக்கெட் அறிமுகமானது அப்படித்தான்.
சிறுவயதில் மிதாலிக்கு பரதநாட்டியம் மிகவும் பிடிக்கும். தினமும் மாலையில் பரதநாட்டிய வகுப்புக்கு ஆர்வத்துடன் செல்லும் மிதாலி, கிரிக்கெட் பயிற்சிக்கு மட்டும் காலையில் வேண்டா வெறுப்பாக தூங்கி வழிந்துகொண்டு செல்வார்.
அண்ணனுடன் அதிகாலையில் பைக்கில் செல்லும்போதே பின்னால் தூங்கிக்கொண்டு செல்வது மிதாலியின் வழக்கமாக இருந்தது.
ஒருநாள் இதைக் கவனித்த மிதாலியின் கிரிக்கெட் பயிற்சியாளரான ஜோதி பிரசாத், அவரைச் சுறுசுறுப்பாக்க, பீல்டிங் பயிற்சி கொடுத்துள்ளார். அப்போது அவர் பந்தை பீல்டிங் செய்து எறிந்த விதம் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரின் தரத்துக்கு இணையாக இருந்ததால் அவருக்கு மேலும் பயிற்சி கொடுத்துள்ளார். நாளடையில் அவரது பேட்டிங் திறமை பளிச்சிட்டுள்ளது.
சில நாட்களிலேயே அவரது கிரிக்கெட் திறமைகள் மேம்பட, பரதநாட்டியத்தை விட்டு கிரிக்கெட்டை தேர்ந்தெடுக்குமாறு கூறியுள்ளார் பயிற்சியாளர். இந்தியாவில் பெண்களுக்கான கிரிக்கெட் அவ்வளவாக புகழ்பெறாமல் இருந்த காலம் அது.
இருப்பினும் பயிற்சியாளரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, பரதத்தை கைவிட்டு கிரிக்கெட்டில் தீவிரமாக இறங்கியுள்ளார் மிதாலி. அன்று அவர் எடுத்த முடிவுதான் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக அவரை உயர்த்தியுள்ளது.
“கிரிக்கெட்டுக்காக பரதநாட்டியத்தை விட்டது வருத்தமாக இல்லையா” என்று செய்தியாளர்கள் ஒருமுறை அவரைக் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த மிதாலி ராஜ், “நான் பரதநாட்டியத்தை விட்டாலும் அது என்னை விடவில்லை. பரதநாட்டியத்தில் நான் கற்ற சில உடல்மொழிகள், பேட்டிங்கில் சில ஷாட்களை ஆட எனக்கு உதவியாக அமைந்தன” என்று கூறியுள்ளார்.
மிதாலியின் வாழ்க்கை வரலாறு ‘சபாஷ் மித்து’ என்ற பெயரில் பாலிவுட்டில் படமாகி வருகிறது. இதில் மிதாலியின் வேடத்தில் தப்ஸி நடித்து வருகிறார். மிதாலியை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இப்படத்தின் மூலம் தெரியவரும் என எதிர்பார்ப்போம்.