No menu items!

நியூஸ் அப்டேப்: புதின் 3 ஆண்டுகளே உயிருடன் இருப்பார் – உளவாளி தகவல்

நியூஸ் அப்டேப்: புதின் 3 ஆண்டுகளே உயிருடன் இருப்பார் – உளவாளி தகவல்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ரத்தப் புற்றுநோய் முற்றிவிட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்போகிறார்; அதனால், அவர் தனது அதிகாரங்களை தற்காலிகமாக நிக்கோல் பாத்ருசேவுக்கு வழங்கியிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ‘இண்டிபெண்டன்ட்’ இதழில் ரஷ்ய உளவாளி அளித்த தகவலின்படி, புதினுக்கு புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவர் 3 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம் என்று கணித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, புதினுக்கு நாளுக்கு நாள் கண் பார்வை மங்கி வருகிறது; ஒரு பக்கத்தில் இரண்டே வாக்கியங்கள் என்ற அளவில் வார்த்தைகளை பெரிதாக எழுதினாலே அவரால் அதை வாசிக்க முடிகிறது என்று news.com.au. இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகளவில் வலிமையான விமானப் படை: சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா

உலகளவில் வலிமையான விமானப்படை பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.

98 நாடுகளின் 124 விமானப் படை சேவைகள் மற்றும் 47,140 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, வலிமையான விமானப் படையை கொண்டுள்ள நாடுகள் குறித்து ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா 242.9 புள்ளிகளை பெற்று முதலிடத்தையும் ரஷ்யா 114. 2 புள்ளிகளுடன் 2-ம் இடத்தையும் இந்தியா 69. 4 புள்ளிகளுடன் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் சீனா, ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ் விமானப் படைகளை இந்திய விமானப்படை பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை 2வது நாளாக ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று தஞ்சைக்கு வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே நடந்து வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் 2வது நாளாக இன்றும் டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.  இன்று நாகை கருவேலங்காடை கிராமத்தில் உள்ள கல்லாறு வாய்க்காலில் ஆய்வு செய்த முதல்வர் தொடர்ந்து அப்பகுதி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத் வங்கி கணக்கை முடக்க காவல்துறை முடிவு

கோயில் புனரமைப்பு பணிக்காக, இந்து அறநிலையத்துறை அனுமதி இல்லாமல் செயலி மூலம் ரூ. 36 லட்ச வசூல் செய்து மோசடி செய்ததாக பாஜக ஆதரவாளரும் யூ-ட்யூபருமான கார்த்திக் கோபிநாத் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது இது தொடர்பாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கார்த்திக் கோபிநாத்திடம் செய்யப்பட்ட விசாரணையில் பணம் வசூலிக்க அவர் 2 வங்கி கணக்குகளை பயன்படுத்தி வந்துள்ளதாகவும், மோசடிக்கு அந்த வங்கி கணக்குகளை அவர் பயன்படுத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்த வங்கி கணக்குகளை முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறவினர்களிடம் இருந்து லெஸ்பியன் தோழியை மீட்டு தரக் கோரி கேரளாவில் இளம்பெண் புகார்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். இவரது பெற்றோர் சவுதி அரேபியாவில் வசித்து வந்தனர். ஆதிலா நஸ்ரினும் அங்கேயே பள்ளியில் படித்து வந்தார். அப்போது இவருடன் கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவரும் ஒன்றாக படித்தார். இதில் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள். இந்த நெருக்கம் அதிகமாகி அவர்களுக்கு இடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு கேரளா திரும்பிய ஆதிலா நஸ்ரினும் தோழியும் தாமரை சேரி பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கினர். இதையறிந்த தோழியின் உறவினர்கள் அவரை வலுகட்டாயமாக அங்கிருந்து கடத்தி சென்றனர்.  இது தொடர்பாக ஆதிலா நஸ்ரின் காவல்துறையில் புகார் செய்ததாகவும் அதன் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆதிலா நஸ்ரின், ‘என் தோழியை என்னிடம் இருந்து அழைத்து செல்லும்போது கோர்ட்டில் ஆஜர்படுத்தப் போவதாகவே உறவினர்கள் கூறினார்கள். ஆனால், அவர்கள் கூறியபடி கோர்ட்டில் ஆஜர்படுத்தவில்லை. எனவே, என்தோழியை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தொடரப்போகிறேன்’, எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...