இலங்கையில் வடக்கு கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்கள், முஸ்லீம்கள், மத்தியப் பகுதியில் வாழும் மலையக மக்கள் ஆகிய தமிழ் பேசும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள். இலங்கையில் தற்போது நிகழ்ந்துள்ள ஆட்சி மாற்றத்தால் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? கிளிநொச்சியில் வாழும் ஈழக் கவிஞர் கருணாகரனிடம் கேட்டோம்.
“இதில் எந்த பிரச்சினைகளுக்கான தீர்வும் ஆட்சி மாற்றத்தால் உருவாகும் என்று எதிர்பார்க்க முடியாது.
இந்த 13 ஆண்டுகளில், இடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அங்கம் வகித்த நல்லாட்சி காலகட்டத்தில்கூட தமிழர்கள் பகுதிகளில் நிலைகொண்டுள்ள ராணுவத்தை குறைக்கவில்லை. மாறாக தமிழ் பகுதிகளில் இருந்த ராணுவ முகாம்களை ரனில் விக்ரமசிங்க அரசு பலப்படுத்தியது. முள்வேலிகள் மட்டும் அமைக்கப்பட்டு சாதாரணமாக இருந்த முகாம்களில் மதில்கள், கோட்டைகள் எல்லாம் கட்டி பிரமாண்டமாகவும் நிரந்தரமானதாகவும் அப்போதுதான் மாற்றினார்கள்.
எனவே, இலங்கை ஆட்சி மாற்றத்தால் தமிழர்கள் பகுதியான வடக்கு, கிழக்கில் ராணுவத்தை குறைப்பதற்கோ அல்லது பவுத்த விரிவாக்கத்தை குறைப்பதற்கோ வாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்க முடியாது. ரனிலின் நல்லாட்சி காலகட்டத்தில்தான் 1000 விகாரைகளை நாடு முழுவதும் உருவாக்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்கான நிதியும் செலவிடப்பட்டது. அதில் கணிசமான விகாரைகள் கட்டுவதற்கு தமிழ் பகுதிகளில்தான் நிலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் பகுதியில் ராணுவ விரிவாக்கம் செய்வது, பவுத்த விரிவாக்கம் செய்வது போன்ற இலங்கை ஆட்சியாளர்களின் அடிப்படை சிந்தனையில் மாற்றம் வரவில்லை என்றுதான் இன்றைய நிகழ்களில் இருந்தும் உணர முடிகிறது.
இலங்கை பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நாடு. இங்கே ஒரு பன்மை சமூகத்தை ஆட்சியிலும் அரசியலும் உருவாக்க வேண்டுமென்ற சிந்தனை இதுவரை போராட்டக்காரர்களிடம்கூட உருவாகவில்லை. போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கின்ற பவுத்த சங்கங்கள் இது சிங்கள நாடு என்கின்ற ஒற்றை ஆட்சி சிந்தனை உடையவர்களாகத்தான் இப்போதும் இருக்கிறார்கள். இதில் சிந்தனை மாற்றம் ஏற்படாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வரக்கூடிய சாத்தியங்கள் இல்லை.
இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு இன முரண்பாடு, அதன் விளைவாக உருவாகிய போர், அதற்காக செலவழிக்கப்பட்ட பெரும்நிதி, அதற்காக பட்ட கடன்கள் எல்லாமும்கூட ஒரு காரணம்.
எனவே, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியம் என்ற புரிதலும் இன்னும் சிங்கள தரப்புக்கு உருவாகவில்லை. இது ஒரு துயரமான நிலை.
இலங்கையில் இப்போது சீனாவின் பிடி குறைந்து இந்தியாவின் கை ஓங்குகிறது. இதனிடையே, அமெரிக்காவின் தலையீடும், நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இருக்கத்தான் செய்கிறது. அந்தவகையில் இலங்கையில் இப்போது இந்தியாவும் அமெரிக்காவும் ஏறக்குறைய இணைந்த பாத்திரத்தைத்தான் வகிப்பார்கள்.
இந்தியா நேரடியாகவும் அமெரிக்கா மறைமுகமாகவும் செயல்படும். எனவே, இந்த வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இங்குள்ள தமிழர்களிடம் உள்ளது” என்கிறார் கருணாகரன்.