ஒரு குழந்தையால் ஒரு குடும்பமே, நாய் மீது கொள்ளும் பாசத்தையும் குழந்தைகளின் கள்ளம் கபடம் இல்லாத மனதையும் அழகாக காட்டியிருக்கிறது ஓ மை டாக்.
அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த படத்தை நடிகர் சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் ஷரோவ் சண்முகம் இயக்கத்தில், நடிகர் விஜயகுமார், அருண் விஜய் , அர்னவ் விஜய், மஹிமா நம்பியார், வினய் நடித்திருக்கின்றனர்.
நாய் கண்காட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் வெற்றிப் பெற்றதால் தலைக்கனத்துடன் வாழும் மற்றவர்களை மதிக்காத பெர்னாண்டஸ் (வினய் ) என்பவரிடமிருந்து கதை தொடங்குகிறது.
வெளிநாட்டிலிருந்து திரும்புகிறார் பெர்னாண்டஸ். அவரது வீட்டு நாய் இரண்டு குட்டிகள் போட்டிருக்கிறது. அதில் ஒரு குட்டிக்கு கண் தெரியாது. அந்தக் குட்டியைக் கொல்ல இருவரை அனுப்புகிறார். இந்த இரண்டு ஜோக்கர்களிடமிருந்து தப்பித்த நாய் அர்ஜூன் (அர்னவ் விஜய்) என்ற சிறுவனிடம் சேர்கிறது. மகனை செல்லமாய் வளர்க்கும் அப்பா ஷங்கர் (அருண் விஜய்) அவன் ஆசைக்காக நாயை சேர்த்துக் கொள்கிறார்.
நாயின் (சிம்பா) குறைபாட்டை அறிந்து அதற்கேற்ப பயிற்சி கொடுக்கிறான் சிறுவன் அர்ஜுன். சிம்பாவின் கண்ணை குணப்படுத்தி, நாய்க் கண்காட்சியில் பங்கு பெறச் செய்வதே அவன் விருப்பம். முதல் சுற்றில் நன்றாகவே பர்ஃபாம் செய்துவிடுகிறது சிம்பா. பதக்கத்தை பெறுவதில் உலக சாதனை படைக்க நினைக்கும் பெர்னாண்டஸுக்கு இது பிடிக்கவில்லை. அவர் பல இடங்களில் முட்டுக்கட்டை போட சிம்பாவும் அர்ஜுனும், ஷங்கர் மற்றும் தாத்தா (விஜய குமார்) ஆகியோரின் ஆதரவில் வெல்கிறானா இல்லையா என்பதுதான் கதை.
அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் போட்டியாக, அறிமுக குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் அர்னவ் விஜய் நன்றாக நம்மை சிரிக்க வைக்கிறான். நாயின் காட்சிகள் நன்றாகவே அமைந்திருக்கின்றன. கதையும், திரைக்கதையும் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும்.
குடும்பத்துக்குள் நடக்கும் பாசப் போராட்டம், தந்தை-மகன் உறவு, தாயின் பாசம், குழந்தைகளுக்குள் இருக்கும் நட்பு ஆகியவற்றை இயல்பாய் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இவையெல்லாம் படத்துக்கு பலமாக இருக்க பலவீனங்களும் நிறைய இருக்கின்றன.
பல இடங்களில் லாஜிக் மிஸ்ஸாகிறது. இளம் அம்மா வேடத்தை ஏற்றிருக்கும் மஹிமா நம்பியாருக்கு மேக்கப்பை சற்று குறைத்திருக்கலாம். படத்தில் நடித்த எந்த கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இல்லாமலே செல்வது திரைக்கதையின் பலவீனம். பல ஆண்டுகளாக போட்டியில் வெல்லும் பெர்ணாண்டஸ், ஏன் ஒரு குழந்தையின் நாயைக் கண்டு அஞ்சுகிறார் என்பதற்கு திரைக்கதை சரியான விளக்கமளிக்கவில்லை. இரு காட்சிகளில் காமெடிக்காக இயக்குநர் மனோபாலா இருக்கிறார், ஆனால் காமெடி இல்லை.
சுருக்கமாக, சிறுவர்களை கவரும் படமாக அமைந்திருக்கிறது ஓ மை டாக்.