இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவிக்கிறார்கள். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் காரணமாக பிரதமராக இருந்த ராஜபக்சே பதவி விலகி, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். ஆனால், மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில், இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, “இலங்கையில் இந்தாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது மிகவும் மந்தகரமான நிலையிலேயே காணப்படும். தற்போது 30 சதவீதமாகக் காணப்படுகின்ற பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்களில் 40 சதவீதமாக அதிகரிக்கும். எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. கடன் மறுசீரமைப்பு இருக்கும் வரை, எங்களால் திருப்பிச் செலுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாநில மொழியும் இந்தியாவின் அடையாளமே – பிரதமர் மோடி
புதுடெல்லி, ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது, “கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளை கிளப்ப முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம். பாஜக ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பைக் காண்கிறது மற்றும் அவற்றை மதித்து வணங்குகிறது. தேசிய கல்விக்கொள்கையில் ஒவ்வொரு பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான்” என்றார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம்: தீட்சிதர்கள் எதிர்ப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மூலவரான நடராஜருக்கு அருகில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி கும்பிடுவது தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டபோது கனகசபை மீது ஏறி யாரும் சாமி தரிசனம் செய்யக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், கொரோனா தொற்று குறைந்த பிறகும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்தர்களை அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், தமிழக அரசு இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்தது.
இதையடுத்து நேற்று மாலையே நடராஜர் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்தனர். இதன்பின்னர் பக்தர்கள் கொஞ்சம் கொஞ்சம் நபர்களாக கனகசபைக்குள் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்து வெளியே வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் சார்பில் பேசிய வழக்கறிஞர் சந்திரசேகர், “தீட்சிதர்கள் சார்பாக ஆட்சேபனை தெரிவித்துள்ள நிலையில் தொடர் சட்ட போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். டெல்லி, பீகாரில் 17 இடங்களில் இன்று காலை தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பீகாரில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீடு, அவரது மகள் மிசாபாரதி வீடு, உறவினர்கள் வீடுகள் மற்றும் தொடர்புடைய அலுவலகங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது 2004-ம் ஆண்டு லாலுபிரசாத் யாதவ் ரெயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ரெயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக புதிய வழக்கை பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் அதனடிப்படையில் இந்த சோதனையை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்கள். முன்னதாக, லாலுபிரசாத் யாதவ் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது ஓட்டல்களுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு செய்ததாக அவர் மீது கடந்த 2017-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்கு பருவமழை 23-ம் தேதி தொடங்குகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் அதிக மழை பெய்யும். ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி அந்தமான் தீவுகளில்தான் முதலில் தென்படும். இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை கணித்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதை அறிவிக்கும். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்துள்ளன.
இதையடுத்து வருகிற 27-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தற்போது சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 27-ம் தேதிக்கு பதில் 23-ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை காலங்களில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிக மழை பெய்யும், குற்றாலம் அருவிகளிலும் வெள்ளம் கொட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.