கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நாடு இந்தியாவின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இலங்கைக்கு உதவ தமிழகத்திலும் நிதி சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவே பொருளாதார தேக்கத்தில்தான் இருப்பதாகவும் இதிலிருந்து மீள நமக்கு 12 ஆண்டுகள் ஆகும் என்றும் அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியளித்திருக்கிறது, இந்திய ரிசர்வ் வங்கி!
கொரோனா பரவல் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது, ரிசர்வ் வங்கி. அதில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தில் ரூ. 52 லட்சம் கோடிக்கு மேல் உற்பத்தி இழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இழப்புகளை சமாளிக்க 2034-35 நிதியாண்டு வரை ஆகும் என்றும், அதுவும் வரும் ஆண்டில் 7.2 சதவிகிதம் வளர்ச்சியும் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் 7.5 சதவீதம் வளர்ச்சியும் இருந்தால்தான் சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2020-ல் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன், பல்வேறு துறைகளில் பலருக்கும் வேலையிழப்பை ஏற்படுத்தியது. சுற்றுலா, ஹோட்டல் உள்ளிட்ட பல துறைகள் முற்றிலும் முடங்கிப்போனது.
ஒட்டுமொத்த பொருளாதார சுழற்சியும் நின்று போனது. இதுபோலவே அடுத்தடுத்து 3 அலைகளால் அவ்வப்போது அமல்படுத்தப்பட்ட லாக்டவுனாலும் தொடர்ந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கிய பிறகு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டன. தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கின. இந்திய பொருளாதாரம் மெல்ல மீளத் தொடங்கியது. இதனால், இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி திரும்பிவிட்டதாக பல சர்வதேச நிதியமைப்புகளும்கூட நம்பிக்கை தெரிவித்தன. இந்நிலையில்தான் இப்படி அதிர்ச்சியளித்துள்ளது ஆர்பிஐ.
ஆனால், சென்ற மாதமே சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த யூபிஎஸ் வங்கி இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை 7 சதவீதமாக குறைத்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் இந்த வங்கி வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் இந்தியா 7.7 சதவீத வளர்ச்சியை சந்திக்கும் என்று கூறியிருந்தது. இதுபோலவே உலக வங்கியும் இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை 8.7-ல் இருந்து 8 சதவிகிதமாக குறைத்தது. ஃபிட்ச் 10.3 சதவிகிதம் என்ற தனது மதிப்பீட்டை 8.5 சதவிகிதமாகவும், மார்கன் ஸ்டான்லி நிறுவனம் 8.4-ல் இருந்து 7.9 சதவிகிதமாகவும் குறைத்து அறிக்கை வெளியிட்டிருந்தன.
இந்திய ரிசர்வ் வங்கியும் 7.8 சதவிகிதம் என மதிப்பிட்டிருந்த இந்திய பொருளாதார வளர்ச்சியை 7.2 சதவிகிதம் ஆக குறைத்து அறிக்கை வெளியிட்டது. உக்ரைன் – ரஷ்யா போரும் இந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.
கொரோனா பரவலின் தொடக்கத்தில், கொரோனா காரணமாக இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்திருந்தார். அப்போது அவரை ஆளும் பாஜகவினர் கேலி செய்தனர். மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், “ராகுல் காந்தி எப்போதும் குழப்பத்தில் இருக்கிறார். வைரஸை எதிர்த்துப் போராட ஒருவர் தயாராயிருக்க வேண்டும், பீதி அடையக்கூடாது’ என்று கூறினார்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் கடந்து இப்போது ரிசர்வ் வங்கியே கொரோனாவால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், இதிலிருந்து மீள 12 வருடங்கள் ஆகும் என்றும் அறிவித்துள்ளது.
ஆனால், உண்மையில் இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சி என்பது 2017ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. 2016-ல் 8.26ஆக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2017-ல் 6.80ஆக குறைந்தது. இது 2018-ல் 6.53 ஆகவும், 2019-ல் 4.04 ஆகவும் குறைந்து, 2020-ல் -7.96 (மைனஸ் 7.96) சதவிகிதம் என்ற கடும் வீழ்ச்சியை சந்தித்தது. 2016 நவம்பர் 8-ல் திடீரென அறிமுகப்படுத்தப்பட்ட ‘பண மதிப்பிழப்பு’ நடவடிக்கை இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என அப்போது பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
கொரோனாவுக்கு பின்னர், நம்பிக்கையளிக்கும் வகையில் இந்த வீழ்ச்சியிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வந்த நிலையில்தான் இன்னும் ஆபத்து நீங்கவில்லை என எச்சரித்திருக்கிறது ரிசர்வ் வங்கி அறிக்கை.