கமலின் விக்ரம் திரைப்பட பாடல் வெளியாகியிருக்கிறது. பத்தல பத்தல என்ற பாடலில் வரும் சில வரிகள் சர்ச்சையை எழுப்பியிருக்கின்றன.
‘கஜானாலே காசில்லே…
கல்லாலயும் காசில்லே…
காச்சல் வேற நெறய வருது!
தில்லாலங்கடி ஜில்லாலே!!
ஒன்றியத்தின் தப்பாலே
ஒண்ணியும் இல்லே இப்பாலே!
சாவி இப்போ திருடங் கையிலே…
தில்லாலங்கடி ஜில்லாலே!’
இந்த வரிகளில் வரும் ஒன்றியம் என்ற வார்த்தைதான் பிரச்சினை. திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து மத்திய அரசு என்று சொல்லாமல் ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகிறார்கள். அதற்கு அரசமைப்பு சட்டத்தையும் துணைக்கு காட்டுகிறார்கள். இந்திய அரசமைப்பு சட்டத்தில் யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்றுதான் அதாவது மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் சொல்லியிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
இப்போது கமலும் ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். விக்ரம் திரைப்படத்தின் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியிருப்பதால் ஒன்றியம் என்று கமல் சொல்லியிருப்பதன் அரசியல் அர்த்தம் அதிகரிக்கிறது.
மோடியின் ஆட்சியில் இந்தியப் பொருளாதாரத்தின் நிலை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துக் கொண்டிருக்கும் நிலையில்
’கஜானாலே காசில்லே…
கல்லாலயும் காசில்லே…’ என்ற வரிகள் மத்திய அரசின் இன்றைய நிதி நிலைமையின் நேரடி விமர்சனமாக பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசனின் விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?
அதற்கு சில உதாரணங்கள் இருக்கின்றன.
கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தல் சூழலில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கருணாநிதியை அவமானப்படுத்த மு.க.ஸ்டாலின் பெயரைச் சொன்னாலே போதும் என்று குறிப்பிட்டார். இது திமுக ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதற்கு விளக்கமும் அளித்தார் கமல். நான் கருணாநிதியை அவமானப்படுத்தியதாக கூறினார்கள் அதற்கு பதிலளிக்கும் விதமாக கருணாநிதியை அவமானப்படுத்த இப்படி கூட கூறலாம் என்றேன் என்று கூறினார். சக்கர நாற்காலியில் அமர்ந்து அரசியல் செய்ய மாட்டேன் என்று கமல் முன்னர் கூறியிருந்தது கலைஞரை அவமானப்படுத்துவதாக ஒரு கருத்து நிலவியிருந்த சூழலில் இந்த சர்ச்சை எழுந்திருந்தது.
இந்த சம்பவம் நடந்தது 2021 மார்ச் மாதம் 8-ம் தேதி.
இதற்கும் முன்பும் அவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்திருந்தார். ‘சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டால், சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வர மாட்டேன், அப்படியே கிழிந்தாலும் நல்ல சட்டையை அணிந்து ஒழுங்காக வெளியே வருவேன்’ என கல்லூரி விழா ஒன்றில் ஸ்டாலினை நவம்பர் 2019ல் விமர்சித்திருந்தார்.
இப்படி ஸ்டாலினை குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தவர்தான் கமல்ஹாசன்.
மே 2-ம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்தன. திமுக வெற்றி பெற்றது. மே 4 ஆம் தேதி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க பூங்கொத்துக்களுடன் நேரடியாக சென்றார் சித்தரஞ்சன் சாலை சென்றார் கமல்.
அதன்பின் நவம்பர் 7-ல் கமல் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறியிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த கமல், ’இனிய நண்பரும் முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான மு.க.ஸ்டாலின் அவர்களே, தங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என் பிறந்தநாளுக்கு மேலும் வர்ணம் சேர்க்கிறது. அன்பும் நன்றியும் ’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
2022 மார்ச் 1-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்த கமல், ‘ஸ்டாலின் உழைப்பால் உயர்ந்தவர், தென்னிந்தியாவின் தவிர்க்க இயலாத தலைவர்’ என்று பாராட்டியிருந்தார்.
2021 மார்ச் மாதம் கமல் பார்வையில் அவமானமாக தெரிந்த ஸ்டாலின் 2021 நவம்பரில் முதல்வர்களின் முன்னுதாரணமாகவும் 2022 மார்ச்சில் தென்னிந்தியாவின் தவிர்க்க இயலாத தலைவராகவும் தெரிகிறார்.
