“இன்று அட்சய திருதியை அதனால் அரை மணி நேரம் லேட்டாக வருவேன்” என்று காலையிலேயே வாட்ஸ்அப் செய்திருந்தார் ரகசியா. சொன்னபடி டாணென்று 10.30-க்கெல்லாம் ஆபீசில் ஆஜரானார்.
“என்னம்மா… அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கப் போயிருந்தியா?” என்றோம்.
“அட்சய திருதியைக்கு தங்கம் மட்டும்தான் வாங்கணும்னு இல்லை. தானம் கொடுத்து புண்ணியத்தையும் வாங்கலாம். அதான் வீட்ல பூஜையை முடிச்சுட்டு அயோத்யா மண்டபம் பக்கத்துல ஏழைகளுக்கு அன்னதானம் பண்ணிட்டு வர்றேன்” என்றார் ரகசியா.
“அயோத்தியா மண்டபத்துக்கு போன நீ சும்மா தானம் மட்டும் பண்ணிட்டு வந்திருக்க மாட்டேன்னு நல்லா தெரியும். நிச்சயமா அயோத்யா மண்டபம் பத்தின செய்தியையும் கொண்டுவந்திருப்பே.”
“ரகசியாவை நம்பினோர் கைவிடப்படார். அயோத்யா மண்டபம் பத்தின செய்தியையும் கொண்டு வந்திருக்கேன். அயோத்யா மண்டபத்தை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததுல, ஆளும் தரப்புக்கே ஒரு வகையில் நிம்மதின்னு பேசிக்கறாங்க. மண்டபம் தொடர்பா 2 தரப்புகளுக்கு இடையே நடந்த விஷயத்துல நாம தேவையில்லாம மூக்கை நுழைக்க வேணாம். அதனால இந்துக்களுக்கு எதிரான கட்சிங்கிற இமேஜ் நம்ம வேல விழுந்துடும்னு ஆளும் கட்சியில் கொஞ்சம் பேர் ஆரம்பத்துல இருந்தே சொல்லிட்டு வந்தாங்களாம்”
“ஓஹோ… “
“அதனாலதான் இந்த வழக்குல அரசு வழக்கறிஞர் முறையான வாதங்களை எடுத்து வைக்கலைன்னும். அதனாலதான் கோர்ட் தீர்ப்பு இப்படி வந்ததுன்னும் சொல்றாங்க.”
“பாஜக மாவட்ட நிர்வாகிகளை அறிவிச்ச கையோட மாநில தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு போயிட்டாரே… பதவி கிடைக்காதவங்க ஏதாவது பிரச்சினை செய்வாங்களோன்னு பயந்துட்டாரா?”
“அப்படியும் சிலர் சொல்றாங்க. குறிப்பா ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள்ல நிர்வாகிகள் நியமனம் கட்சிக்குள்ள அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கு. அதிருப்தி தரப்பு கமலாலயம் வந்து ஆர்ப்பாட்டம் பண்ணலாம்னு நினைச்சி இருந்தாங்களாம். ஆனா அறிவிப்பு வந்த அன்னைக்கு இரவே அண்ணாமலை இலங்கைக்கு போனதால கமலாலயத்துக்கு வந்தும் ஒண்ணும் பிரயோஜனம் இருக்காதுன்னு நினைச்சு அவங்க சும்மா இருந்துட்டாங்களாம். ஆனா அவர் திரும்பி வந்ததும் நிச்சயம் கமலாலயத்துல கச்சேரி இருக்கும்னு பேசிக்கறாங்க. அதே நேரத்துல அண்ணாமலை இலங்கைக்கு போனதுக்கு இன்னொரு காரணமும் இருக்குன்னு சொல்றாங்க.”
“அதென்ன இன்னொரு காரணம்?”
“தமிழக எம்பிக்கள் 3 பேர் இலங்கையில சொத்து வாங்கிப் போட்டிருக்கிறதா அண்ணாமலைக்கு தகவல் வந்ததாம். அதைப்பத்தி ஆராயாம அறிக்கை விட்டா அப்புறம் ஏதாவது பிரச்சினை வந்துடப் போகுது. அதனால நேர்ல போய் விசாரிச்சுட்டு அவங்களைப் பத்தி அறிக்கை விடலாம்னு நினைக்கிறாராம் அண்ணாமலை. அதுக்கான ஆதாரங்களை திரட்டத்தான் அவர் இலங்கை போயிருக்கார்னு கமலாலயத்துல பேசிக்கிறாங்க.”
