’முகமூடி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அந்தப்படம் தமிழில் சரியாக போகாத காரணத்தால் இங்கு அவருக்கு வாய்ப்பில்லாமல் போனது.
வேறு வழியில்லாமல், தெலுங்கு சினிமா பக்கம் திரும்பிய, பூஜாவுக்கு அடுத்தடுத்து சில ஹிட் படங்கள். இதனால் தெலுங்கில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக முன்னணி வகித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
இந்நிலையில் ’பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க தமிழில் மீண்டுமொரு வாய்ப்பு கிடைத்தது. பெரும் எதிர்பார்புடன் நடித்த பூஜா ஹெக்டே, இப்படத்திற்கு பிறகு தமிழில் நயன்தாரா இடத்தைப் பிடித்து விடலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் ’பீஸ்ட்’ வசூலில் குறிப்பிடும்படியான வெற்றியைப் பெற்றிருந்தாலும், மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் தெலுங்கு சினிமாவுக்கே பேக் அப் செய்துவிடலாம் என்று நினைத்த நிலையில் ராம் சரணுடன் நடித்த ’ஆச்சார்யா’ படமும் எதிர்பார்த்த அளவு போகவில்லையாம்.
ஏற்கனவே பாகுபலி புகழ் பிரபாஸுடன் நடித்த ’ராதே ஷ்யாம்’ படமும் வரவேற்பைப் பெறாததால் துவண்டு போயிருந்த பூஜா ஹெக்டேவுக்கு மீண்டுமொரு அடி.
அதனால் சல்மான் கானுடன் ஹிந்தியில் நடிக்கும் ‘கபி ஈத் கபி தீபாவளி’ படத்தைதான் தற்போது பெரிதாக எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். யாராவது ஏதாவது கேட்டால், ’நான் பான் – இந்தியா நடிகை’ என்று புன்னகைக்கிறாராம் பூஜா ஹெக்டே.
நெட்ஃப்ளிக்ஸ் கற்ற பாடம். உஷாராகும் அமேசான் ப்ரைம்.!
இதுவரையில் வளர்ச்சியை மட்டுமே ருசித்து வந்த ஒடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் முதல் முறையாக சரிவைச் சந்தித்து இருக்கிறது.
முதல் முறையாக அதன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதற்கு பல காரணங்களை முன்வைத்தாலும், இந்தியாவைப் பிரதிபலிக்கும், இங்குள்ள கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஒரிஜினல் படைப்புகள் இல்லாததால் இங்கு நெட்ஃப்ளிக்ஸ் எதிர்பார்த்த இடத்தைப் பிடிக்க முடியவில்லை.
இதைப் பார்த்து உஷாராகி இருக்கிறது போட்டி ஒடிடி தளமான அமேசான் ப்ரைம். இந்தியாவில் தனது செயல்பாடுகளை ஆரம்பித்த நாள் முதலே, இங்குள்ள படங்களின் உரிமையை வாங்குவது, அதிகப்படியான அளவில் பிராந்திய மொழிகளில் ஒரிஜினல் படைப்புகளை தயாரிப்பது என அமேசான் ப்ரைம் வேகமெடுத்தது.
கோவிட் தாக்கம், வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பது என்ற இரு காரணிகளும் வலுவிழந்து போக, தற்போது அமேசான் ப்ரைமும் கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கிறது என்கிறார்கள்.
இதனால் உஷாரான அமேசான் ப்ரைம், அந்தந்த பிராந்திய மொழி படைப்புகளைப் பற்றிய பிரச்சாரத்தை திரைப்பட நட்சத்திரங்களை வைத்து முன்னெடுத்து இருக்கிறது. இதற்காக மும்பையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என முக்கிய மொழிகளின் திரைப்பட நட்சத்திரங்களை வரவழைத்து, ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் வகையிலான மாபெரும் நிகழ்வை நடத்தியிருக்கிறது.
இதையடுத்து, இதர ஒடிடி தளங்களும் இதே போல் களத்தில் இறங்க் திட்டமிட்டு வருகின்றனவாம்.