வரும்போதே சிரிப்புடன் உற்சாகமாய் வந்தாள் ரகசியா.
“என்ன ரகசியா இவ்வளவு உற்சாகம்?” என்றோம்.
“இருக்காதா பின்ன…எனக்கு ட்விட்டர்ல ஆயிரம் ஃபாலவர்ஸ் வந்துட்டாங்க” என்று சிரித்தாள்.
“இதான் இப்ப முக்கியமா? என்று முறைத்தோம்.
”பேரறிவாளன் வழக்குல கவர்னருக்கு எதிரா தீர்ப்பு வந்ததுல திமுக தரப்பும் ரொம்ப ஹேப்பி. பேரறிவாளன் கேஸ்ல மட்டுமில்லாம, ஜிஎஸ்டி கேஸ்லயும் மாநிலத்துக்கு உரிமை இருக்குனு உச்ச நீதிமன்றம் சொன்னதுல ஏக குஷி” என்றாள் ரகசியா.
”கவர்னர்தான் ரொம்ப அப்செட். இந்த தீர்ப்புக்கு பதிலடி கொடுக்கிற விதமா ஆளுநருக்கு சாதகமாக வந்த தீர்ப்புகள் பத்தி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறார். இந்த தீர்ப்புகள் அடிப்படைல கவர்னருக்குதான் அதிகாரம்னு சொல்லுங்கனு மத்திய அரசுகிட்ட சொன்னாராம். ஆனா அதை மத்திய அரசு ஏத்துக்கலையாம். இப்போதைக்கு அமைதியா இருப்பதுதான் நல்லது. இதை விவாதமா மாத்திட வேண்டாம்னு ஆளுநர்கிட்ட சொல்லிட்டாங்களாம்”
“இதுல கவர்னர் இன்னும் அப்செட் ஆகியிருப்பாரே?”
“ஆமாம், அதனால கவர்னருக்கு ஆதரவா வந்த தீர்ப்புகளை தமிழ் நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலைக்கிட்ட கொடுத்திருக்கார்னு ஒரு தகவல் உலவுது. அதை இனி வரும் கூட்டங்கள்ல அண்ணாமலை பேசுவார்னு எதிர்பார்க்கலாம்” என்றாள் ரகசியா.
”ராஜ்ய சபா வேட்பாளர் யாருனு அதிமுக இன்னும் அறிவிக்கலையே என்ன காரணம்?”
“வழக்கமான பிரச்சினைதான். இப்போதைக்கு ஜெயக்குமார் மட்டும் ஒகே ஆகியிருக்கிறார். இன்னொரு சீட் யாருக்குன்றதுலதான் பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருக்கு”
“ஜெயக்குமார் எடப்பாடி ஆதரவாளராச்சே..”
“ஆமாம், ஆனா அவரை ஒபிஎஸ்ஸும் ஒத்துக்கிட்டாராம். தென் மாவட்டத்துக்கு அடுத்த சீட் கொடுக்கணும்னு ஓபிஎஸ் கேக்குறாராம் ஆனா எடப்பாடி குரூப் ஒத்துக்கலனு சொல்றாங்க”
“அப்போ எடப்பாடி கைதான் அதிமுகவுல ஓங்கியிருக்குனு சொல்லலாமா”
“சந்தேகமில்லாம. எடப்பாடி அடுத்த மாசம் தமிழ்நாடு டூர் கிளம்புறார். சசிகலா ஆன்மீகப் பயணம்னு தமிழ்நாடு சுத்தி வர மாதிரி எடப்பாடியும் கிராமம் கிராமமா போகப் போறாராம். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தன்னுடைய செல்வாக்கை நிலை நிறுத்திக்கணும்னு நினைக்கிறார். ஒபிஎஸ் மகன் முதல்வர் ஸ்டாலினை போய் பாத்ததையும் கட்சியில யாரும் ரசிக்கல. அதுவும் ஒபிஎஸ்க்கு எதிரா இருக்கு.”
