நாளை பிரதமர் மோடி சென்னை வருகிறார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைக்கிறார். இதற்கான விழா சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
ஹைதராபாத்திலிருந்து மாலை ஐந்து மணி அளவில் சென்னை வந்தடையும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு கடற்படை தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து சாலை வழியே நேரு ஸ்டேடியம் செல்கிறார். விழா 7 மணியளவில் முடிகிறது. அங்கிருந்து மீனம்பாக்கம் சென்று விமானத்தில் டெல்லி கிளம்புகிறார். இதுதான் பிரதமரின் பயணத் திட்டம்.
விழா முடிந்து டெல்லி கிளம்புவதற்கு முன் கோபாலபுரம் செல்கிறார் என்ற செய்திதான் இன்று அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
2017 நவம்பரில் தினத் தந்தி பவள விழாவுக்காக சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, விழா முடிந்து விமான நிலையம் செல்லும் வழியில் கோபாலபுரம் சென்று உடல்நல பாதிப்பில் இருந்த கருணாநிதியை சந்தித்துவிட்டு சென்றார். அந்த சந்திப்பின்போது மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் உடன் இருந்தார்கள். அரசியலில் மிக தீவிரமாக மோதிக் கொண்டிருந்த சூழலில் கருணாநிதியை சந்திக்க மோடி சென்றது பரபரப்பாக பேசப்பட்டது.
இப்போதும் உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் தயாளு அம்மாளை சந்திக்கதான் பிரதமர் மோடி கோபாலபுரம் செல்கிறார் என்று கூறப்படுகிறது.
தாயாரை சந்திக்க விரும்புகிறார் பிரதமர் என்ற தகவல் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அதற்கு அவர் சம்மதித்துவிட்டதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் 28ஆம் தேதி கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். வெங்கையா நாயுடுவைக் கூப்பிடுவதன் மூலம் பாஜக பக்கம் திமுக சாய்கிறது என்ற கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில் மோடி கோபாலபுரம் செல்லும் செய்தியும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பாஜகவுடன் நெருக்கத்தை திமுக விரும்புகிறது. அதனால்தான் இந்த முறை கோ பேக் மோடி என்றெல்லாம் சமூக ஊடகங்களில் பரப்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
2017லும் இது போன்ற பரபரப்பு கிளம்பியது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கப் போவதைதான் மோடி – கருணாநிதி சந்திப்பு காட்டுகிறது என்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கும் மோடிக்கும் தீவிர எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில்தான் திமுக தேர்தலை சந்தித்து வெற்றியும் பெற்றது. 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும் இதே நிலைப்பாடுதான்.
”சட்டப் பேரவையில் கருணாநிதி படத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் வந்தார். இப்போது ஒமந்தூரர் அரசு வளாகத்தில் கருணாநிதி சிலையை திறக்க குடியரசுத் துணைத் தலைவரை அழைத்திருக்கிறோம். வேறு அரசியல் இல்லை.
கோபாலபுரத்துக்கு பிரதமர் மோடி இப்போது வந்தாலும் அது நலம் விசாரிப்பு வரவாகவே இருக்கும்” என்று கூறுகிறார் திமுக முன்னோடி ஒருவர்.
தமிழ் நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் பிரதமர் கோபாலபுரம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயாரை சந்திப்பது வேறு விதமான கருத்துக்களை உருவாக்கும், அதனால் அந்த சந்திப்பை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பாஜகவில் சிலர் கூறுகிறார்கள்.
கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறப்பதையே எதிர்க்கிறார்கள்.
திராவிட மாடல் என்று கூறி பெரியாரை தூக்கிப் பிடிக்கும் கட்சித் தலைவரின் சிலையை வெங்கையா நாயுடு திறக்கலாமா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
கோபாலபுரத்துக்கு பிரதமர் மோடி சென்றாலும் கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் திறப்பதும் தமிழ் நாட்டு அரசியலில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. திமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே ஒருவரை ஒருவர் எதிர்த்தால்தான் அரசியலில் வெற்றி பெற இயலும் என்பது இரண்டு கட்சிகளுக்குமே தெரியும் என்பதே உண்மை.