ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் ஜானி டெப். ஆனால் நம்மில் பலருக்கு அவருடைய பெயரைத் தெரியாது. ‘ஜாக் ஸ்பேரோ’ என்று சொன்னால்தான் தெரியும். ‘தி பைரேட்ஸ் ஆப் கரீபியன்’ வரிசைப் படங்களில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் அது. இந்த கதாபாத்திரத்தால் உலகம் முழுவதும் பேசப்பட்ட ஜானி டெப், சமீபத்தில் இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் உள்ள இந்திய ரெஸ்டாரண்டில் தனது மெய்க்காப்பளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு விருந்து கொடுத்த செய்திதான் இப்போது உலகம் முழுக்க வேகமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சிக்கன் டிக்கா போன்ற சாதாரண உணவு வகைகளைக் கொண்ட இந்த விருந்துக்கே ஜானி டெப் 48.1 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளார் என்பதுதான் இதற்கு காரணம்.
இவ்வளவு காஸ்லியாக ட் ரீட் வைக்க என்ன காரணம் என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.
ஜானி டெப்புக்கும் அவரது இரண்டாவது மனைவி ஆம்பர் ஹெர்ட்டுக்கும் 2015-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. ஹாலிவுட் திருமணங்கள் நீண்டநாள் நிலைக்காது என்ற விதிப்படி இந்த ஜோடியும் 2 ஆண்டுகளிலேயே இல்லற வாழ்க்கைக்கு குட்பை சொன்னது.
“ஜானி டெப் அடிக்கடி பிரமை பிடித்தது போல் நடந்துகொள்கிறார். அந்த நேரத்தில் அவருடன் இருப்பது பயமாக இருந்தது. அத்துடன் ஜானி என்னை உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பயமுறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்” என்று ஆரம்ப காலத்தில் விவாகரத்துக்கு காரணம் சொல்லியிருந்தார் ஆம்பர் ஹெர்ட்.
ஆனால் விவாகரத்துக்கு பிறகு அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் உறவு மிகவும் உணர்ச்சிவசப்பட்டது. சில சமயங்களில் நிலையற்றதாக இருந்தது, ஆனால் எப்போதும் அன்பினால் பிணைக்கப்பட்டிருந்தது” என்று தெரிவித்திருந்தனர். மேலும் ஜானி டெப் தனக்கு ஜீவனாம்சமாக அளித்த 7 மில்லியன் டாலர்களை அப்படியே தானம் செய்யப் போவதாகவும் ஆம்பர் ஹெர்ட் தெரிவித்திருந்தார்.
எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருந்த சமயத்தில் 2018-ம் ஆண்டில் பிரபல நாளிதழ் ஒன்றில் ஆம்பர் ஹெர்ட், இளம் வயதில் இருந்து தான் எதிர்கொண்ட குடும்ப வன்முறையை பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் ஜானி டெபின் பெயரை குறிப்பிடாதபோதிலும் அவரது வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் ஜானி டெப் மிகவும் நேசித்து நடித்துவந்த ‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ சினிமா தொடரிலிருந்தும், மேலும் பல திரைப்படங்களிலிருந்தும் நீக்கப்பட்டார்.
ஆத்திரமடைந்த ஜானி டெப், ஆம்பர் ஹெர்ட் மீது 50 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்தார். பதிலுக்கு ஆம்பர் ஹெர்டும், ஜானி டெப் மீது 100 மில்லியன் டாலர் கோரி அவதூறு வழக்கு பதித்தார்.
ஜானி தான் பாதிக்கப்பட்டவர் என வழக்காட, இருவருக்கும் இடையில் இருந்த அந்தரங்க விஷயங்கள் அனைத்தையும் அம்பலப்படுத்தினர். ஒருபுறம் ஆம்பர் போதை பொருட்களுக்கு அடிமையானவர் என்று ஜானி குற்றம் சாட்டினார். மறுபுறம் இந்த வழக்கு நடக்க நடக்க, ஆம்பர் ஹெர்டுக்கு எதிராக சமூக வலைதளம் மாறியது. இந்த வழக்கின் இறுதியில், நீதிபதிகள், இருவருமே இந்த வழக்குகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் இருவருமே அவதூறு வழக்கில் பாதிக்கப்பட்டதால், ஜானி டெப்க்கு ஆம்பர், 15 மில்லியன் டாலர் தரவும், ஆம்பருக்கு ஜானி 2 மில்லியன் தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு தனக்கு சாதகமாக இருந்ததால், மகிழ்ச்சியடைந்த ஜானி டெப் பிர்மிங்காமில் இருந்த இந்திய ரெஸ்டாரண்டை ஒரு மாலை நேரத்துக்கு மொத்தமாக புக் செய்தார். அதில் தன் நெருங்கிய நண்பர்கள் மற்றும் மெய்க் காப்பாளர்களுக்கு மட்டும் ரூ.48.1 லட்சத்தில் ட்ரீட் கொடுத்து அசத்தியுள்ளார்.