வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரபலம் வெற்றி பெற்றால், அவருக்கும் தங்களுக்கும் இடையே ஏதாவது தொடர்பு இருப்பதாக கூறி பெருமைப்படுவது மனித இயல்பு. கூகுள் நிறுவனத்தின் தலைவரான சுந்தர் பிச்சையையும் இப்படித்தான் பலரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
சுந்தர் பிச்சை சென்னையில் படித்தார் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம். ஆனால், அவர் எந்த பள்ளியில் படித்தார் என்பதில்தான் குழப்பம் இருந்தது.
கூகுள் நிறுவனத்தின் தலைவராக சுந்தர் பிச்சை பொறுப்பேற்ற ஒரு வாரத்துக்குள் சென்னையில் உள்ள சுமார் 350 பள்ளிகள், அவர் தங்கள் பள்ளியில் படித்ததாக தப்பட்டம் அடித்தன. சுந்தர் பிச்சையைப் பற்றிய விக்கிபீடியா பக்கத்திலும் சிலர் வெவ்வேறு பள்ளிகளின் பெயர்களைப் போட்டு திருத்தங்களைச் செய்தனர்.
இந்தச் சூழலில், தான் படித்த பள்ளியைப் பற்றிய குழப்பங்களுக்கு விடை தந்திருக்கிறார் சுந்தர் பிச்சை. ஸ்டான்ஃபோர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் சமீபத்தில் சுந்தர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள வனவாணி பள்ளியில் தான் படித்ததாக அப்போது சொல்லியுள்ளார். இந்தப் பள்ளி சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்துக்குள் அமைந்துள்ளது.
உயர் கல்வியைப் பொறுத்தவரை சிசிடி காரக்பூரில் பி.டெக் பட்டத்தையும், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பட்டத்தையும் முடித்ததாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டத்தை முடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சை எங்கே படித்தார் என்பதைப் பற்றிய குழப்பத்துக்கு இந்தப் பேட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.