முன்பெல்லாம் ‘இந்த மனிதர் இங்கிருந்தால் தொல்லை’ என்று கவர்னர் பதவி கொடுத்து வேறு மாநிலத்துக்கு அனுப்புவார்கள். இப்போது ‘அந்த மாநிலத்துக்கு போய் தொல்லை கொடு’ என்றே கவர்னராக அனுப்பப்படுகிறார்கள்!
நாடாளுமன்றத்தில் டி.ஆர். பாலு, தமிழக கவர்னரை கண்டித்து முழங்கிக் கொண்டிருந்ததை தொலைக்காட்சி செய்தி சேனல் ஒன்றில் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தபோது ஜன்னலுக்கு வெளியே திடீரென்று கவனம் போயிற்று. ஆடு ஒன்று காய்கறி செடியை படுவேகமாக மேய்ந்து கொண்டிருந்த காட்சி தெரிந்தது! ஆட்டுக்கு லேசாக தாடி இருந்தது! ‘ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையா’ என்கிற அறிஞர் அண்ணாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது! அதில் இழையோடிய நகைச்சுவை சிரிப்பு மூட்டியது!
குருசாமி முதலியார் ரோடில் கல்கி கார்டன்ஸ் – கல்கி அலுவலகம் – இருந்தது. அங்கே ஒரு மாலை நேரத்தில் அண்ணா கூறிய இந்த வார்த்தை பற்றி காசா சுப்பாராவ் சொல்ல, ராஜாஜி ரசித்து சிரித்ததாக செய்தி உண்டு! அண்ணாவின் சாதுரியமான பேச்சு மீது ராஜாஜிக்கு மரியாதை இருந்தது. அப்போது அண்ணா – ராஜாஜி நட்பு தொடங்கிவிட்டது!
ஆட்டுக்கு தாடி எந்த விதத்தில் உதவுகிறது? கேள்விக்குறிதான்! மாநில வளர்ச்சிக்கு கவர்னர் பங்கு என்ன? இதுவும் கேள்விக்குறியாகத்தானே இருக்கிறது?
தமிழகம் சந்தித்த கவர்னர்கள் பற்றி நினைவுகள் வரிசையாக வந்தது!
நிறைய கவர்னர்களில் ஸ்ரீ ஸ்ரீ பிரகாசாதான் தமிழர்களால் மறக்க முடியாதவர்! ராஜாஜி, காமராஜ் முதல்வராக இருந்தபோது கவர்னராக இருந்தார். நேருவின் உற்ற நண்பர்.
நேருவின் கடைசி காலத்தில் மகாராஷ்டிரா கவர்னராக பிரகாசா இருந்தார். நேரு, பம்பாய் வந்து இவருடன் ஓய்வு எடுத்து சில நாட்களை கழித்தார்! நேருவும் அவரும் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியானது. நேருவின் முகம் ஒரு பக்கம் சற்று வீக்கமாக இருந்தது!
இங்கே இருந்தபோது பிரகாசா தமிழர்களைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டார். தி.மு.க. வளர்வதை அறிந்தவராக, அண்ணாவை சந்திக்க கூட விரும்பினார்.
‘வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது’ என்ற தி.மு.க. கோஷம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. பிரகாசா தமாஷாக, “இந்திய வரைபடத்தை சுவற்றில் தொங்கவிட்டுப் பார்த்தால் அப்படி தெரிகிறது. தெற்கை வடக்கு அமுக்கியது போல தெரியும். கீழே விரித்து வைத்துப் பார்த்தால் வடக்கும் தெற்கும் சமமாக இருப்பது தெரியும்!” என்றார்.
பிரகாசா, தி.நகர் வாணி மகாலில் ஆக்கூர் அனந்தாச்சாரி என்கிற தேசபக்தர் நடத்திய மகாகவி பாரதி விழாவில் ஒரு தடவை தலைமை வகித்தார். ஆக்கூரார் இலக்கியவாதிகளைத் தவிர யாரையும் அழைக்க மாட்டார்! பிரகாசா ஏன் வந்தார்? பாரதி பற்றி பிரகாசா அழகாக பேசினார். ஒரு தகவலும் இருந்தது. பிரகாசாவின் தந்தை பெரும் சம்ஸ்கிருத மேதை! காசியில் அவர் தந்தையிடம்தான் மகாகவி பாரதி சம்ஸ்கிருதம் கற்றார்! காசியில் பாரதி இருந்த வீடு இருக்கிறது.
பிரகாசா விடை பெற்ற பிறகு நீண்ட காலம் புது கவர்னர் நியமிக்கப்படவில்லை! பிரதம நீதிபதிதான் கவர்னர் பணி பார்த்து வந்தார்.
“மத்திய அரசு எந்த கவர்னர் பெயரை சொன்னாலும் முதலமைச்சர் காமராஜ் ‘வேண்டாம் அவர்’ என்கிறார். அதுதான் காரணம்” என்று ராஜாஜியின் கூற்றை ‘கல்கி’ தலையங்கமாக எழுதியது! அப்போது மாநில முதல்வருக்கு அவ்வளவு செல்வாக்கு!
