ரிப்பீட்டு… ரிப்பீட்டு… ரிப்பீட்டு… என பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியளித்து வந்தன எண்ணெய் நிறுவனங்கள். சில தினங்களுக்கு முன் ஏற்றியதில் கொஞ்சம் குறைத்து ஆனந்த அதிர்ச்சி கொடுத்தன. அதன் பின்னர் பெரியளவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்து வருகிறது. ஆனால், அதற்குப் பதிலாக வங்கிக் கடன்களுக்கான வட்டியை உயர்த்தி ஷாக் கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி.
கடந்த 36 நாட்களில் இது இரண்டாவது உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், வங்கிகளில் கடன் வாங்கியுள்ளவர்களின் தவணைத் தொகை அதிகரிக்கவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நிதிக் கொள்கைக் குழு ஆய்வுக் கூட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூறியது. ஆனால், அடுத்த மாதமே மே 4 அன்று, ஆர்பிஐ ‘ரெப்போ ரேட்’ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் திடீரென அறிவித்தார். அதாவது 0.4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. பொதுவாக வட்டி விகிதங்களை உயர்த்துவது அல்லது குறைப்பது குறித்த முடிவு நிதிக் கொள்கைக் குழுவின் ஆய்வுக் கூட்டத்தில்தான் எடுக்கப்படும். எனவே, ரிசர்வ் வங்கி ஆளுநர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவ்வளவு வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இதோ இன்னொரு அதிர்ச்சி… ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் மும்பையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து டெல்லியில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “‘ரெப்போ ரேட்’ 0.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது; இந்த உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று அறிவித்துள்ளார்.
0.4 சதவிகிதம் அதிரிக்கப்பட்டு 36 நாட்களே ஆன நிலையில் மீண்டும் ஆர்பிஐ ‘ரெப்போ ரேட்’ 0.5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வங்கிக் கடன் வாங்கியுள்ளவர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சரி, ‘ரெப்போ ரேட்’ என்றால் என்ன? அது சாமானியர்களை எப்படி பாதிக்கும்?
நாம் வங்கிகளில் கடன் பெறுவதைப் போல வங்கிகள் தங்கள் முதலீட்டுக்காக ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்குகின்றன. இதில் குறுகிய கால கடன், நீண்ட காலக் கடன் என இரண்டு வகைகள் உள்ளன. இதில், வங்கிகள் வாங்கும் குறுகிய காலக் கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி ரெப்போ வட்டி எனப்படுகிறது. நீண்ட காலக் கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி, பேங்க் வட்டி எனப்படும்.
இப்போது, ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதனால், ரிசர்வ் வங்கியில் தாங்கள் பெற்றிருந்த குறுகிய கால கடன்களுக்கு கூடுதல் வட்டி கட்ட வேண்டிய நிலை வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் வங்கிகள் இந்த இழப்பை சரிகட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தும் என்பதால் வீட்டுக்கடன், வாகன கடன், விவசாயக் கடன், தனிநபர் கடன் போன்ற பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் விரைவில் அதிகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்கடன், வாகன கடன் பெற்றுள்ளவர்கள் செலுத்தும் மாதத் தவணை அல்லது தவணை காலம் அதிகரிக்கும்.
உதாரணமாக, மே மாதம் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்திய பின்னர் அனைத்து வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தின. இதில் சில வங்கிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கடந்த 36 நாட்களுக்குள் 2-3 முறை வட்டியை உயர்த்தியுள்ளன. இப்போது அவை மீண்டும் உயர்த்த போகின்றன. ரெப்போ வட்டி விகிதம் குறையும்போது சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க மாட்டார்கள். அதேநேரம் வட்டி விகிதம் உயர்ந்தால் உடனே உயர்த்திவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால்
சாமானியர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் அதிக இஎம்ஐ செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் அல்லது தவணை காலம் அதிகமாகும்.
உதாரணமாக, வட்டி விகிதம் உயர்ந்ததால் 10 வருடங்களில் முடிய வேண்டிய கடன் 15 வருடங்களாக அதிகரித்ததும் உண்டு. அதிக இஎம்ஐ செலுத்த வேண்டியிருந்தால் மாத பட்ஜெட்டில் துண்டுவிழும். தவணைக் காலம் அதிகரித்தால் கூடுதலாக அத்தனை வருடங்கள் ஓட வேண்டியிருக்கும்.
இப்போது என்ன செய்ய வேண்டும்?
“வங்கியில் கடன் பெற்றுள்ளவர்கள், ரெப்போ வட்டி விகிதம் குறைந்தாலோ அதிகரித்தாலோ அது வங்கியில் எப்படி எதிரொலிக்கிறது என்பதை தெரிந்துகொள்வது அவசியம். தற்போது கையில் பணம் இருப்பவர்கள் அதனை கட்டி, வங்கிக் கடனை முடித்துக்கொளவது அல்லது கால அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது” என்பதே முதலீட்டு ஆலோசகர்களின் பரிந்துரையாக உள்ளது.