திரைக் கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் மரியாதை கொடுப்பதில் கேரள அரசோ அல்லது மக்களோ என்றுமே குறை வைத்ததில்லை. பிரபல இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனின் வீடு விஷயத்தில் அது மீண்டும் ஒருமுறை உண்மையாகி இருக்கிறது.
கேரளாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர் அடூர் கோபாலகிருஷ்ணன். சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை 5 முறையும், கதாசிரியருக்கான விருதை 2 முறையும், சிறந்த படத்துக்கான தேசிய விருதை 2 முறையும் இவர் வென்றுள்ளார்.
எல்லாவற்றுக்கும் மேலாக 2005-ம் ஆண்டில் தாதாசாகேப் பால்கே விருதை வென்ற இவர், பின்னர் பத்ம விபூஷண் விருதாலும் கவுரவிக்கப்பட்டார். ‘எலிப்பத்தாயம்’, ’மதிலுகள்’, ‘விதேயன்’ என்று இவர் இயக்கிய பல படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளி வந்துள்ளன.
இதனாலேயே கேரள மக்கள் தங்கள் கவுரவத்தின் சின்னமாக அடூர் கோபாலகிருஷ்ணனை பார்க்கிறார்கள்.
இந்த அளவுக்கு கேரள மக்களின் அன்புக்கு பாத்திரமான அடூர் கோபாலகிருஷ்ணனின் பூர்வீக வீடு பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ‘மணக்கலா’ என்ற இடத்தில் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வீட்டில், சில காலங்களுக்கு முன்புவரை அடூர் கோபாலகிருஷ்ணனின் சகோதரியும் அவரது குடும்பத்தினரும் வசித்துவந்தனர். சகோதரியின் இறப்புக்கு பின்னர் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. இதனால் வீடு பாழடைந்தது. இதைத்தொடர்ந்து சகோதரியின் மகன், அந்த வீட்டை இடிக்க திட்டமிட்டார்.
கடந்த பிப்ரவரி 2-ம் தேதி அந்த வீட்டை இடிப்பதற்கான பணிகள் தொடங்க இருந்த நிலையில், உள்ளூர் மக்கள் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அடூர் கோபாலகிருஷ்ணன் சிறுவயதில் வளர்ந்த வீட்டை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்பது அவர்களின் கோஷமாக இருந்தது.
பின்னர் போலீஸார் தலையிட்டு சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இப்போதைக்கு வீட்டை இடிக்க மாட்டோம் என்று அடூர் கோபாலகிருஷ்ணனின் மருமகன் (சகோதரி மகன்) வாக்குறுதி அளிக்க, போராட்டக்காரர்கள் பின்வாங்கினர்.
அதேநேரத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன் கல்சுரல் ஸ்டடி சென்டர் என்ற அமைப்பு, இந்த வீட்டை இடிக்க அனுமதிக்க கூடாது என்று கேரள அரசிடம் வலியுறுத்தியது.
இதைத்தொடர்ந்து அந்த வீட்டை அரசுடைமையாக்கி அதை புராதன சின்னமாக அறிவிக்கும் முயற்சிகளில் கேரள அரசு இறங்கியுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கலாச்சார துறை இயக்குநருக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரள மக்கள் அடூர் கோபாலகிருஷ்ணன் மீது வைத்துள்ள பாசத்தை மெச்சும் முன், அவர்களுக்கு அடூர் செய்த உதவியையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். “ஏழை மக்களுக்கு இலவசமாக வீடு வழங்கும் திட்டத்துக்காக, பணக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு நிலத்தை வழங்க வேண்டும்” என்று கேரள அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.
மற்றவர்கள் ஏற்றார்களோ இல்லையோ, அடூர் கோபாலகிருஷ்ணன் இதை ஏற்றுக்கொண்டார். அடூரில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை கடந்த பிப்ரவரி மாதம் வழங்கினார். அந்த அன்புக்கு கேரள மக்களும் அரசும் காட்டும் பிரதிபலனாகவும் இது இருக்கலாம்.