தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு பல்வேறு விவகாரங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும். அதனால், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். உச்சநீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும். நீதிபதிகளை நியமிப்பதில் சமூகப் பன்முகத்தன்மை, சமூக நீதியை பேணும் வகையில் மாற்றம் தேவை. நீதித்துறையில் கூட்டாட்சித்தன்மை பிரதிபலிக்கப்பட உச்சநீதிமன்ற நிரந்தரக் கிளைகளை நிறுவ வேண்டும். சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் கிளைகளை அமைக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக ராஜீவ் குமார் நியமனம்
இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக பதவி வகித்து வரும் சுசில் சந்திரா பதவி காலம் வருகிற மே 14-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அவர் ஓய்வு பெறுகிறார். இதனால், காலியாகவுள்ள அந்த பதவிக்கு புதிய தலைமை தேர்தல் ஆணையாளரை நியமித்து நாட்டின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டார். அதன்படி, மூத்த தேர்தல் ஆணையாளராக உள்ள ராஜீவ் குமார் வருகிற 2022-ம் ஆண்டு மே 15-ம் தேதி முதல் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக பதவி வகித்திடுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுசில் சந்திரா தலைமையில், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலை நடப்பு ஆண்டில் தேர்தல் ஆணையம் நடத்தி உள்ளது.
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க. இன்று மாலை பதவியேற்பு
இலங்கையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் புதிய பிரதமராக அதிபர் கோத்தபய ராஜபக்ச தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்பார் எனவும் தெரியவந்துள்ளது. 1993 முதல் இலங்கையின் பிரதமராக ஏற்கனவே 5 முறை பதவி வகித்தவர் ரணில் விக்கிரமசிங்க (வயது 73). இலங்கை அரசில் பழுத்த அனுபவம் கொண்டவர். இதன்பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்சே உள்பட 17 பேர் இலங்கையில் இருந்து வெளிநாடு செல்ல தடை
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (12) இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னதாக, கொழும்பில் கடந்த 9-ம் தேதி ஏற்பட்ட மோதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றினால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணைகளையடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா வன்னியாராட்ச்சி, ரோஹித்த அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, சனத் நிஷாந்த, சஞ்ஜிவ எதிரிமான, காஞ்சன ஜயரத்ன, சம்பத் அத்துகோரல, ரேணுக பெரேரா, மஹிந்த கஹந்தகம, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி போலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கனி உள்ளிட்ட 17 பேருக்கே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் கடவூச்சீட்டுக்களை நீதிமன்றத்தின் பொறுப்பிற்கு எடுக்குமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
TANCET தேர்வு நடைபெறுவதால் தமிழகத்தில் மே 14-ம் தேதி அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை
தமிழ்நாட்டில் அனைத்து கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மறுநாள் (மே 14) விடுமுறை அளித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் (TANCET) தேர்வு வரும் 14-ம் தேதி நடைபெறுவதால், மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், ராஜேஷ் குமார், நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர். பால சுப்பிரமணியன், ஏ. விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜுன் 29-ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.