நடிகர் திலீப் மீதான பாலியல் வழக்கைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிகளைப் பற்றி ஆலோசனை வழங்க 2017-ம் ஆண்டில் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிஷனை அமைத்து கேரள அரசு உத்தரவிட்டிருந்தது.
தற்போது மலையாள திரையுலகில் அடுத்ததாக நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபு மீது ஒரு நடிகை பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து மேலும் பலர் அவர் மீது புகார் தொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் 2017-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா கமிஷன் தற்போது தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இதில் முக்கியமான 5 பரிந்துரைகள் மட்டும் தற்போது வெளியாகி உள்ளன.
- படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு தடை விதிக்கவேண்டும்.
- குற்றப் பின்னணியுள்ள ஓட்டுநர்களை பணிக்கு வைக்க கூடாது.
- நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் சமமான ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும். படப்பிடிப்புகளில் பங்கேற்கும் பெண்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
- திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கும் அதில் பணியாற்றும் கலைஞர்களுக்கும் இடையே எழுத்து வடிவிலான ஒப்பந்தம் கண்டிப்பாக போடப்பட வேண்டும்.
- நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுப்பதற்கான ஆடிஷன்களை தயாரிப்பாளர் மட்டுமே நடத்த வேண்டும்.
ஆகியவையே அந்த 5 பரிந்துரைகளாகும். இந்தச் சூழலில் சினிமாவில் பணியாற்றும் பெண்களுக்கு இந்த பரிந்துரைகள் முழு பாதுகாப்பை அளிப்பதாக இல்லை என்று கேரளாவைச் சேர்ந்த வுமன் இன் கேரளா கலக்டிவ் என்ற அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. நீதிபதி கமிஷனின் முழு பரிந்துரைகளையும் வெளியிட வேண்டும் என்றும் இந்த அமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.