No menu items!

நியூஸ் அப்டேட்: ஜூன் 23-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்

நியூஸ் அப்டேட்: ஜூன் 23-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

அதிமுகவில் கடந்த 3 மாதங்களாக உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல மாவட்ட செயலாளர்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றியம், பேரூர் கிளை கழகங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காலியாக இருந்த பதவிகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் வருகிற 23-ந்தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் – இம்ரான் கான் எச்சரிக்கை

பாகிஸ்தானில் அடுத்த பொதுத்தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் உள்நாட்டுப் போர் மூளும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக உள்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த காலத்திலும் அதிகாரம் என்னிடம் முழுமையாக இருந்ததில்லை. எங்கள் கைகள் கட்டப்பட்டிருந்தன. அனைத்து பக்கங்களில் இருந்தும் எங்களை பிளாக்மெயில் செய்துகொண்டு இருந்தார்கள். நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் மூளும்” என்று தெரிவித்துள்ளார்.

சோனியா காந்திக்கு கரோனா தொற்று

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சூரஜ்வாலா அளித்த பேட்டியில், “சோனியா காந்தி கடந்த வாரம் முழுவதும் பல்வேறு தலைவர்கள், செயற்பாட்டாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து கரோனா பரிசோதனை செய்தார். அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவ ஆலோசனையின்படி அவர் மருந்துகளை உட்கொண்டு வருகிறார். அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஜூன் 8-ல் நடைபெறவுள்ள அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராவதில் இதுவரை எந்த சிக்கலும் இல்லை” என்று கூறினார்.

சென்னையில் நாளை முதல் மலர் கண்காட்சி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நாளை முதல் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி போன்ற சிற்பங்கள் காட்சிக்கு வைத்துள்ளனர்.

இந்த மலர் கண்காட்சி நாளை முதல் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பார்வையிடலாம்.

ஹர்திக் படேல் பாஜகவில் இணைந்தார்

காங்கிரஸ் கட்சியில் இருந்து குஜராத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகினார். இந்த நிலையில் அவர் இன்று பாஜகவில் இணைந்தார். குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் முன்னிலையில் அவர் பாஜகவில் கட்சியில் சேர்ந்தார்.

முன்னதாக தனது ட்விட்டர் பதிவில் இதுபற்றி குறிப்பிட்டிருந்த ஹர்திக் படேல், “இன்று முதல் புதிய அத்தியாயத்தை தொடங்க போகிறேன். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாட்டுக்காக உழைப்பேன். ஒரு சிறிய சிப்பாயாக பணியாற்றுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...