மதுரையில் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட ஒரு மூதாட்டி உட்பட 2 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் பலியான இருவரின் குடும்பத்திற்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த இலங்கை அரசு முடிவு
இலங்கையில் அதிபர் மாளிகை முன்பு திரண்டுள்ள போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் பொருளாதார நிலை வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் மாளிகைக்கு வெளியே கூடாரங்கள் அமைத்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு வரும் மக்களின் போராட்டம் இன்று 9-வது நாளாக நீடிக்கிறது. இப்போராட்டத்துக்கு இளைஞர்கள், மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருவது அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
பஞ்சாப்பில் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்
பஞ்சாப் மாநிலத்தில் வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று தாங்கள் ஆட்சியமைத்தால் வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. ஜூலை 1 முதல் இத்திட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு கொரோனா
டெல்லி கேபிடல்ஸ் அணியின் முகாமில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது மகாரஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டு வீரர்கள் பயோ பபிளில் இருந்தபடி போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள். இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹாத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரும், அந்த அணியின் சில வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.