ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள ப.சிதம்பரம், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக தரப்பில் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஒரு இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியது.
அதிமுக தரப்பில் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். தங்களுக்கு ஒதுக்கிய ஓரு சீட்டை ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி வழங்கியது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து ப.சிதம்பரம் வாழ்த்து பெற்றார்.
விமான விபத்தில் 14 உடல்கள் மீட்பு
நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேபாளத்தில் உள்ள போகாராவில் இருந்து 22 பேருடன் புறப்பட்ட தாரா ஏர் என்ற விமானம் நேற்று காலை மயமானது. இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்கள் பயணித்தனர்.
இந்நிலையில், மாயமான விமானம், முஸ்டங் மாகாணத்தில் உள்ள தசங்-2 என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. நேபாள ராணுவ வீரர்கள் 15 பேர் அடங்கிய குழு உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இதுவரையில் 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெஸ்ட் நைல் – கேரளாவில் பரவும் புதிய வைரஸ்
வெஸ்ட் நைல் என்ற புதிய வைரஸ் காய்ச்சலால் கேரளாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேரளாவில் கடந்த சில தினங்களாக வெஸ்ட் நைல் என்ற காய்ச்சல் பரவிவருகிறது. இது கொசுவிலிருந்து பரவுவதாக சொல்லப்படுகிறது. இந்த புதிய காய்ச்சல் குறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்து மக்கள் அச்சடைந்துள்ளனர். இந்த நோயால் ஒருவர் உயிரிழந்தது மக்களின் அச்சத்தை அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த காய்ச்சல் கொசுக்களால் பரவக்கூடிய என்பதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருப்பதியில் தரிசனத்துக்காக பக்தர்கள் 20 மணிநேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரவு 7 மணியளவில் கோயிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லேப்பாட்சி வணிக வளாகம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆனது.
திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் இதுபற்றி கூறும்போது, “வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், பொறுமையை கடைப்பிடித்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
திரையுலக சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் விருது : அரசு உத்தரவு
தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் ‘கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது’ இந்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் ‘கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது’ வழங்கப்படும். வரும் ஜூன் 3-ம் தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
விருதாளரை தேர்வு செய்யதிரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்துராமனை தலைவராகவும், நடிகர்சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரைஉறுப்பினர்களாகவும் கொண்டதேர்வுக் குழுவை அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.
இக்குழு பரிந்துரைக்கும் விருதாளருக்கு விருது தொகை ரூ.10 லட்சம், நினைவுப் பரிசு ஆகியவற்றை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.