“ அவர் பண்ற எல்லாத்துக்கும் ஏதாவது ஒரு காரணம் சொல்றதே பாஜகவினரோட வழக்கம். சரி, ஓபிஎஸ்ஸோட மகன் ஜெய்பிரதீப் திடீர்னு பரபரப்பாகி இருக்காரே?”
“ரவீந்திரநாத்தைப் போலவே தன்னோட இன்னொரு மகன் ஜெய பிரதீப்பையும் தீவிர அரசியலுக்கு கொண்டு வரணும்கிறது ஓபிஎஸ்ஸோட ஆசை. டெல்லிக்கு ரவீந்திரநாத்னா தமிழகத்துக்கு ஜெயபிரதீப்ங்கிறது ஓபிஎஸ்ஸோட திட்டம் அதுக்கு ஏத்தா மாதிரி மகனை வளர்த்து வர்றாரு ஓபிஎஸ். இந்த சமயத்துல ராமநாதபுரத்துல ஜெய்பிரதீப்புக்கு அவரோட ஆதரவாளர்கள் சிலர் பேனரை வைக்க, அது எடப்பாடிக்கு கோபத்தை கொடுத்திருக்கு. உள்ளூர் அதிமுகவில இருக்கிற எடப்பாடி தரப்பினர் ஓபிஎஸ் மகனுக்கு எதிரா இருக்காங்களாம். விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் விதமா தனது பேஸ்புக் பக்கத்துல ஒரு பதிவை ஜெய்பிரதீப் வெளியிட்டிருக்கார்.”
“அதுல என்ன சொல்லியிருக்காரு?”
“ராமநாதபுரம் மாவட்டத்துல ஒரு கும்பாபிஷேக நிகழ்ச்சியில கலந்துக்கச் சொல்லி எனக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதுபோல் திருவாடானையில் ஆதித் திராவிடர் கோயில் கட்டுமானப் பணிகளை நேரில் வந்து பார்க்குமாறும் அழைப்பு வந்தது. இது ரெண்டுமே கட்சி சார்ந்த நிகழ்ச்சி இல்லை. அதனால மாவட்ட நிர்வாகத்துல இதுபத்தி நான் ஏதும் சொல்லல. நான் வர்றதை தெரிஞ்சுக்கிட்ட என் நண்பர்கள் சிலர் என்மேல கொண்டிருந்த அன்பின் காரணமா என் புகைப்படத்தோட பேனர் வைத்து, மாலைகள் சால்வைகளை வழங்கினாங்க. நான் புரட்சித் தலைவர் மற்றும் அம்மாவோட கொள்கைகளை உயிராக மதிப்பவன். 3 முறை முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த நிகழ்கால பரதனின் ரத்தம். இந்த உலகத்தில் பெயர், புக பெறுவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கு. என் சுயநலத்துக்காக என் நண்பர்களை ஒருபோதும் பயன்படுத்தியது கிடையாதுன்னு அந்த பேஸ்புக் பக்கத்துல சொல்லியிருக்கார் ஜெய் பிரதீப்.”
“நல்லாத்தானே சொல்லியிருக்காரு?”
“எதிர் தரப்பு இதை ரசிக்கல. முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தவர், நிகழ்கால பரதன்னுலாம் சொன்னதுல அரசியல் இருக்குனு நினைக்கிறாங்க. ஜெயபிரதீப் வருகை இரட்டையர்களிடையே பிளவை அதிகரித்திருக்கிறது”
“ராகுல் காந்தி பார்ட்டியில கலந்துகிட்ட வீடியோ ஒண்ணு சமூக வலைதளங்கள்ல ட்ரெண்ட் ஆகுதே?”
“ஆமாம் காட்மாண்டுவில நடந்த சிஎன்என் முன்னாள் செய்தியாளர் சும்னிமா உதாஸின் திருமணத்துல ராகுல் காந்தி கலந்துக்கிட்ட வீடியோதான் அது. ராகுல் காந்திக்கு அவர் நெருங்கிய நண்பர். பாஜக பிரபலங்கள் பலர் இந்த வீடியோவை சமூக வலைதளங்கள்ல பதிவிட்டு இருந்தாங்க. தமிழகத்தில் எஸ்.குருமூர்த்திகூட இந்த வீடியோவை ட்விட்டர்ல பகிர்ந்து, ‘மோடியிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற திட்டமிட்டுக்கொண்டு இருந்தபோது எடுத்த வீடியோ’ என்று பதிவிட்டிருந்தார். பாஜக தொண்டர்கள் பலரும் இதே வீடியோவை வெளியிட்டு, ‘ஐரோப்பிய நாடுகளில் நாட்டுக்காக மோடி கஷ்டப் பட்டுக்கொண்டு இருக்கிறார். ஆனால் ராகுல் காந்தியோ பார்ட்டி செய்துகொண்டு இருக்கிறார்’ என்று கமென்ட் அடித்திருந்தனர்”
“காங்கிரஸ்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?”
