நெட்ஃப்ளிக்ஸ் கொரோனா பொதுமுடக்க காலத்தில் உலகமெங்கும் அதிகமாய் பரவிய பெயர், முக்கியமாய் இந்தியாவில். இருந்த இடத்திலிருந்து திரைப்படங்களை, வெப் தொடர்களை, ஆவணப் படங்களை மக்கள் பார்த்தார்கள். மற்ற ஒடிடி தளங்களைவிட நெட்ஃப்ளிக்சின் சந்தா தொகை அதிகம் என்றாலும் அதன் தரத்துக்காக மக்கள் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் ஆனார்கள். நெட்ஃப்ளிக்ஸின் மதிப்பு மிக வேகமாய் கூடியது.
ஆனால் இன்று நிலைமை மாறியிருக்கிறது. இன்று பங்கு சந்தை மதிப்பில் நெட்ஃப்ளிக்சின் மதிப்பு 37 சதவீதம் குறைந்திருக்கிறது. இது நெட்ஃப்ளிக்ஸ்க்கு கடுமையான பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த 100 நாட்களில் உலக அளவில் 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்திருக்கிறது.
நெட்ஃப்ளிக்ஸ்க்கு என்னாச்சு?
நெட்ஃப்ளிக்ஸின் பின்னடைவுக்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன.
முதல் முக்கியமான காரணமாக அந்நிறுவனம் குறிப்பிடுவது, அக்கவுண்ட் ஷேரிங் (Account Sharing) முறை. நெட்பிளிக்ஸ் விதிகள்படி ஒரு சந்தாவை 10 நபர்கள் வரை பயன்படுத்த முடியும். இவர்களில் 4 பேர் ஒரே சமயத்தில் நெட்ஃப்ளிக்சில் படம் பார்க்கலாம்.
இந்தப் பகிர்தலை நெட்ஃப்ளிக்ஸ் முதலில் கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது 22.2 கோடி சந்தாதாரர்கள் உள்ள நிலையில் கூடுதலாக 10 கோடி பேர் இப்படி பகிர்தல் மூலம் பயன்படுத்துவது நிறுவனத்துக்கு இழப்பு என்று நெட்ஃப்ளிக்ஸ் கருதுகிறது. அதனால் விரைவில் சந்தா முறையை மாற்ற இருப்பதாக கூறுகிறது. இனி பத்து பேர் வரை பகிர்வது முடியாமல் போகலாம்.
இரண்டாவதாக நெட்ஃப்ளிக்ஸின் சந்தா தொகை. மற்ற ஒடிடி தளங்களைவிட நெட்ஃப்ளிக்ஸின் சந்தா அதிகம். ஆனால் அதன் தரத்துக்காகவும் அந்தத் தளத்தில் இருந்த திரைப்படங்களுக்காகவும் மக்கள் அதிக சந்தாவை பொருட்படுத்தவில்லை. ஆனால் கொரோனா பொதுமுடக்கங்களிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போது சந்தா தொகை அதிகமாக இருப்பதை உணர்ந்தார்கள்.
நெட்ஃப்ளிக்ஸும் இந்த பிரச்சினையை புரிந்திருந்தது. அதனால் லாக்டவுன் முடிந்ததும் சந்தாவை சற்று குறைத்தது. ஆனால் அது பலனளிக்கவில்லை.
இப்போது தனது சந்தா முறையை மாற்றப் போவதாக நெட்ஃப்ளிக்ஸ் சிஇஒ ரீட் ஹேஸ்டிங்ஸ் (Reed Hastings) கூறியிருக்கிறார்.
குறைந்த சந்தாவில் நெட்ஃப்ளிக்ஸ் பார்க்கலாம், ஆனால் இடையில் விளம்பரங்கள் வரும். விளம்பரங்கள் இல்லாமல் பார்க்க விரும்புபவர்களுக்கு அதிக சந்தா என்ற முறையை செயல்படுத்த இருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.
மூன்றாவது முக்கிய காரணம் உக்ரைன்-ரஷ்யா போர். உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவை கண்டிக்கும் விதமாக ரஷ்யாவில் நெட்ஃப்ளிக்ஸ் தனது சேவையை நிறுத்தியது. இதனால் 7 லட்சம் ரஷ்ய சந்தாதாரர்கள் குறைந்திருக்கிறார்கள்.
இதற்கிடையே நெட்ஃப்ளிக்ஸின் தடுமாற்றாங்களால் பிற ஒடிடி தளங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன. டிஸ்னி-ஹாட்ஸ்டார், எச்பிஒ, அமசான் போன்ற நிறுவனங்கள் வேகமாய் வளர்கின்றன.
நெட்ஃப்ளிக்ஸ்க்கு பின்னடைவு என்ற செய்திகள் வந்தாலும் அந்தப் பின்னடைவை பெரிதாக பார்க்க வேண்டியதில்லை என்ற கருத்தும் இருக்கிறது.
கடந்த வருடம் இதே காலக் கட்டத்தில் 170 கோடி டாலர் வருவாய் நெட்ஃப்ளிக்ஸ்க்கு இருந்திருக்கிறது. இந்த வருடம் அது 160 கோடி டாலராக குறைந்திருக்கிறது. பத்து கோடி டாலார் வருவாய் இழப்பு நெஃப்ளிக்சை ஒன்றும் செய்துவிடாது என்று கூறுகிறார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம்.