”சரி, உதயநிதி அமைச்சராவார்னு சத்தமா சொல்லிக்கிட்டு இருந்த. இப்போ சத்தமில்லாம போச்சே”
“இன்னைக்கு இருக்கிற அரசியல் சூழல்ல உதயநிதியை அமைச்சராக்கினால் அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக போய்டும்னு முதல்வர் ஃபீல் பண்றாராம். அதனால உதயநிதி பதவியேற்பு தள்ளிப் போகுது. இப்ப கொஞ்ச நாளா இலங்கை அரசியலுடன் தமிழக அரசியலை பாஜகவினர் இணைச்சு பேசிட்டு வர்றாங்க. இலங்கையின் பொருளாதாரம் இந்த அளவுக்கு மோசமானதற்கு காரணம் அங்க இருக்கிற குடும்ப அரசியல்தான்னு சொல்றாங்க. உதயநிதிக்கு பதவி கொடுத்தா தமிழகத்திலும் குடும்ப ஆட்சினு பிரச்சாரம் செய்வாங்கனு ஆளும் தரப்பு தயங்குகிறதாம்”
“குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் இதையெல்லாம் மக்கள் பொருட்படுத்துறாங்களா? பாஜகவிலேயே பலரோட பசங்க இன்னைக்கு அரசியல்ல இருக்காங்களே… சரி, அமைச்சரவை மாற்றம் இருக்கும்னு சொன்னாங்களே”
“உதயநிதிக்கு அமைச்சர் பதவி வரும்போதுதான் இனி அமைச்சரவை மாற்றமாம். தனியா அமைச்சரவை மாற்றம் வேண்டாம்னு முதல்வர் முடிவு பண்ணியிருக்காராம்”
“துர்க்கா ஸ்டாலின் வருத்தப்படுவாங்களே?”
“இல்லை. அவங்களுக்கு அதில வருத்தம் இல்ல. உதயநிதிக்காக அவங்க இதுவரை ஏழு கோயிலுக்குப் போய் பூ போட்டுப் பாத்திருக்காங்களாம். அதில ஆறு கோயில்ல உதயநிதி அமைச்சராவது நல்லதுனு வந்திருக்கு. ஒரு கோயில்ல மட்டும் அப்படி வரலையாம். அதனால் எல்லா கோயில்லயும் வந்துரட்டும்னு அவங்க இருக்காங்களாம். உதயநிதிக்கு பதவி கிடைக்கும்போது தங்களுக்கும் பதவி கிடைக்கும்னு எதிர்பார்த்த டி.ஆர்.பி.ராஜாவும், தாயகம் கவியும்தான் அப்சட்ல இருக்காங்களாம். ஆனா அதே நேரத்துல ரெண்டு பேரு மட்டும் சந்தோஷமா இருக்காங்க.”
“யார் அந்த ரெண்டு பேரு?”
“அமைச்சரவை மாற்றம் பண்ணினா தங்களோட பதவிக்கு ஆபத்து வருமோன்னு பயந்துட்டு இருந்த அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணனும், பெரிய கருப்பனும்தான் அந்த 2 பேரு. இப்ப அமைச்சரவை மாற்றம் இல்லைங்கிறதால தங்களோட பதவி தப்பிச்சுட்டதா அவங்க நினைக்கறாங்க.”
”உள்ளாட்சித் தேர்தல்ல பாஜக, பாமக, அதிமுக எல்லாம் தனியா போட்டியிட்டாங்க. ராஜ்ய சபா தேர்தல்ல எல்லாம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிச்சிருக்காங்களே. மீண்டும் கூட்டணியா?”
“ஆமாம். வேற வழியில்லை. நாடாளுமன்றத் தேர்தல்ல இந்தக் கூட்டணிதான் இருக்கும்கிறதை இது காட்டுது. திமுக கூட்டணியை உடைக்கணும்னும் டெல்லி திட்டமிடுதாம். முக்கியமா பேரறிவாளன் விவகாரத்துல காங்கிரஸ் போராட்டம்லாம் நடத்துறாங்க. அதை பெருசாக்கி கூட்டணியை உடைக்க முயற்சிகள் நடக்கலாம். 2016 தேர்தல்ல மக்கள் நலக் கூட்டணி அமைத்து வாக்குகள் பிரிக்கப்பட்டதுபோல் 2024 நாடாளுமன்றத் தேர்தல்லயும் தமிழ்நாட்டுல இன்னொரு கூட்டணி உருவாக்க திட்டம் இருக்காம்”
“திமுக கூட்டணிலருந்து காங்கிரஸ் வெளிய வர்றது சந்தேகம்தான்”
”ஆமா அதனாலதான் இன்னொரு முயற்சியாய் கமலை இழுக்கறாங்க.”
“கமலா?”
“ஆமாம். ராஜ்யசபாவுக்கு 12 உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் உத்தரவின் அடிப்படையில் நியமிக்கலாம். கமலை நியமன உறுப்பினராக்கலாம் என்று பாஜக தரப்பிலிருந்து ஒரு ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது. அவர் கலைத் திறன் அடிப்படையில் அவருக்கு வழங்கலாம். எதிர்காலத்தில் அரசியலுக்கும் உதவும் என்று கணக்குப் போடுகிறார்கள்”
“கமலுக்கு ராஜ்யசபா வேஷமும் பொருத்தமாகதான் இருக்கும்” என்றோம்
“ஆமாம்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.