1990-களில் எப்படி பாபர் மசூதி – ராம்ஜென்ம பூமி பிரச்சினை கிளம்பியதோ, அதேபோன்று இப்போது வட மாநிலங்களில் ஞானவாபி மசூதி (Gyanvapi Mosque) பிரச்சினை பெரிய அளவில் கிளம்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் #Gyanvapi, #babamilgaye, #gyanvapimosque, #reclaim, #gyanvapisurvey,#sacred, #Harharmahadev போன்ற ஹேஷ்டாக் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன.
வாரணாசியில்… புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. 16-ம் நூற்றாண்டில் ஔரங்கசீப்பால் இந்த மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்த இந்து கோயிலின் ஒரு பகுதியை ஔரங்கசீப் இடித்துவிட்டு மசூதி கட்டியதாக இந்து அமைப்புகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் வாரணாசி நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக இந்தப் பிரச்சினை சிறிய அளவில் இருந்து வந்தது. இந்நிலையில் ராக்கி சிங் என்பவர் தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், “ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள மசூதியில் இருக்கும் மா சிருங்கர் கௌரி, விநாயகர், அனுமன், ஆதி விஷேஷ்வர், நந்தி மற்றும் பிற தெய்வங்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று அவர்கள் கோரியிருந்தனர்.
மேலும், மசூதி வளாகத்தில் அனைத்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதை உறுதி செய்ய ஒரு அட்வகேட் கமிஷனரை (நீதிமன்றத்தால் குறிப்பிட்ட விவகாரத்துக்காக நியமிக்கப்படும் வழக்கறிஞர்) நியமிக்க வேண்டும் என்றும் தனித்தனி மனுக்களில் அவர்கள் கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்ற நீதிபதிகள், உள்ளூர் வழக்கறிஞர் அஜய் குமாரை அட்வகேட் கமிஷனராக நியமித்து, மசூதி வளாகத்தை ஆய்வு செய்வதற்கும் அந்த ஆய்வை காணொளியாக பதிவு செய்யவும் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி உத்தரவிட்டது. ஆய்வு செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பை போலீஸார் வழங்கவேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவுக்கு எதிராக ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று கோரி அதை நிர்வகிக்கும் அஞ்சுமன் இண்டோ-ஜாமியா மஜித் கமிட்டி (Anjuman Intezamia Masjid) உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை நிறுத்தி வைக்க உத்தரவிடவும் கோரி மூத்த வழக்கறிஞர் ஹுசைன் அகமதி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், இந்த விவகாரத்தில் ஆவணங்களை முழுமையாக பார்க்காததால் என்ன பிரச்னை என்று தெரியவில்லை என்று கூறி இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (17-05-2022) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்தச் சூழலில் வாரணாசி நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆய்வு, திங்கள்கிழமை நிறைவுபெற்றது. இதில் தொழுகைக்காக கை, கால்கள் கழுவும் ஒசுகானா எனும் நீர்குளத்தில் நடந்த ஆய்வில் அதன் மத்தியில் சிவலிங்கம் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு சீல் வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மசூதிக்குள் சிவலிங்கம் கிடைத்ததால், அங்கு வழிபட தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு ஹேஷ்டேக்குகளில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். கைகால்களை கழுவும் இடத்தில் இருந்து கிடைத்த சிவலிங்கம் என்று கூறி போலியான சில சிவலிங்கங்களின் படத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.
தனது சமூக வலைதள பக்கத்தில் இதுபற்றி பதிவிட்டுள்ள உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, “சத்ய ஹி சிவ் ஹே. புத்த பூர்ணிமா தினத்தன்று ஞானவாபி மசூதியில் இருந்து சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இண்டோஜாமியா மசூதி கமிட்டி, அது சிவலிங்கம் அல்ல, நீரூற்று என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஒவைசி, “இன்னொரு மசூதியை எந்தக் காரணத்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய விஷ்வ வேதிக் சனாதன் சங் தலைவர் ஜிதேந்தர்சிங், “மசூதியின் ஒசுகானாவில் 12.5 அடி உயர சிவலிங்கம் கிடைத்துள்ளது. சட்டரீதியாகப் போராடி முஸ்லீம்களிடம் இழந்ததை பெறுவோம். இந்தப் பட்டியலில் காசி, மதுரா, தாஜ்மஹால் மற்றும் குதுப் மினார் ஆகியவையும் உள்ளன” எனத் தெரிவித்தார்.
பாபர் மசூதி பிரச்சினையின் வெப்பம் தற்போதுதான் தணிந்துள்ள நிலையில் வழிபாட்டுத் தலம் சார்ந்த மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பக் கூடாது என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம், “ராமஜென்ம பூமி பிரச்சினையின்போது, அதற்கு அடுத்ததாக எந்தவொரு வழிபாட்டுத் தலங்கள் விஷயத்திலும் பிரச்சினை செய்யக்கூடாது என்று நரசிம்மராவ் ஆட்சிகாலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒரு சட்டமும் அப்போது இயற்றப்பட்டது. ஒவ்வொரு வழிபாட்டுத் தலமும் எந்த நிலையில் இருக்கிறதோ, அப்படியே தொடர வேண்டும் என்று அப்போது முடிவு செய்யப்பட்டது. இப்போது அதை மீறுவது சரியல்ல” என்கிறார்.