கடைசியில் ஏ.கே. ஜான் என்பவர் கவர்னராக இருந்தார்! காமராஜ் எதிர்ப்புகளை குறிப்பிட்டு ‘குமுதம்’ கடைசியில் இவர்தான் கிடைத்தாரா?’ என்று தலையங்கம் தீட்டியது!
இந்த செய்திகள் வந்த நேரத்தில்தான், ‘கவர்னரே எதற்கு – ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவைதானா?’ என்று அறிஞர் அண்ணா கேட்டார்!
‘தேவைதான்’ என்று கூறும்படியாக எந்த கவர்னர்களும் புதுமையாக – மக்கள் தொண்டு ஆற்றும் காரியம் எதுவும் செய்துவிடவில்லை!
வெள்ளைக்கார துரைமார்கள் சிலர் ஆற்றிய பணி கூட நம் கவர்னர்கள் யாரும் செய்யவில்லை!
கே.கே.ஷா என்கிற கவர்னரை மறக்க முடியாது. கலைஞர் முதல்வராக இருந்தபோது அவர் கவர்னர்! தன்னை ‘கலைஞர் கருணாநிதி ஷா’ என்று ‘கே.கே.’ இனிஷியலுக்கு விளக்கம் அளித்தார். ஆனால், அவர்தான் மத்திய அரசு உத்தரவின்படி கலைஞர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்து, கலைஞரை காலை வாரிவிடும் ஷாவாக மாறினார்!
மோகன்லால் சுகாடியா என்கிற கவர்னருக்கு, வட இந்திய ‘பெரிய’ வெற்றிலை இல்லாமல் முடியாது! தினமும் இவருக்கு விமானத்தில் வெற்றிலை வந்ததுதான் இவரைப் பற்றி தெரிந்த விஷயம்!
பட்வாரி என்கிற கவர்னர் காந்தியவாதி! கிண்டி மாளிகையில் அசைவம் சமைக்க தடை போட்டார். இயற்கை முறையில் ‘ரெஸ்ட் ரூம்’ இவருக்காக மாளிகை ஒட்டி இருந்த காட்டு பகுதியில் தட்டி வைத்து மறைத்து தயாரானது! அதுதான் அவர் டாய்லட்! அப்போது ஜனாதிபதி சஞ்சீவரெட்டி, கவர்னர் மாளிகையில் தங்க மறுத்து கன்னிமாரா ஓட்டலில் தங்கினார்!
கவர்னர் பர்னாலா மட்டுமே அன்று முதல்வராக இருந்த கலைஞரிடம் மரியாதை காட்டி, ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு கட்டளையிட்டபோது மறுத்தார்! கவர்னராக இருந்த சென்னாரெட்டி – முதலமைச்சர் ஜெயலலிதா உறவு தெரிந்ததுதான்! கவர்னர் மீது ‘பயங்கர’ குற்றச்சாட்டையே கூறினார் ‘ஜெ’. கவர்னர் மவுனம்.
வேறு என்ன கவர்னர்களைப் பற்றி பெரிதாக நினைவுக்கு வருகிறது?
முன்பெல்லாம் ‘இந்த மனிதர் இங்கிருந்தால் தொல்லை’ என்று கவர்னர் பதவி கொடுத்து வேறு மாநிலத்துக்கு அனுப்புவார்கள். இப்போது ‘அந்த மாநிலத்துக்கு போய் தொல்லை கொடு’ என்றே கவர்னராக அனுப்பப்படுகிறார்கள்!
நமது புதிய கவர்னர் ரவி, இளமையாக – கம்பீரமாக இருக்கிறார். நிமிர்ந்து உட்கார்ந்து வருவோருடன் பேசுகிறார்!
‘ரவி’ என்றால் சூரியனை குறிக்கும் சொல். ஆனால், உதயசூரியன் ஆட்சியுடன் உறவு ஒன்றும் சுமுகமாக இல்லையே! ‘குத்தி காட்டி’ பேசுவதில் கவர்னர் ரவி – சூடாக இருக்கிறார்.
கலைஞரிடம் அரசியல் கற்ற முதல்வர் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்.
மற்றபடி கவர்னர்கள் மாநிலத்துக்கு அருந்தொண்டாற்றி, விடைபெறும்போது மக்கள் கண்ணீருடன் வழி அனுப்பி வைத்தார்கள் என்று கேள்விப்பட்டதே இல்லையே?
ஆட்டுக்கு தாடி இயற்கையாக வளர்ந்து, அதற்கு ஏதாவது உதவலாம், நாட்டுக்கு கவர்னர்?
அறிஞர் எழுப்பிய கேள்வி ஆயிற்றே? அர்த்தம் பொதிந்தது. விடையே கேள்வியில் இருக்கும்படியான கேள்வி!