No menu items!

சிஎஸ்கேவின் கதை-3 : தோனி அனுப்பிய எஸ்எம்எஸ்

சிஎஸ்கேவின் கதை-3 : தோனி அனுப்பிய எஸ்எம்எஸ்

இந்திய கிரிக்கெட்டில் தோனிக்கு நெருக்கமானவர்  யார் என்று கேட்டால், சிறு குழந்தைகூட ‘சின்ன தல ரெய்னா’வின் பெயரைச் சொல்லும். அந்த அளவுக்கு ஆரம்ப காலம்தொட்டே இருவரும் நண்பர்கள்.  பிற்காலத்தில் தோனிக்கு மகள் பிறந்தபோது, அவரை செல்போனில் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்தச் சூழலில் ரெய்னாவைத் தொடர்புகொண்டு அந்த தகவலை தெரிவித்தனர். அந்த அளவுக்கு இருவரிடையேயும் ஆழமான நட்பு உண்டு.

 தோனி – ரெய்னா நட்பைப் பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளும் நன்றாக தெரிந்து வைத்திருந்தனர். அதனாலேயே சென்னை அணியில் தோனிக்குத் துணையாக ரெய்னாவைவும் எப்படியாவது இழுத்துப் போட  வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர்.

இந்த ஏலத்தில் 55 லட்சம் ரூபாயை அடிப்படை விலையாகக்  கொண்டு ரெய்னாவுக்கான ஏலம் தொடங்கியது. தோனியை ஏலத்தில் எடுக்க முடியாமல் தவறவிட்ட மும்பை அணி, ரெய்னாவையாவது வாங்கியாக வேண்டும் என்று தீவிரம் காட்டியது. மும்பையைப் போலவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரெய்னாவுக்காக முஷ்டியை உயர்த்தியது. ஆனால் இந்த முறையும் வெற்றி சிஎஸ்கேவுக்குத்தான். 2.6 கோடி ரூபாய் கொடுத்து ரெய்னாவை வளைத்துப் போட்டது சிஎஸ்கே.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போலவே இந்த ஏலத்தை மிகுந்த ஆர்வத்தோடு தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருந்தார் சுரேஷ் ரெய்னா. மகேந்திர சிங் தோனியை சென்னை வாங்கியதைத் தொடர்ந்து தன்னையும் அவர்கள் வாங்க வேண்டுமே என்று அவரது இதயம் படபடத்தது. சென்னை தன்னை ஏலத்தில் எடுத்தால், தோனியுடன் இன்னும் நெருக்கமாக வாய்ப்பு கிடைக்குமே என்ற ஆசை அவருக்கு.

 சென்னை அணி தன்னை வாங்கியது தெரிந்ததும் உற்சாகத்தில் குதித்தார் ரெய்னா. அவரது மகிழ்ச்சியைக் கூட்டும் விதமாக அடுத்த நிமிடமே அவரது செல்போன் சிணுங்கியது.   தோனியிடம் இருந்துதான் எஸ்எம்எஸ் வந்திருந்தது.

 ‘மஜா ஆயேகா தேக்?’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார் தோனி. ரெய்னாவின் மகிழ்ச்சி கூடியது. தன்னைப் போலவே தோனியும் தாங்கள் இணைந்து விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டதை நினைத்து அவர் கண்கலங்கினார்.

ரெய்னாவைத் தொடர்ந்து மேத்யூ ஹெய்டன், முத்தையா முரளிதரன், மைக்கேல் ஹஸ்ஸி, ஸ்டீபன் பிளம்மிங், அஸ்வின், முரளி விஜய் என்று மேலும் பல வீரர்களை ஏலக் குழுவினர் வாங்க சென்னையின் சிங்கப் படை முழுமையடைந்தது. எதிர்காலத்தில் பல வெற்றிகளைக் குவித்து தமிழ் ரசிகர்களின் மனதில் மட்டுமின்றி உலக ரசிகர்களின் மனதிலும் சிம்மாசனமிட்டு இது அமரப் போகிறது என்று அப்போது இந்த வீரர்களுக்கு தெரியாது.

 (வெள்ளிக்கிழமை மீண்டும் சிங்கங்கள் கர்ஜிக்கும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...