கோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய தனுஷின் கொடி, இனி ஹாலிவுட்டிலும் பறக்கப் போகிறது.
2 ஆண்டுகளுக்கு முன் ஏற்கெனவே ‘தி எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆஃப் பகீர்’ (The Extraordinary Journey of the Fakir) என்ற பிரெஞ்சுப் படத்தில் நடித்து வெளிநாட்டு ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற தனுஷ், இப்போது ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். பிரபல பிரபல ஹாலிவுட் படங்களான ‘அவன்ஞ்சர்ஸ் தி எண்ட் கேம்’, ‘எக்ஸ்ட்ராக்ஷன்’, ‘கேப்டன் அமெரிக்கா’, ‘இன்ஃபினிட்டி வார்’ ஆகியவற்றை இயக்கிய ரூசோ ப்ரதர்ஸ்தான் இப்படத்தையும் இயக்குகிறார்கள் என்பது இதன் சிறப்பம்சம்.
”தி கிரே மேன்” (The Gray Man) என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஜூலை 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
‘தி கிரே மேன்’ படத்தில் தனுஷின் காதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்து வந்த நிலையில், அவர் நெகட்டீவ் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படியல்ல.
ஆக்ஷன் த்ரில்லர் படமான இதன் முதல் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானபோது, அதில் தனுஷின் படம் இல்லாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தருவதாக இருந்தது. இப்போது இப்படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தனுஷ். இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் 007 டைப் கதை. இதில் தனுஷ் ஹீரோ அல்ல, ஆனா கதைக்கு திருப்புமுனை தரும் முக்கியமான கதாபாத்திரம் என்று செய்திகள் கூறுகின்றன. தனுஷின் கதாபாத்திரம் என்ன என்பதை வெளியிடாமல் சஸ்பென்ஸில் வைத்திருக்கிறார்கள்.
அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயில் பணியாற்றும் திறமை வாய்ந்த அடியாள், அவன் கண்டுபிடிக்கும் சில விஷயங்கள் அவனுக்கு ஆபத்தை உண்டு பண்ணுகின்றன. இந்த சிஐஏ அடியாளை கொலை செய்யத் துடிக்கும் மற்றொரு முன்னாள் சிஐஏ கொலையாளியின் படை…இப்படி செல்கிறது கதை.
”தி கிரே மேன்” நாவலை திரைப்படமாக்க ஏற்கெனவே பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்பத்தில் கிறிஸ்டோபர் மெக்குவாரி 2016-ல் இப்படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆனால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை.
பின்னர் ஜூலை 2020 வரை இத்திட்டம் செயலற்ற நிலையில் இருந்தது, அதன் பின் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளம் அதை மாற்றியமைக்கும் புதிய திட்டங்களை அறிவித்தது. பின்பு ஜோ மற்றும் அந்தோனி ருஸ்ஸோ இப்படத்தை இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இப்படத்துக்கான திரைக்கதையை ஜோ ருஸ்ஸோ எழுதுகிறார். அவருடன் இணைந்து கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் ஸ்டீபன் மெக்ஃபீலி ஆகியோரும் எழுதுகிறார்கள்.
இப்படத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், தனுஷ், அனா டீ அர்மாஸ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மோரா, ஜூலியா பட்டர்ஸ் மற்றும் ரெஜி ஜீன் பேஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் பட்ஜெட் 200 மில்லியன் டாலர்கள். அதாவது ரூபாய் மதிப்பில் சுமார் 1,500 கோடி ரூபாய். அம்மாடியோவ்.