ஹூசைன் ஜைதியின் ‘மாஃபியா குவீன்ஸ் ஆஃப் மும்பை’ நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கங்குபாயின் பயோபிக்தான் ஆலியா பட் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘கங்குபாய் கத்தியவாடி’ திரைப்படம். காதலிப்பதாக ஏமாற்றிய ஒருவன் கங்காவை ரெட் லைட் ஏரியாவில் விற்ற பிறகு கங்கா எப்படி கங்குபாயாக மாறுகிறாள் என்பதே படத்தின் கதை.
1960 – களில் நடக்கும் கதை. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அந்த காலக்கட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறார். விடலைப் பெண்ணான கங்காவை காதலிப்பதாகவும், நடிகை ஆக உதவி செய்வதாகவும் கூறி மும்பைக்கு அழைத்து வந்து விபச்சார விடுதியில் விற்று விட்டு மறைந்து போகிறான் காதலன். எதுவும் புரியாத கங்கா முரண்டு பிடித்து தப்பிக்கப் பார்க்கிறாள். ஆனால் தப்பிக்க வழியில்லை என்று தெரிந்ததும் அந்த வாழ்க்கை முறையை ஏற்று கங்குவாக மாறுகிறாள்.
சாதாரண மாற்றம் அல்ல, தனக்கும் தன்னைப் போன்றுள்ள அனைத்து பெண்களுக்கும் நடக்கும் அநீதிகளை எதிர்த்து போராடும் மிடுக்கான பெண்ணாக ஒரு அற்புத மாற்றம்.
அவளுக்கு வேண்டிய உதவிகளை அந்தப் பகுதி தாதா கரீம் பாய் செய்து கொடுக்க, அரசியலில் நுழைய ஆர்வப்படுகிறாள் கங்கு. அதற்கான முயற்சிகள் எடுக்கிறாள். இன்னல்கள், எதிரிகள். எதிர்ப்புகள். அனைத்தையும் வெற்றிகரமாக கடந்து கங்குபாய் எனும் அரசியல்வாதி உருவாகுகிறாள். இந்த நேரத்தில் அவர்கள் வாழும் இடத்திற்கு பிரச்சினை வருகிறது. சமாளிக்க சிரமப்படுகிறாள் கங்கு.
அப்போது செய்தியாளர் ஹமீத் ஃபைசி என்பர் அறிமுகம் கிடைக்கிறது. உலகுக்கு இவர்கள் யார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் அவர். மேலும் பிரதம மந்திரியை சந்திக்கும் வாய்ப்பையும் கங்குவிற்கு ஏற்படுத்தி தருகிறார்.
விபச்சாரத் தொழிலை சட்டப்பூர்வமாக்க வேண்டும் எனும் கோரிக்கையை பிரதமரிடம் வைக்க, அந்த கோரிக்கை ஏற்கப்படுகிறது. கங்குபாய் வாழ்க்கை பூரணமடைகிறது.
கங்குபாயாக ஆலியா பட். நடிப்பு ராட்சசி என்று இனி அவரை அழைக்கலாம்.
எதன் மீதும் நம்பிக்கை இல்லாத போதிலும் காதல் ஆட்கொள்ள முயலும்போது அதிலிருந்து தப்பிக்க கங்குவால் மட்டும் முடியுமா என்ன?
அவளுடைய துணிகளை தைக்க வரும் தையல்காரனுடன் அவளுக்கு காதல் மலர்கிறது. ஒரே பெண் இரு வேறு விதமாக காதலிப்பதை ஒரே படத்தில் காண்பது அரிதான ஒன்று. குழந்தைத்தனமாக காதலன் மீது முழு நம்பிக்கை வைத்து அவன் என்ன சொன்னாலும் மறுபேச்சின்றி தலையசைத்து மும்பை வந்த கங்காவின் காதல் ஒரு ரகம். அதிலிருந்து முற்றிலும் மாறி மும்பையில் வாழ்க்கையில் அடிபட்டு அரசியலில் வளர்ந்த பிறகு வந்த காதல் வேறு ரகம். இரண்டையும் அலியா பட் அழகாக வேறுபடுத்தி காட்டுகிறார்.
எந்தவொரு நொடியையும் இழக்காமல் தன்னை முன்னிருத்தி காதல் செய்யும் கங்குவையே மனம் கொண்டாடித் தீர்க்கிறது.
காமமின்றி வாழ்வை கடத்த முடியும், காதலின்றி / அன்பின்றி வாழ ஓருயிரால் இங்கு சாத்தியமா? என்பதை தன் தலையைக் கோத சொல்லி ஆணையிட்டு அன்பிற்காக ஏங்கித் தவிக்கும் கங்குவின் நடிப்பின் மூலம் காதலே சிறந்ததென்று தீர்ப்பளித்துவிட்டாள். அத்தகைய காதலை ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்காக சற்றும் தயங்காமல் தியாகம் செய்யவும் முடிவெடுத்து விடுகிறாள். கங்குபாய் அழகான பாத்திரப் படைப்பு.
எழுத்தைவிட வலிமையான ஆயுதம் வேறெதுவும் இல்லை என்பதற்கேற்ப செய்தியாளராக வரும் ஜிம் சார்ப் தன்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார்.
ஒருவேளை கங்கு, ஃபைசியை சந்திக்காவிடில் காமத்திபுராவிற்கு விடியல் கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறியே!
படத்தின் இறுதிக் காட்சியில் வலம் வரும் கங்கு பாய், ஓரமாக நின்றிருந்த ஃபைசியை அழைத்து நெற்றியில் முத்தமிடும் போது, காமத்திபுராவில் இருந்த பெண்களின் மனங்கள் மட்டுமின்றி பார்க்கும் அனைவரின் மனங்களிலும் நிம்மதி.
பாட்டுக்கும், நடனக் காட்சிகளுக்கும் பெயர் போன பன்சாலி, இந்தப் படத்திலும் அதே பிரம்மாண்டத்தை தவறாமல் அள்ளி வழங்கியிருக்கிறார்.
மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று. நெட்ஃபிளிக்ஸில் கிடைக்கிறது.