இதுதான் கமலின் அரசியல் நிலைப்பாடுகள்.
கமல் அரசியலுக்கு வந்ததில் இருந்தே குழப்ப நிலையைப் பார்க்க முடியும். இதை குழப்ப அரசியல் என்று கூறாதீர்கள் இது சந்தர்ப்பவாத அரசியல் என்று கடுமையாக விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.
‘கூட்டணி அமைத்துவிட்டு, வாழ்நாள் முழுவதும் கொத்தடி மையாக இருக்க முடியாது. கூட்டணி இன்றி தனித்து நிற்க வேண்டும் என்பதே எல்லா கட்சிகளின் ஆசை. அதற்கு மக்கள் நீதி மய்யமும் விதிவிலக்கு அல்ல’ என்று டிசம்பர் 2 2020 அன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறிய கமல்,
டிசம்பர் 16-ல் ‘தேர்தலில் மூன்றாவது அணி நிச்சயம் அமையும். நல்லவர்களோடு இணைந்த மூன்றாவது அணி அமைப்போம்’ என்றார். ரஜினி விரும்பினால் அவருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு என்றும் கூறினார். உஷாரான ரஜினி அரசியலுக்கே வரவில்லை.
’ திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று நான் அறிவித்ததாக கூறுகின்றனர். அதில் ஒரு சின்ன திருத்தம், தேசிய கீதத்தில் ‘திராவிடம்’ என்ற சொல் உள்ளவரை திராவிடம் இருக்கும். அதை அழிக்க முடியாது. அதனால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் சிறிய திருத்தம், கழகங்களுடன் கூட்டணி இல்லை’ என்றும் கமல் குறிப்பிட்டிருக்கிறார்.
கூட்டணியில் மட்டுமல்ல கொள்கையிலும் கமலுக்கு குழப்பம்தான்.
2017ல் அரசியலுக்கு வருவதற்கு பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்ட கமல்ஹாசன் 2018 பிப்ரவரியில் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார்.
தனது அரசியல் கொள்கையாக அவர் கூறியது இதுதான் ‘எனது கருத்து வலதுசாரியா, இடதுசாரியா என்கின்றனர். இரண்டும் இல்லை. மய்யத்தில் இருக்கிறேன். சாதி, மத விளையாட்டுக்குள் நான் போகமாட்டேன். அதை தெளிவுபடுத்தி உள்ளேன். திரும்ப, திரும்ப உங்களது கொள்கைகள் என்ன என்றால், நீங்கள் என்னென்ன செய்யத் தவறினீர்களோ அவற்றை செய்வதே எங்களது கொள்கைகள்’ என்று தனது கொள்கையைக் குறிப்பிட்டார்.
2017ல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு கமல் அளித்த பேட்டியில் ‘கருப்புதான் என் நிறம். அதற்குள் காவி உட்பட அனைத்து நிறங்களும் அடங்கும்’ என்று கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தன. கருப்புக்குள் காவி இருக்கிறது என்று கூறுவது அவரது குழப்பத்தைக் காட்டுகிறது என்று விமர்சித்தார் கி.வீரமணி.
பாஜகவுடன் கூட்டணி குறித்த கேள்விகளுக்கும் அவர் தெளிவான பதில்களை அளித்ததில்லை.
2018-ல் டெல்லியில் நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் விழாவில் அவரிடம் கேட்கப்பட்ட பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு அவர் தெளிவாக பதிலளிக்கவில்லை.
’பிஜேபி உடன் கூட்டணி வைக்க சாத்தியம் உள்ளதா?’ என்ற தொகுப்பாளரின் நேரடி கேள்விக்கு ’என் DNA மரபணுவை சிதைக்க முடியாது அதை பொறுத்தவரை யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை. ஆனால், தமிழ்நாட்டின் மரபணுவை மாற்ற இயலாது. அது யார் கூட்டணி அமைக்க வந்தாலும் இந்தியா பெருமை கொள்ளும் பன்முகத்தன்மை வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்படிதான் கமலின் அரசியல் கருத்துக்கள் இருக்கின்றன. திரைப்படங்களில் அவர் ஒரே படத்தில் பல வேடங்களில் தோன்றுவது போல் அவரது கருத்துக்களும் பல வேடங்களில் உலவுகின்றன.
பத்தல பத்தல பாடலையும் அந்த வகையில்தான் சேர்க்க வேண்டியிருக்கிறது.