தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை ஆளுநரே நியமித்து வருகிறார். இந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார்.
இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ” குஜராத்தில் மாநில அரசுதான் துணை வேந்தவர்களை நியமனம் செய்கிறது. இது மாநில அரசின் உரிமை தொடர்பான பிரச்சினை. மாநில கல்வி உரிமை தொடர்பான பிரச்சினை. எனவே அவையில் உள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒரு மனதாக இந்த சட்ட முன்முடிவை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மாசோதவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் அதிமுக சார்பில் இந்த மசோதாவை ஆரம்ப நிலையில் எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா
சென்னை ஐஐடியில் மேலும் 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக ஐஐடியில் 60 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது.
கல்வி முறையில் மாற்றம் – ஆளுநர் விருப்பம்
நாடு வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
ஊட்டி ராஜ்பவனில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கான மாநாடு நடந்தது. இதன் 2 நாள் கருத்தரங்கை கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்து பேசும்போது, “இந்தியாவில் சுதந்திரத்திற்கு முந்தைய கல்வி முறை அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு இருந்தது. நாடு வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இந்தியா வரும் 2047-ல் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்க கல்வி முறைகளில் மாற்றங்கள் தேவை. அதற்கான திட்டமிடுதலில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஈடுபட வேண்டும்” என்றார்.
சோனியா வீட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை
டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் வீட்டில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆலோசனை நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோணி, ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக, பிரசாந்த் கிஷோர் முன்வைத்துள்ள கட்சியின் சீரமைப்புக்கான திட்டங்களை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.