1920-களில் நடைபெறும் கற்பனை சம்பவங்களுடன் உருவாக்கப்பட்ட கதையைக் கையிலெடுத்து இருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி.
சுதந்திரப் போராட்ட களத்தில் இருக்கும் மக்கள் ஒவ்வொருவருடைய கையிலும் ஆயுதத்தைக் கொடுத்தால், ஆங்கிலேயர்களை அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பிவிடலாம் என்பதுதான் ’RRR’ படத்தின் ஒன்லைன்.
பாகுபலியின் இரண்டு பாகங்களுக்குப் பிறகு மீண்டும் தனது குடும்பத்தினருடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி. அவரது குடும்பமே கதை இலாகாவில் ஈடுபட்டிருக்கிறது என்பதை டைட்டில் கார்டை பார்க்கும் போது தெரிகிறது. கதை ராஜமெளலியின் அப்பா விஜயேந்திர பிரசாத், கதை மேம்பாடு அவரது அண்ணன் காஞ்சி, திரைக்கதை மற்றும் இயக்கம் ராஜமெளலி.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்குவதற்காக போராடிய அல்லுரி சீதாராமா ராஜூ, கோண்ட் பழங்குடியின மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுகு எதிராக களமிறங்கிய கொமாரம் பீம் என்ற இரு புரட்சியாளர்களின் கற்பனை பிம்பமாக ராம் சரணையும், ஜூனியர் என்.டி.ஆரையும் களமிறக்கி இருக்கிறார்.
மூன்று மணிநேரம் நான்கு நிமிட படத்தில் நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களில் ஒன்றை கூட ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் மிச்சம் வைக்கவில்லை. இரண்டு ஹீரோக்களையும் துள்ள வைத்து, பாய வைத்து, எகிற வைத்து பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கிறார் ராஜமெளலி.
அடிலாபாத் காட்டுக்குள் படம் ஆரம்பிக்கிறது. அக்காட்டிற்குள் வேட்டையாட தனது மனைவியுடன் வருகிறார் லார்ட் ஸ்காட். அங்கு வாழும் கோண்ட் பழங்குடியின சிறுமி ஸ்காட்டின் மனைவிக்கு பச்சைக் குத்துவது போல கையில் வண்ண ஓவியம் தீட்டி விடுகிறாள். வேட்டை முடிந்து போகும் போது, அந்த சிறுமியின் தாய்க்கு இரண்டு நாணயங்களை வீசிவிட்டு, அச்சிறுமியை அடிமையாக அழைத்து செல்கிறது ஆங்கிலேயப் படை. அதைத் தடுக்க வரும் அச்சிறுமியின் தாயை சுட்டுத் தள்ள போகிறார் ஆங்கிலேய வீரர். இதைப் பார்க்கும் ஸ்காட், தேவையில்லாமல் ஒரு புல்லட்டை வீணாக்காதே. அதன் மதிப்பு மிக அதிகம். இங்கிலாந்தில் தயாராகி, இங்கு உன் கைக்கு வந்து சேர்வதற்குள் அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா என விளக்கம் கொடுக்கிறார். துப்பாக்கி குண்டின் மதிப்பு கூட மனித உயிருக்கு மதிப்பில்லை என்று சொல்லும் காட்சி நம்மை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது.
அடுத்து வரும் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிகள் கொஞ்சம் அதிகப்பட்ச ஹீரோயிஸம் என்றாலும் ரசிக்க வைக்கின்றன. இருவரும் உடன்பிறவா அண்ணன் தம்பியாக போட்டிப் போட்டு கொண்டு ஆடுகிறார்கள். அடிக்கிறார்கள். நடிக்கவும் செய்கிறார்கள். இப்படியே முதல் பாதி ஏறக்குறைய ஒன்ணேமுக்கால் மணிநேரம் ஓடிவிடுகிறது.
இரண்டாவது பாதியில் ராம் சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் தங்களது நோக்கங்களுக்காக மோதிக்கொண்டால், என்னவாகும்… சென்டிமெண்டும் எமோஷனலும் தூள் பறக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் நீங்கள் ரசனைமிக்க ரசிகரே. அதே நடக்கிறது.
அஜய்தேவ்கன் கொஞ்ச நேரம் வந்தாலும், கதாபாத்திரத்தோடு இயல்பாக ஒன்றிவிடுகிறார். ஸ்ரேயாவும் அப்படியே.
ஆலியா பட் ஃப்ரேமிற்கு ஃப்ரேம் அழகாய் தெரிந்தாலும், நடிப்பதற்கு வாய்ப்பில்லை.
ராம் சரணை பாம்பு கடித்த கொஞ்ச நேரத்திலேயே, அவர் கோபத்தில் சுவற்றை குத்தி உடைப்பது, புல்லட் போன்ற மெகா பைக்கை ஒற்றை கையால் ஜூனியர் என்.டி.ஆர். சுழற்றி அடிப்பது போன்ற தெலுங்குப் பட மாஸ் மசாலாவை ராஜமெளலியும் வைத்திருப்பது யாரை திருப்திப்படுத்துவதற்கு என்று தெரியவில்லை.
பாம்பு கடிக்கும் போது க்ளீன் ஷேவ் தோற்றத்தில் இருக்கும் ராம் சரண் கொஞ்ச நேரத்திலேயே போலீஸ் யூனிஃபார்மில் வரும் காட்சியில் தாடியுடன் சல்யூட் அடிப்பது என ஆங்காங்கே கன்டினியூட்டி மிஸ்ஸிங்.
ஆனாலும் மூன்று மணிநேரம் நம்மை தாக்குப்பிடிக்க வைப்பது பிரம்மாண்டம், சீறிப் பாயும் புலிகள், அட்டகாசமான அசத்தலான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் அமர்க்களங்கள்.
படத்தின் விளம்பரங்களில் ’Rise, Roar, Revolt’ என மூன்று R-களுக்கும் ஒரு பக்காவான கமர்ஷியல் படத்திற்கான வார்த்தைகளைத் தேடிப்பிடித்து போட்டிருந்தாலும், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். அறிமுக காட்சிகளுக்கு fiRe & wateR என்று காட்சிப்படுத்தியிருப்பது ராஜமெளலியின் டச்.. மூன்று மணிநேரம் உட்கார வேண்டுமா என்றால் எஸ்.எஸ்.ஆர் என்ற ப்ராண்ட்டிற்காக தாராளமாக உட்காரலாம்.
’RRR’- Reall Refresh Retreat!