சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று. இதை விருப்பத்துடன் செய்யவில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இன்றைய கூட்டத்தின்போது சொத்துவரி உயர்வு தொடர்பான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்பு தேர்தல் நடைபெறவில்லை. மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் தேக்க நிலையை அடைந்திருந்தன. தற்போது அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்பில் பொறுபேற்றவர்கள் அரசிடம் என்ன எதிர்பார்ப்பார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் ஆற்றவேண்டிய பணிகளுக்கு, திட்டங்களுக்கான நிதியை எதிர்பார்ப்பார்கள்.
இந்த நிலையில்தான் மக்களை பாதிக்காத வகையில், குறிப்பாக ஏழை, எளிய மக்களை, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில், உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சியை மனதில் வைத்துக்கொண்டு சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று. எனவே, எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து சட்டசபை உறுப்பினர்களும் மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்திட வேண்டாம்” என்றார்.
சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த பிறகு சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அதன்பின்னர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். “நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் சொத்து வரி உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 600 சதுரஅடிக்கு 25 சதவீதம் தொடங்கி 150 சதவீதம் என்று மக்கள் அதிர்ச்சியடையும் வகையில் கடுமையாக சொத்து வரியை திமுக அரசு உயர்த்தியிருக்கிறது. இது கண்டனத்துக்குரியது” என்று அப்போது அவர் கூறினார்.
திருவள்ளூரில் தொழில்பூங்கா: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
திருவள்ளூரில் தொழில்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ராஜேந்திரனின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், “தேர்தல் வாக்குறுதி மற்றும் 2022-23-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததை போல், திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பு சலுகை – மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல்
உக்ரைன்- ரஷ்யா போரின் காரணமாக, உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை நிறைவு செய்ய ருமேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் கஜகஸ்தான் ஆகிய உக்ரைனின் அண்டை நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மக்களவையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசும்போது, “இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் தங்கள் கல்வியை முடிக்க உக்ரைன் அரசு ஓராண்டு தளர்வு வழங்கியது. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
சொமேட்டோ, ஸ்விக்கி செயலிகள் முடங்கின
இந்தியா முழுவதும் உணவு விநியோகம் செய்யும் முன்னணி நிறுவனங்களாகிய ஸ்விக்கி மற்றும் சொமேட்டோவின் செயலிகள் இன்று சில நிமிடங்கள் முடங்கின. இதனால் அவற்றை அதிகம் பயன்படுத்தும் மக்கள், அவற்றில் பணிபுரியும் இளைஞர்கள் என அனைவரும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டனர். தற்போது இச்செயலிகள் சீராக செயல்பட தொடங்கியுள்ளன. இது குறித்து அதன் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுவரை வெளிவரவில்லை