சமீர் வான்கடே. மும்பையில் பயம் காட்டிய பெயர் இப்போது தமிழ் நாட்டுக்குள்.
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டதும் பின்னால் விடுவிக்கப்பட்டதும் அறிவோம். அந்த சம்பவத்தை செய்தவர் சமீர் வான்கடே. மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவின் இயக்குநராக பணியாற்றியவர் தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டிருக்கிறார், வரி செலுத்துவோர் சேவை இயக்குநரகத்தின் இயக்குநராக.
நீங்க நல்லவரா கெட்டவரா என்ற ஒரு வசனம் நாயகன் திரைப்படத்தில் வரும். அந்த வசனத்துக்கு பொருத்தமானவர் சமீர் வான்கடே. அவரை நல்லவர் வல்லவர் என்று புகழ்பவர்களும் உண்டு, ஊழல் அதிகாரி என்று விமர்சிப்பவர்களும் உண்டு.
ஆர்யன் கான் வழக்கு அவருக்கு ஒரு கரும்புள்ளிதான். சொகுசு கப்பலில் நண்பர்களுடன் சேர்ந்து போதை பொருள் வைத்திருந்தார் என்று ஆர்யன் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சொகுசுக் கப்பலிலிருந்த ஆர்யன் கான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஆர்யன் கைது செய்யப்பட்டது சர்சையானது.
இது போன்று பிரபலங்களுடன் சர்ச்சக்குள்ளாவது சமீர் வான்காடேவுக்கு புதிதல்ல.
மும்பை விமானநிலையத்தில் உளவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியபோது எடுத்த கடுமையான நடவடிக்கைகள் இன்று வரை பேசப்படுகின்றன.
2011ல் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில் நடந்தபோது, மும்பை வந்த உலகக் கோப்பையை பறிமுதல் செய்தார் வான்கடே. காரணம் உலக் கோப்பை தங்கத்தால் ஆனது அதற்கு சுங்க வரி கட்டினால்தான் கோப்பையைத் தருவேன் என்று கூறினார். சர்வதேச கிரிக்கெட் சங்கம் சுங்கவரியை கட்டிய பிறகே உலகக் கோப்பை விமான நிலையத்தைவிட்டு வெளியில் வந்தது.
2013ல் இந்திய பாப் பாடகர் மில்கா சிங் பாங்காக்கிலிருந்து திரும்பிய போது அவரிடம் 11 ஆயிரம் டாலர்களும், விலையுயர்ந்து மது பாட்டிலும் இருந்தது. இரண்டையும் பறிமுதல் செய்தார் வான்கடே. மில்கா சிங்கை நான்கு மணி நேரம் காவலி வைத்தார். அவருக்கு பெயில் கிடைத்தப் பிறகே வெளியில் வர முடிந்தது.
போதை மருந்து தடுப்பு பிரிவுக்கு மாற்றலாகி வந்தப் பிறகும் அவரது அதிரடிகள் தொடர்ந்தன. அவர் காலக் கட்டத்தில் 17ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தப் பணியில் இருந்தபோதுதான் அவருக்கு பாலிவுட் நட்சத்திரங்களுடன் மோதல் ஏற்பட்டது. நட்சத்திரங்களின் பார்ட்டிகளுக்கு தடாலடியாக சென்று சோதனைகள் நடத்தினார். அனுராக் காஷ்யப், ராம் கோபால் வர்மா, விவேக் ஓபராய் போன்ற பிரபலங்கள் இல்லங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது.
வளரும் நட்சத்திரம் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துக் கொண்ட போது பாலிவுட்டின் போதை வலை குறித்தும் விசாரனைகள் நடத்தப்பட்டன. சுஷாந்த் சிங்கின் தோழி ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டார். தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத், சோஹா அலிகான் ஆகிய நட்சத்திரங்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இவையெல்லாம் பாலிவுட்டை கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில்தான் ஷாருக்கான் மகன் கைது நடந்தது.
இந்தப் பின்னணியைப் பார்க்கும்போது சமீர் வான்காடே மிகவும் நேர்மையானவர் என்ற எண்ணம் வந்திருக்கலாம். ஆனால் இவருக்கு பாராட்டுக்கள் குவியும் அதே வேளையில் விமர்சனங்களும் அதிகமிருக்கின்றன.
ஆர்யன் கான் வழக்கில் இப்போது அதிர்ச்சிகரமான திருப்புமுனை நடந்திருக்கிறது. ஆர்யன் கானின் போதை மருந்தே இல்லை, அவர் மீது வழக்கு போட்டது தவறு என்று போதை பொருள் தடுப்பு ஆணையம் கூறியிருக்கிறது.
இந்த வழக்கிலிருந்து ஆர்யன் கானை விடுவிக்க பணம் கேட்டார் என்ற செய்திகளும் அந்த சமயத்தில் வெளிவந்தன. சமீர் போதை பொருள் தடுப்பு ஆணையத்திலிருந்து மாற்றப்பட்டார்.
பாலிவுட் நட்சத்திரங்களை மடக்குவதாக சோதனைகள் நடத்துவதே அவர்களை மிரட்டி பணம் பறிக்கதான் என்ற குற்றச்சாட்டுக்களும் அவர் மீது உண்டு.
சமீர் வான்கடே மும்பையில் பிறந்து வளர்ந்தவர். சமீர் வான்கடே இந்துவா இஸ்லாமியரா என்ற சர்ச்சையும் உண்டு. அவரது தந்தை இந்து. தாய் இஸ்லாமியர். அதனால் இந்து, இஸ்லாம் கலந்த பெயர்.
சமீரின் திருமணமும் சர்ச்சைக்குள்ளானது. முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மராத்தி நடிகை க்ராந்தி ரெட்கரை திருமணம் செய்துக் கொண்டார்.
இப்படி பல சர்ச்சைகள் சுற்றிக் கொண்டிருக்கும் சமீர் வான்காடே இப்போது சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கிறார். ஆனால் வேறு துறை.
மும்பையை நட்சத்திரங்களை கலங்கடித்த சமீர் இங்கேயும் தன் கைவரிசையைக் காட்டுவாரா?
காத்திருப்போம்.