“தனிப்பட்ட நேரத்தில் தன் நண்பர் வீட்டு திருமண விருந்தில் ராகுல் பங்கேற்றதில் என்ன தவறு என்பது அவர்களின் கேள்வியாக இருக்கிறது. மேலும் ‘ராகுல் காந்தி நம் நட்பு நாடான நேபாலத்தில் தனது நண்பர் திருமணத்தில்தான் பங்கேற்றார். நம் எதிரி நாடான பாகிஸ்தானில் உள்ள பதான்கோட்டில் நடந்த நவாஸ் ஷ்ரீப் வீட்டு திருமணத்தில் அழையா விருந்தாளியாக மோடி கலந்துகொண்டதைப் போல் இது ஒன்றும் தவறில்லை. நவாஸ் ஷெரீப்புடன் இணைந்து கேக் வெட்டவில்லை’ என்று காங்கிரஸார் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.”
”சிறப்பு. கவர்னர் சர்ச்சை எந்த அளவு இருக்கு?”
“இன்னும் தீவிரமா இருக்கு. கவர்னர் மாளிகையை கிண்டிலருந்து மாத்தி அமைச்சர்கள் வசிக்கிற கிரீன்வேஸ் சாலைக்கு மாத்திடலாம்னு யோசனைகள் நடக்குது. பெரிய மாளிகைலதான் வசிக்கணும்னு கவர்னர் நினைச்சா ஊட்டில இருக்கிற கவர்னர் மாளிகைல இருந்துக்கட்டும்னு மாநில அரசு நினைக்குதாம்.”
“அவ்வளவு ஈசியா கிண்டி ராஜ்பவன் மாளிகைலருந்து கவர்னரை மாத்திட முடியுமா?”
“அதுக்குதான் இப்ப ராஜ்பவன் பகுதில மான்கள் இறப்புனுலாம் செய்திகள் கசிய விடப்படுதுனு சொல்றாங்க. கவர்னர் மாளிகை அங்க இருக்கிறதுனால அங்க உயிரினங்களுக்கு ஆபத்து. வனப் பகுதியில கவர்னர் மாளிகை இருக்கிறது இயற்கைக்கு பாதிப்புனு சொல்லப் போறாங்க”
“இண்ட்ரஸ்டிங். இந்த சிக்கலை தீர்க்கிறதுக்குதான் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திச்சு பேசுனாரா?”
“இதுவும் ஒரு காரணம். சமீபத்துல பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் மாநில அரசுக்கும் பங்கு வேண்டும் என்று தமிழக அரசு கேட்கிறது. உதாரணமாய் விமான நிலையத்தை தனியார்வசம் கொடுக்கும் போது அதில் வரும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கு மாநில அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசு கேட்கிறது. அரசுக்காக நிலத்தை கொடுத்தோம், அதை தனியாருக்கு கொடுக்கும்போது அதில் பங்கு வேண்டும் என்கிறார் முதல்வர். இதையே மற்ற மாநிலங்களும் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. இது போன்று மத்திய அரசுக்கு தொல்லை கொடுக்க கூடிய விஷயங்களை தமிழக அரசு முன்னெடுப்பது குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டது என்றும் கூறப்படுகிறது. கவர்னரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை திமுக தரப்பிலிருந்து வைக்கப்பட்டதாம். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெங்கய்ய நாயுடு நிறுத்தப்பட்டால் அவரை ஆதரிக்க திமுக தயார் என்றும் வாக்குறுதி கொடுக்கப்பட்டதாம்.”
“ராஜ்ய சபா தேர்தல் குறித்து ஏதாவது செய்தி உண்டா?”
“திமுகவுக்கு நான்கு இடங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதில் ஒன்றை காங்கிரசுக்கு கொடுக்கலாம் என்று கருதுகிறார்கள். காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.”
”பிரியங்கா காந்தி எம்.பி.யாகிறார் என்றால் அவர் பிரதமர் வேட்பாளாராக மாறுவாரா?”
“பொறுத்திருந்து பாருங்கள்’ என்று கிளம்பினார் ரகசியா.